ஜாவா, யெஸ்டி, பிஎஸ்ஏ பைக் உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்! உதிரிபாகங்கள் வாங்குவது இனி எளிதாகும்
ஜாவா (Jawa), யெஸ்டி (Yezdi), பிஎஸ்ஏ (BSA) மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம். இந்த மூன்று பிராண்டுகளின் அசல் உதிரிபாகங்களை வழக்கமான டீலர்ஷிப் மையங்களைத் தாண்டியும் வாங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட வினியோகக் கட்டமைப்பை நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் பைக் உரிமையாளர்கள் மட்டுமின்றி, தனியார் மெக்கானிக்குகள் மற்றும் சர்வீஸ் மையங்களும் பயனடைய உள்ளன.
வழக்கமாக பைக்கில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்குத் தேவையான உதிரிபாகங்களை பொருத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டி உள்ளது. மேலும், உதிரிபாகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, டீலர்ஷிப் வசதிகள் குறைவாக உள்ள சிறிய நகரங்களில் இந்தப் பிரச்சினை அதிகமாக இருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, அசல் உதிரிபாகங்கள் கிடைப்பதை எளிதாக்கவும், பழுதுபார்க்கும் பணிக்காக பைக்கை நீண்ட நாட்கள் நிறுத்தி வைக்கும் சூழலைக் குறைக்கும் வகையிலும் இந்த முக்கிய அறிவிப்பை கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய வினியோகக் கட்டமைப்பின் கீழ், நாடு முழுவதும் பல முக்கியமான இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் செயல்பட உள்ளனர். நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வளர்ந்து வரும் சிறிய நகரங்களுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான உதிரிபாகங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் எளிதாகும்.
இதனால் ஒவ்வொரு முறையும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை தொடர்புகொண்டு உதிரிபாகங்களை ஆர்டர் செய்து காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். அங்கீகரிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் மூலம் உதிரிபாகங்களைப் பெறுவதால், மெக்கானிக் கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை கிடைககும். இருப்பினும், அனைத்து உதிரிபாகங்களும் எல்லா இடங்களிலும் உடனடியாகக் கிடைக்கும் என்று அந்நிறுவனம் உறுதியளிக்கவில்லை.
நம்பிக்கையை அதிகரிக்கத் திட்டம்
ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ ஆகிய மூன்று பிராண்டுகளையும் நிர்வகிக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த உரிமையாளர் அனுபவத்தையும் மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது.
இதுகுறித்து கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் அனுபம் தரேஜா கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு எளிதாக அசல் உதிரிபாகங்கள் கிடைப்பது சிறந்த உரிமையாளர் அனுபவத்தின் முக்கியமான விஷயமாக இருக்கும் என்றும், வினியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் அவற்றை அதிகமான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் கருத்துகளைக் கேட்டு, அவர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஒரு பைக்கை வாங்கும்போது அதன் விலை, வடிவமைப்பு, செயல்திறன் போன்ற அம்சங்களுக்கு வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், பைக்கை வாங்கிய பிறகு அதற்கான உதிரிபாகங்கள் எளிதாகக் கிடைக்கிறதா, சர்வீஸ் செய்ய அதிக நாட்கள் காத்திருக்க வேண்டுமா என்பதும் நீண்டகாலப் பயன்பாட்டில் முக்கியமான விஷயங்களை பார்க்க வேண்டி உள்ளது.
குறிப்பாக, ஜாவா, யெஸ்டி, பிஎஸ்ஏ போன்ற பிராண்டுகளின் பைக்குகளை வாங்க விரும்புபவர்களுக்கு, விற்பனைக்குப் பிந்தைய சேவையின் தரம் நம்பிக்கையை அதிகரிக்கும். இந்தப் புதிய வினியோகக் கட்டமைப்பு நடைமுறையில், அசல் உதிரிபாகங்கள் விரைவாக கிடைப்பதையும் சர்வீஸ் நடைமுறைகள் வேகத்தையும் மேம்படுத்தினால், ஏற்கெனவே பைக்குகளை வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி, புதிதாக வாங்கத் திட்டமிடுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


