குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஒரு மாசம் பயன்படுத்தினாலும் 100 ரூபாய் தான் செலவாகும்!
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குத் தான் மவுசு கூடிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் வாங்கிச் செல்கிறார்கள். இந்த நேரத்தில் முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தவிர்த்து, மற்ற சில சிறிய நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பற்றியும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதற்காகத் தான் இந்தக் கட்டுரை.
இங்கே நாம் பார்க்கப் போவது ஜாய் இ-பைக் (Joy e-bike) பிராண்டின் நீமோ (Neo) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பற்றித் தான். வார்டுவிஸார்டு இன்னோவேஷன் அண்டு மொபிலிட்டி லிமிடட் என்ற நிறுவனம் தான் ஜாய் இ-பைக் பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. சிறிய நிறுவனமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் விரும்பு்ம வகையிலான தயாரிப்புகளை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் சுமார் 10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் பைக் மாடல்களை ஜாய் இ-பைக் பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகிறது வார்டு விஸார்டு. நாம் பார்க்கும் நீமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது பார்ப்பதற்கே மிகவும் கிளாஸியான மற்றும் அட்டகாசமான டிசைனைக் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2024 டிசம்பரில் தான் இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம்.
இந்த நீமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 99,000 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஜாய் இ-பைக். அந்நிறுவனத்தின் இரண்டாவது விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்த நீமோ இருக்கிறது. மேலும், போதுமான வசதிகள் மற்றும் போதுமான ரேஞ்சையும் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக நீமோ இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் 2.9 kWh பேட்டரி பேக் தேர்வை ஜாய் இ-பைக் கொடுத்துள்ளது. எக்கோ, ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோடுகளைக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டரானது, இந்த பேட்டரி பேக்கின் உதவியுடன் எக்கோ மோடில் சிங்கிள் சார்ஜில் 130 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம். இந்த பேட்டரியை 0-100 சதவீதம் வரை 5 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.5 kW DC ஃப்ரஷ்லெஸ் (BLDC) ஹப் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் மணிக்கு 65 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது இந்த நீமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்தாலும் மிகவும் குறைவாக 85 கிலோ எடையையே இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது.
மேலும், சீட்டின் உயரமும் 740 மிமீ ஆக மட்டுமே இருப்பதால் அனைத்து தரப்பினரும் மிகவும் எளிதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைக் கையாளலாம். இந்த சாலைகளுக்குப் போதுமான வகையில் 160 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது. இரண்டு பக்கமும் 12 இன்ச் அலாய் வீல்கள் டியூப்லெஸ் டயர்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த எலெக்ட்ரக் ஸ்கூட்டரின் முன்பக்கமும்/ பின்பக்கமும், டெலிஸ்கோபிக் ஃபோர்க்/ டூயல் ஷாக் அப்சார்பர்கள் சஸ்பென்ஷன் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்காக இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகளுடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஸ்கூட்டருக்குத் தேவையான பிரேக்கிங் பவர் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.
ஸ்கூட்டரின் அனைத்து விளக்குகளுமே LED-யாகவே கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்பக்கம் ப்ரொஜெக்டார் LED முகப்பு விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 இன்ச் கலர் TFT டிஸ்பிளேவும் இந்த நீமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 28 லிட்டர்கள் பூட் ஸ்பேஸ், ஆண்டி தெஃப்ட் அலாரம், கனெக்டிவிட்டி வசதிகள் ஆகிய மேம்பட்ட அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 1 ஆண்டு வரை வாரண்டியும், இதன் பேட்டரி பேக்கிற்கு மூன்று ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ வரையிலான வாரண்டியும் வழங்குகிறது ஜாய் இ-பைக். இந்த ஸ்கூட்டரைப் பயன்படுத்துவதற்கு கிமீ-க்கு 17 பைசா மட்டுமே செலவாகும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 20 கிமீ ஸ்கூட்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மாதம் 30 நாளும் பயன்படுத்தினாலும் 104 ரூபாய் தான் செலவாகுமாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வசதிகளை வைத்துப் பார்க்கும் போது இந்த ஸ்கூட்டர் மிகச் சிறப்பான தேர்வாகவே தெரிகிறது. எனினும் பரீட்சியமில்லாத பிராண்டு என்பது இந்த நீமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு ஒரு தடையாக இருக்கலாம். உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே ஜாய் இ-பைக் பிராண்டு ஷோரூம் இருந்தால், நீங்கள் ஒரு விசிட் அடிக்கலாம். அதற்கு வொர்த்தான ஸ்கூட்டராகவே இந்த நீமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கிறது.
நகரப் பயன்பாட்டிற்கு அல்லது குறைந்த தூரப் பயன்பாட்டிற்கு ஏற்ற சிறப்பான ஸ்கூட்டராகவே இந்த ஜாய் இ-பைக் நீமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கிறது. ஒரே ஒரு வேரியன்டாக மட்டுமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. எனவே 99,000 ரூபாய்க்கு மேலே குறிப்பிட்டிருக்கும் அம்சங்களை கண்டிப்பாக நீங்கள் பெற முடியும்.


Click it and Unblock the Notifications