டிவிஎஸ் அப்பாச்சிக்கு போட்டியா விற்கப்படும் கவாஸாகி பைக்... இந்த ஜூலை மாதத்தில் வாங்கினால் ரூ.81,000 மிச்சம்!
கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் அதன் விலை குறைவான அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளான வெர்சிஸ்-எக்ஸ் 300 -க்கு ஜூலை மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்தும், வெர்சிஸ்-எக்ஸ் 300 என்கிற அட்வென்ச்சர் பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் அதன் பைக்குகளுக்கு அவ்வப்போது சலுகைகளை அறிவிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்திலும் வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக் உள்பட விலையுயர்ந்த நிஞ்சா பைக்குகளுக்கு பல இலட்ச ரூபாய் மதிப்பிலான சலுகைகளை அறிவித்து இருந்தது. அந்த நிஞ்சா பைக்குகளுக்கான அந்த ஜூன் மாத சலுகைகள் அப்படியே இந்த ஜூலை மாதத்திற்கும் தொடரப்பட்டன.

ஆனால், வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கு இந்த ஜூலை மாதத்தை முன்னிட்டு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என நிஞ்சா பைக்குகளுக்கான சலுகைகளை பற்றி நமது தளத்தில் பார்த்த போது குறிப்பிட்டு இருந்தோம். இந்த நிலையில், வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கும் கவாஸாகி நிறுவனம் தற்போது சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.35,000 பணம் தள்ளுபடி வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரூ.35,000 பணம் தள்ளுபடி மூலம், ரூ.3.49 லட்சமாக இருந்த இந்த விலை குறைவான கவாஸாகி அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ரூ.3.14 லட்சமாக குறைந்துள்ளது. இந்த பணம் தள்ளுபடியை விட முக்கியமாக, வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கிற்கு ரூ.46,000 வரையில் மதிப்பிலான ஆக்ஸஸரீயை இலவசமாக வழங்குவதாகவும் கவாஸாகி அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஜூலை மாதத்தில் வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் பைக்கிற்கு இரு பக்கங்களிலும் வழங்கப்படும் பெட்டிகள் அல்லது செண்டர் ஸ்டாண்டை தங்களது விருப்பத்திற்கு ஏற்றப்படி இலவசமாக பெறலாம். இது இல்லாமல், வாடிக்கையாளர்கள் எளிதாக வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை சொந்தமாக்க குறைந்த முன்தொகை உடன் நிதி திட்டங்களையும் கவாஸாகி வழங்கி வருகிறது.
கவாஸாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதில் 296சிசி, லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 38.8 பிஎச்பி மற்றும் 26 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
மென்மையான பவர் டெலிவிரி மற்றும் சவுகரியமான தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றதாக விளங்கும் இந்த என்ஜின் உடன் சவுகரியமான சஸ்பென்ஷன் செட்-அப் இந்த பைக்கில் வழங்கப்படுவதால், கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மட்டுமின்றி, தொலைத்தூர பயணங்களுக்கும் இந்த பைக் ஏற்றதாக இருக்கும். மேலும், இந்த பைக்கில் இன்றைய கால அதிநவீன எலெக்ட்ரானிக் பாகங்களும் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், கவாஸாகியின் சற்று அதிகப்படியான சர்வீஸ் & பராமரிப்பு செலவுகளையும் ஏற்க தயாராக இருப்பவர்கள் இந்த வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கை தாராளமாக வாங்கலாம். விற்பனையில் இந்த கவாஸாகி அட்வென்ச்சர் பைக்கிற்கு KTM நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மற்றும் TVS அப்பாச்சி RTX பைக்குகள் போட்டியாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்த சலுகை ஆனது இந்த ஜூலை முடியும் வரையில் மட்டுமே கிடைக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக அடுத்தடுத்த மாதங்களில் சலுகைகளை வழங்குவதன் மூலம், வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கின் மார்க்கெட்டை இந்தியாவின் விலை குறைவான அட்வென்ச்சர் டூரர் பைக் பிரிவில் பெரிதுப்படுத்த கவாஸாகி நிறுவனம் விரும்புவதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications