ரூ.8.63 லட்சத்தில் புதிய வண்ணத் தேர்வில் கவாஸாகி வெர்சிஸ் 650 அறிமுகம்!!
இந்தியாவில் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள்களுக்கு தனி வரவேற்பு இருந்து வரும் நிலையில், கவாஸாகி நிறுவனம் தனது 2027ம் ஆண்டு பதிப்பாக வெர்சிஸ் 650 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.8.63 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் ஆண்டுக்கான அப்டேட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் இடம்பெறவில்லை என்றாலும், புதிய வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 2027 கவாஸாகி வெர்சிஸ் 650 தற்போது கேண்டி லைம் க்ரீன் மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் என்ற பச்சை- கருப்பு வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் வழங்கப்பட்ட வண்ணத் தேர்வுக்கு பதிலாக இந்த புதிய நிறம் இடம்பெற்றுள்ளது. இதைத் தவிர பைக்கின் வடிவமைப்பு, இன்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

எஞ்சின்
புதிய வெர்சிஸ் 650 பைக்கில் பேரலல் ட்வின் எஞ்சின் கொண்ட லிக்யூடு கூல்டு 649cc பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎஸ் பவரையும், 61 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட பயணங்களின்போது கியர் மாற்றங்களை மென்மையாக மேற்கொள்ள உதவும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் வசதியும் இடம்பெற்றுள்ளது.
நகரப் பயன்பாடு மட்டுமின்றி நெடுஞ்சாலை மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற வகையில் குறைந்த மற்றும் நடுத்தர வேகங்களில் நல்ல டார்க் ரெஸ்பான்ஸ் கிடைக்கும் வகையில் எஞ்சின் டியூன் செய்யப்பட்டுள்ளதாக கவாஸாகி நிறுவனம் தெரிவிக்கிறது.
சஸ்பென்ஷன்
வெர்சிஸ் 650 பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் நீண்ட பயணத்திற்கு ஏற்ற சஸ்பென்ஷன் அமைப்பை கூறலாம். முன்புறத்தில் 41மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் 150மிமீ டிராவலை வழங்குகிறது. இதனால், கரடுமுரடான சாலைகளையும் எதில்கொள்ள முடியும். பின்புறத்தில் உள்ள மோனோஷாக் 145மிமீ டிராவலுடன் வருகிறது. இதில் ரிமோட் முறையில் கட்டுப்படுத்தும் ப்ரிலோடு அட்ஜஸ்ட்மென்ட் வசதியும் உள்ளது.
புதிய கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கில் 17 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 120/70 ZR17 டயரும், பின்புறத்தில் 160/60 ZR17 டயரும் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் இரட்டை 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 250மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இவற்றுடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படுகிறது.
நீண்ட தூர பயணங்களை கருத்தில் கொண்டு வெர்சிஸ் 650 பைக்கில் 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் கெர்ப் எடை 220 கிலோவாக உள்ளது. சீட் உயரம் 845மிமீ என்பதால் குறைந்த உயரம் கொண்டவர்களுக்கு இதை கையாளும்போது சற்று சிரமம் இருக்கும். அதேநேரத்தில் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்திய சாலைகளுக்கு போதுமானதாக இருக்கும்.
புதிய மாடலில் 4.3 அங்குல கலர் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இடம்பெற்றுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியும் உள்ளது. மேலும் கவாஸாகி டிராக்ஷன் கன்ட்ரோல், அட்ஜஸ்ட்டபிள் விண்ட்ஸ்கிரீன் மற்றும் முழுமையான எல்இடி லைட்டுகள் ஆகியவை தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் வெர்சிஸ் 650 பைக்கின் போட்டியாளர்களில் ஹோண்டா என்எக்ஸ்50 பைக் முக்கியமான ஒன்றாக உள்ளது. இருப்பினும் 649cc பேரலல்-ட்வின் எஞ்சின், அதிக டிராவல் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு, 21 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் டூரிங் சார்ந்த அமைப்பு ஆகியவை வெர்சிஸ் 650 பைக்கை நீண்ட தூர பயணங்களை விரும்புபவர்களுக்கு முக்கியத் தேர்வாக வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications

