ரூ.9.99 லட்சத்தில் புதிய கவாஸாகி இசட்900 பைக் அறிமுகம்... 124 எச்பி பவர், அதிநவீன வசதிகள்!
அதிக திறன் கொண்ட பிரீமியம் பைக்குகளை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக உள்ள கூடுதல் அம்சங்களுடன் கவாஸாகி இசட்900 பைக் (MY27 Kawasaki Z900) 2027ம் ஆண்டு மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள், ஆக்ரோஷமான தோற்றம், சக்திவாய்ந்த நான்கு சிலிண்டர் எஞ்சின் ஆகியவற்றுடன் இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த புதிய கவாஸாகி இசட்900 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இசட் சீரிஸ் பைக்குகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், புதிய மாடலில் பாதுகாப்பு மற்றும் ஓட்டுதல் அனுபவத்தை மேம்படுத்தும் பல மின்னணு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதன் டெலிவிரி பணிகளும் துவங்கி உள்ளது.

எஞ்சின் விபரம்
புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 948 சிசி, லிக்யூடு கூல்டு சிஸ்டத்துடன் கூடிய எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 9,500 ஆர்பிஎம்மில் 124 எச்பி பவரையும், 7,700 ஆர்பிஎம்மில் 98 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச் வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த எஞ்சின் விரைவான ஆக்சிலரேஷனையும், நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சீரான பவர் டெலிவரியையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரச் சாலைகளில் மட்டுமின்றி, வளைவுகள் நிறைந்த சாலைகளிலும் பைக்கை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இதன் செயல்திறன் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எலக்ட்ரானிக் த்ராட்டில் தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளது.

புதிய வடிவமைப்பு
கவாஸாகியின் பிரபலமான சுகோமி (Sugomi) வடிவமைப்புத் தத்துவத்தை இந்த பைக் தொடர்ந்து பின்பற்றுகிறது. முன்புறம் தாழ்வாகவும், பின்புறம் உயர்ந்த தோற்றத்துடனும் அமைந்துள்ள இதன் வடிவமைப்பு, ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளுக்குரிய தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. முன்புறத்தில் மூன்று எல்இடி விளக்குகளும், பின்புறத்தில் நவீன தோற்றத்திலான எல்இடி விளக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.
சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, முன்புறத்தில் 41 மிமீ இன்வெர்டட் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. முன்புற, பின்புற சஸ்பென்ஷன்களை தேவைக்கேற்ப அமைப்பை மாற்றும் வசதி இருக்கிறது. மேலும், மேம்படுத்தப்பட்ட சேஸிஸ் வடிவமைப்பும் புதிய டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் க்யூ5ஏ டயர்களும் வளைவுகளில் சிறந்த தரைப்பிடிப்புடன் செல்ல உதவும்.
அதிநவீன வசதிகள்
புதிய இசட்900 பைக்கில் 5 அங்குல முழு வண்ண டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனை இணைத்து ரைடாலஜி செயலி மூலம் பல வசதிகளைப் பயன்படுத்தலாம். டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், குரல் வழிக் கட்டுப்பாடு, எலக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளை பெற முடியும். மேலும், இரு திசைகளிலும் செயல்படும் குயிக் ஷிஃப்டர் வசதி மூலம் கிளட்சைப் பயன்படுத்தாமல் கியரை மாற்ற முடியும். நீண்ட தூரப் பயணங்களின்போது க்ரூஸ் கண்ட்ரோல் வசதி ஓட்டுநரின் வலது கையில் ஏற்படும் சோர்வைக் குறைக்க உதவுகிறது.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்
இந்த பைக்கில் ஐஎம்யூ அடிப்படையிலான மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. கவாஸாகி டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் மேனேஜ்மென்ட் ஃபங்ஷன் மற்றும் பல்வேறு ரைடிங் மோடுகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட், ரோடு, ரெயின் ஆகிய ரைடிங் மோடுகளுடன், தேவைக்கேற்ப அமைப்புகளை மாற்றும் ரைடிங் மோடும் உள்ளது.
பிரேக்கிங்கிற்காக முன்புறத்தில் இரண்டு 264 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 216 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் நான்கு பிஸ்டன் காலிப்பர்களும், இரு சக்கரங்களிலும் ஏபிஎஸ் வசதியும் இடம்பெற்றுள்ளன. இவை வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், சவாலான சாலைகளில் நம்பிக்கையுடன் ஓட்டுவதற்கும் உதவுகின்றன.
வண்ணங்கள் மற்றும் விலை
புதிய கவாஸாகி இசட்900 பைக் மாடலில் எபனி மற்றும் மெட்டாலிக் கார்பன் கிரே, பேர்ல் பிளிஸார்ட் ஒயிட் மற்றும் பிளாஸ்மா லைம் கிரீன் என இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ள இந்த 2027 மாடலுக்கான டெலிவிரிப் பணிகளும் இன்று முதல் துவங்கி இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
புதிய கவாஸாகி இசட்900 பைக்கில் சக்திவாய்ந்த எஞ்சினுடன், க்விக் ஷிஃப்டர், க்ரூஸ் கண்ட்ரோல், கார்னரிங் மேனேஜ்மென்ட் போன்ற நவீன வசதிகளும் கிடைப்பது முக்கிய விஷயங்களாக குறிப்பிடலாம். செயல்திறனையும் தொழில்நுட்பத்தையும் விரும்பும் பிரீமியம் பைக் வாடிக்கையாளர்களை இந்த மாடல் நிச்சயமாக கவரும்.


Click it and Unblock the Notifications


