அடிமாட்டு விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் மொபெட்.. இதனை ஏன் நீங்கள் வாங்க வேண்டும்?
சைக்கிள் வேண்டாம். பைக் அல்லது ஸ்கூட்டரும் வேண்டாம். இரண்டிற்கும் இடைப்பட்டு, ரொம்ப வேலை கொடுக்காமல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லப் பயன்படுத்தும் வாகனம் ஏதாவது இருக்கிறதா? இருக்கிறது, சைக்கிள் மற்றும் ஸ்கூட்டருக்கு இடைப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் வாகனமாக இதனைச் சொல்லலாம். அது வேறெதுவும் இல்லை, கோமாகியின் XR1 (Komaki XR1) எலெக்ட்ரிக் மொபெட் தான்.
இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் ஒன்றாக கோமாகி XR1 இருக்கிறது. சைக்கிளுக்கு மேலாக, பைக் அல்லது ஸ்கூட்டருக்குக் கீழாக ஒரு இருசக்கர வாகனத்தை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த இருசக்கர வாகனம் சிறப்பான ஒன்றாக இருக்கும். கடந்த ஆண்டு தான் இந்த XR1 எலெக்ட்ரிக் மொபெடை இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம்.

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷ் பயன்படுத்தும் சைக்கிள்/ மொபெட் போன்ற வாகனம் தான் இது. திரைப்படத்தில் அவர் பயன்படுத்துவது என்ஃபீல்டு மோஃபா (Enfield Mofa) என்ற மோட்டார்சைக்கிள் மாடல். இது அதனை விட கொஞ்சம் மேம்பட்ட ஒன்று எனக் கூறலாம். மேலும், அது எரிபொருளில் இயங்கும் நிலையில், இந்த XR1 மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதன் பயன்பாடு எளிதாகவும், செலவு குறைவாகவும் இருக்கும்.
இந்த எலெக்ட்ரிக் மொபெட்டில் பெடல்களும் கொடுக்கப்பட்டிருப்பதால், பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டாலும் பெடல் செய்து கொண்டே வீட்டிற்கு வந்துவிடலாம். மேலும், இரண்டு நபர்கள் சொகுசாக அமரும் வகையில் இரண்டு குஷன் சீட்களையே இந்த வாகனத்தில் கோமாகி கொடுத்திருக்கிறது. இதனை ஒரு மேம்பட்ட எலெக்ட்ரிக் சைக்கிள் எனவும் நாம் கூறலாம்.

இரவு நேரங்களிலும் பாதுகாப்பாக பயணம் செய்யும் பொருட்டு, முகப்பு விளக்குகள், பின்பக்க விளக்குகள் மற்றும் இன்டிகேட்டர்கள் ஆகிய அம்சங்கள் அனைத்தையும் இந்த எலெக்ட்ரிக் மொபெட்டில் கொடுத்திருக்கிறது கோமாகி. பிராக்டிகலாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் மொபெட்டின் முன்பக்கம் பேஸ்கட் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொகுசான பயணத்தற்காக சிறப்பான செயல்பாட்டைக் கொண்ட சஸ்பென்ஷன் செட்டப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த XR1 எலெக்ட்ரிக் மொபெட்டின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கிமீ முதல் 80 கிமீ வரை மின்சாரத்திலேயே பயணம் செய்ய முடியும் என கோமாகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பையே இந்த எலெக்ட்ரிக் மொபெட் கொண்டிருக்கிறது.
குறைவான வேகத்தில் பயணம் செய்யும் வகையிலான இருசக்கர வாகனம் என்பதால் இதனைப் பயன்படுத்த லைசன்ஸ் எதுவும் தேவையில்லை. மேலும், இதனை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மின்சாரத்தைக் கணக்கிட்டால் வெறும் 8 முதல் 10 ரூபாய் வரை மட்டுமே செலவாகும்.
இந்த கோமாகி XR1 எலெக்ட்ரிக் மொபெட்டை தற்போது 34,499 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட போது 29,999 ரூபாய் என்ற விலையிலேயே வெளியானது. ஒரே ஆண்டின் இதன் விலையை 4,500 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது கோமாகி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் ஒரு சிறிய கம்யூனிட்டுகள் ஓட்டுவதற்கான சிறிய வாகனத்தைத் தேடுபவர்களுக்கு இந்த XR1 எலெக்ட்ரிக் மொபெட் சிறந்த தேர்வாக இருக்கும். கொஞ்சம் கூடுதலாக பணம் செலவழித்தால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே வாங்கிவிடலாம் தான். ஆனால் குறைவான நகரும் பாகங்களைக் கொண்டிருப்பதால் இந்த XR1 மொபெட் பெரிய அளவில் செலவு வைக்காது. மேலும், மின்சாரத்தில் இல்லையென்றாலும் பெடல் செய்து கொள்ளலாம் என்பது இதன் பெரிய பிளஸ் பாயிண்ட்.
தலைப்பில் 'ஏன்நீங்கள்' என சேர்ந்து இருந்தது 'ஏன் நீங்கள்' என பிரித்து மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications