சூப்பர் டியூக் 1390 ஜிடி இவோ அறிமுகம்... பைக் உலகையே மிரட்ட வரும் புதிய கேடிஎம் அரக்கன்!
பெர்ஃபார்மென்ஸ ரக பைக் தயாரிப்பதில் உலகளவில் புகழ்பெற்றுள்ள கேடிஎம் நிறுவனம், தனது புதிய 1390 சூப்பர் டியூக் ஜிடி இவோ (KTM 1390 Super Duke GT Evo) மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இத்தாலியில் நடைபெறும் 2026 இஐசிஎம்ஏ (EICMA) மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய மாடல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் 1390 சூப்பர் டியூக் ஜிடி மாடலைவிட கூடுதல் வசதிகளுடன் இந்த புதிய இவோ மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீண்ட தூரப் பயணங்களையும் அதிவேக ஓட்டத்தையும் விரும்பும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்பம், செயல்திறன், பாதுகாப்பு ஆகியவற்றில் பல்வேறு மேம்பாடுகளை கேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஏஎம்டி கியர்பாக்ஸ்
இந்த மோட்டார்சைக்கிளில் ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பது மிக முக்கிய சிறப்பம்சமாக இருக்கிறது. இதில் முழுமையான தானியங்கி முறையிலும், தேவைக்கேற்ப கைகளால் மேனுவலாகவும் கியர்களை மாற்றி இயக்க முடியும். இதனால் நீண்ட தூரப் பயணங்களில் ஓட்டுனர்களின் சிரமம் கணிசமாகக் குறையும்.
இதில் 1,350 சிசி திறன் கொண்ட இரண்டு சிலிண்டர்கள் அமைப்புடைய 75 டிகிரி வி-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 எச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதே எஞ்சின் தளத்தை கேடிஎம் 1390 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் இவோ மாடலும் பயன்படுத்துகிறது.

நீண்ட தூரப் பயணங்களுக்கு வசதி
நீண்ட தூரப் பயணங்களின்போது ஓட்டுனர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு ஹேண்டில்பாரை மாற்றி அமைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப விண்ட்ஸ்கிரீனை உயர்த்தவும் தாழ்த்தவும் முடியும். இதன் இருக்கை உயரம் 834 மிமீ ஆகவும், எடை 213 கிலோவாகவும் உள்ளது.
சஸ்பென்ஷன் அமைப்பிலும் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் டபிள்யூபி செமி ஆக்டிவ் டெக்னாலஜி (WP SAT) சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை டேஷ்போர்டு மூலமாகவே தேவைக்கேற்ப மாற்றியமைக்க முடியும். இதன் மூலம் சவாலான சாலைகளிலும் சிறப்பான பயண அனுபவம் கிடைக்கும்.
மேலும், முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது இதன் ஃபிரேம் உறுதித்தன்மை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கேடிஎம் தெரிவித்துள்ளது. ஃபிரேம், ஃபோர்க், டிரிபிள் கிளாம்ப் மற்றும் ஸ்விங்கார்ம் ஆகியவற்றின் இணைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அதிக வேகத்திலும் சிறப்பான நிலைத்தன்மையை எதிர்பார்க்கலாம்.
பிரேக்கிங் மற்றும் டயர்
இந்த பைக்கில் முன்புறம் மற்றும் பின்புறம் 17 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் மிச்செலின் பவர் 6 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 120/70 அளவிலும், பின்புறத்தில் 190/55 அளவிலும் டயர்கள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு பிரெம்போ ஸ்டைல்மா காலிப்பர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நவீன வசதிகள்
தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த மோட்டார்சைக்கிள் கவனம் ஈர்க்கிறது. இதில் 8.8 அங்குல டிஎஃப்டி தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்தக்கூடிய நேவிகேஷன் வசதி, யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் புதிய எல்இடி ஹெட்லைட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
ரெயின், ஸ்ட்ரீட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என நான்கு ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக டிராக் மோடு வசதியையும் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம். டிராக்ஷன் கண்ட்ரோல், குயிக் ஷிஃப்ட்டர், கார்னரிங் ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. புதிய கேடிஎம் 1390 சூப்பர் டியூக் ஜிடி இவோ மோட்டார்சைக்கிள் வரும் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேசச் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. இருப்பினும், இந்தியச் சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications


