62,000 ரூபாய் வரை கம்மி விலையில் பைக்குகள் விற்பனை.. இந்தப் புதிய பைக்குகள் எப்படி இருக்கின்றன?
350 சிசி இன்ஜின் கொண்ட 390 டியூக் மற்றும் 390 அட்வென்சர் பைக் மாடல்களை சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம். ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் நன்மைகளைப் பெறுவதற்காக இந்த சிறிய இன்ஜின் கொண்ட புதிய பைக் மாடல்களை கேடிஎம் வெளியிட்டுள்ளது. 399 சிசி இன்ஜின் கொண்ட 390 டியூக் மற்றும் 390 அட்வென்சர் பைக்குகளை வாங்கலாமா அல்லது 350 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளை வாங்கலாமா என்பதற்கான விடையை இங்கே பார்க்கலாம்.
ஏன் புதிய 350 சிசி பைக் மாடல்கள்?
விலை தான் இங்கே முக்கிய விஷயம். 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்களுக்கான ஜிஎஸ்டி வரியை முன்பு இருந்ததை விட உயர்த்தியும், 350 சிசிக்கு கீழான இன்ஜின் கொண்ட பைக் மாடல்களுக்கான வரியை குறைத்தும் மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதனால் 350 சிசிக்கு மேலான இன்ஜினைக் கொண்டிருந்த 390 டியூக் மற்றும் 390 அட்வென்சர் மாடல்களின் விலையை கேடிஎம் உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனாலேயே இந்த பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வரும் 399 சிசி இன்ஜினை மறுவடிவமைப்பு செய்து 350 சிசியாகக் குறைத்து தற்போது புதிய பைக்குகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு பைக்குகளில் எது சிறப்பானதாக இருக்கும். புதிய பைக்கில் அதிக மாற்றங்களை கேடிஎம் செய்திருக்கிறதா. குறைவான விலை என்றாலும் பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்குமா ஆகிய விவரங்களைத் தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம்.
இன்ஜின் மற்றும் விலை
கேடிஎம்மின் 399 சிசி இன்ஜினானது 8,500 rpm-ல் 46 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 39 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தது. தற்போது அதன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 350 சிசி இன்ஜினானது 8,600 rpm-ல் 41.5 hp பவர் மற்றும் 7,000 rpm-ல் 33.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இந்த இன்ஜின் மாற்றத்தைத் தவிர இரண்டு விதமான பைக்குகளிலும் வசதிகளிலோ, டிசைனிலோ கேடிஎம் வேறு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால், விலை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 350 சிசி இன்ஜின் கொண்ட '390 டியூக்' (390 Duke) பைக் மாடலை 2.77 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே இப்போது நாம் வாங்கலாம்.
ஆனால் 399 சிசி இன்ஜின் கொண்ட '390 டியூக் R' (390 Duke R) மாடலானது 3.39 லட்சம் ரூபாய் என்ற விலையைக் கொண்டுள்ளது. இது 350 சிசி இன்ஜின் கொண்ட டியூக் மாடலை விட சுமார் 62,000 ரூபாய் வரை கூடுதல் விலையாகும்.
அதேபோல், 350 சிசி இன்ஜின் கொண்ட '390 அட்வென்சர்' (390 Adventure) மாடலானது 2.81 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. 399 சிசி இன்ஜினுடன், '390 அட்வென்சர் X', '390 அட்வென்சர் S' மற்றும் '390 அட்வென்சர் R' என மூன்று பைக் மாடல்களை 3.43 லட்சம் ரூபாய் முதல் 3.77 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கேடிஎம் விற்பனை செய்து வருகிறது.
அதில் விலை குறைவான 390 அட்வென்சர் X-ஐ எடுத்துக் கொண்டாலும் கூட ரூ.62,000 வரை இரண்டு பைக்குகளுக்கும் இடையே விலை வித்தியாசம் வருகிறது. அந்த வகையில் விலையை வைத்துப் பார்க்கும் போது புதிய 350 சிசி இன்ஜின் கொண்ட டியூக் மற்றும் அட்வென்சர் பைக்குகளை வாங்குவது நமக்கு லாபம் தரக்கூடிய செயல் தான்.
புதிய சிறிய இன்ஜின் எப்படி இருக்கிறது? அதனை வாங்கலாமா?
இப்போது இன்ஜினுக்கு வருவோம். குறைவான பவர் மற்றும் குறைவான டார்க் என்னும் போது பயன்பாட்டின் போது அதனை உணராமல் இருக்க முடியாது. ஏற்கனவே கேடிஎம்மின் 390 சீரிஸ் பைக்குகளை பயன்படுத்தியவர்கள் என்றால், புதிய 350 சிசி இன்ஜினில் இடைநிலையில் பவர் குறைவாக இருப்பதை நன்றாகவே உணர முடியும். அதவும் அட்வென்சர் பைக்கில் அப்பட்டமாகத் தெரியும்.
ஆனால், புதிதாக கேடிஎம் பைக் வாங்கப் போகிறீர்கள் என்றால் அது பெரிய அளவில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்ததாது. குறிப்பாக 390 டியூக் பைக்கில் புதிய 350 சிசி இன்ஜின் நன்றாகவே பொருந்திப் போகிறது. இன்னும் சொல்லப்போனால் ஓட்டுவதற்கு ஃபன்னாகவும் லைவ்லியாகவும் கூட இருக்கிறது. 390 அட்வென்சர் பைக்கிலேயே டியூக்கை விட சற்று கூடுதல் எடை காரணமாக பவர் போதமையை உணர முடிவதாகத் தெரிகிறது.
வசதிகளில் 350 சிசி இன்ஜின் கொண்ட டியூக் மற்றும் அட்வென்சர் பைக்குகளில் எந்த மாற்றமும் செய்யாமல் அனைத்து வசதிகளையும் அப்படியே கேடிஎம் கொடுத்திருக்கிறது. எனவே அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. 5 இன்ச் TFT டிஸ்பிளே, ஸ்லிப்பர் கிளட்ச், பை-டேரக்ஷனல் க்விக்ஷிப்டர், ரைடு-பை-வயர் திராட்டில், க்ரூஸ் கண்ட்ரோல், ட்ராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அனைத்து மேம்பட்ட வசதிகளையும் சிறிய இன்ஜின் கொண்ட புதிய டியூக் மற்றும் அட்வென்சர் பைக்குகளிலும் நாம் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல ஏற்கனவே கேடிஎம்மின் 399 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளைப் பயன்படுத்தியவர்களுக்கு புதிய 350 சிசி இன்ஜின் சற்று குறைவாக இருப்பது போலத் தான் இருக்கும். ஒரு டெஸ்ட் டிரைவ் செய்து விட்டு பின்னர் முடிவு செய்யலாம். புதிதாக கேடிஎம் பைக் வாங்குபவர்கள் இந்த 350 சிசி இன்ஜின் கொண்ட 390 டியூக் மற்றும் 390 அட்வென்சர் பைக் மாடல்களை தாராளமாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications