வெளிநாட்டு கேடிஎம் பைக்கிற்கு இந்தியாவில் என்ன வேலை? நம்ம கேமராவில் இருந்து தப்புமா!!
இந்தியச் சாலைகளில் கேடிஎம் 390 எஸ்.எம்.சி ஆர் (KTM 390 SMC R) மோட்டார்சைக்கிள் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது இந்த இருசக்கர வாகனத்தின் இரண்டாவது தோற்றமாகும். இந்த லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் (Spy Images), கேடிஎம் நிறுவனம் இந்தியச் சந்தைக்காக இந்த மோட்டார்சைக்கிளை தீவிரமாக மதிப்பிட்டு வருவதை உறுதிப்படுத்துகின்றன.
இந்த சூப்பர்மோட்டோ ஸ்டைல் பைக் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. 17-இன்ச் சக்கரங்கள் மற்றும் சாலைக்கு ஏற்ற டயர்கள் இதன் வடிவமைப்பை எடுத்துக்காட்டுகின்றன. சோதனை செய்யப்பட்ட பைக்கில், தரையில் இருந்து உயரத்தில் ரைடர் இருக்கை, மெல்லிய பாடி பேனல்கள் மற்றும் ஓட்டுநருக்குப் பின்னால் ஒரு தட்டையான பகுதி ஆகியவை காணப்படுகின்றன.

இது சூப்பர்மோட்டோ பைக்குகளில் எதிர்பார்க்கப்படும் அக்ரசிவ் வடிவவியலைக் காட்டுகிறது. இந்த வடிவமைப்பு அம்சங்கள் கேடிஎம் 390 எண்டுரோ ஆர் (390 Enduro R) என்கிற டூயல்-ஸ்போர்ட் பைக்கில் இருந்து வேறுபடுகின்றன. இதில் இருந்து எஸ்எம்சி ஆர் பைக்கை எத்தகைய சாலைகளில் பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.
இருப்பினும், இந்த மோட்டார்சைக்கிள் ஆனது 390 எண்டுரோ ஆர் உடன் சேசிஸை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இலகுரக ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம், நீண்ட டிராவலை கொண்ட WP சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் சக்திவாய்ந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் பல்வேறு நிலப்பரப்புகளில் இந்த பைக்கை ஓட்டுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் கேடிஎம் 390 எஸ்எம்சி ஆர் பைக்குகளில், 399cc சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 44 பிஎச்பி ஆற்றலையும், 39 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. ஆனால் இந்தியாவிற்காக, கேடிஎம் நிறுவனம் ஒரு புதிய 350cc என்ஜின் பைக்கை கொண்டுவரப் போவதாக முந்தைய தகவல்கள் தெரிவித்து இருந்தன.
ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) விதிப்பின் கீழ் 350cc-க்கு மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம். சர்வதேச சந்தையின் 399சிசி என்ஜினுக்கு பதிலான இந்த 350சிசி என்ஜின் சுமார் 40 பிஎச்பி ஆற்றலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், லேட்டஸ்ட் மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாகவும் இருக்கும்.

மேலும், புதிய 390 எஸ்எம்சி ஆர் பைக் ஸ்போர்ட்டியான பயணத்திற்கு ஏற்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சேசிஸ் பேலன்ஸைக் வெளிநாட்டு சந்தைகளில் கொண்டுள்ளது. இதனால், இதன் இந்திய மாடலில் ஸ்விட்சபிள் ABS (சூப்பர்மோட்டோ மோட் உடன்), டிராக்ஷன் கண்ட்ரோல், பல ரைடிங் மோட்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் கூடிய முழு-வண்ண TFT டிஸ்ப்ளே போன்ற நவீன அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் கேடிஎம் நிறுவனத்தின் பிரீமியம் 390 சீரிஸ் பைக்குகளுக்கு இணையாக இந்த மாடல் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டிருக்கும். 390 எஸ்எம்சி ஆர் பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது, கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தும். இது இந்தியாவில் அதிகம் விற்பனையில் இல்லாத சூப்பர்மோட்டோ (Supermoto) பைக்குகள் பிரிவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்ட்ரீட், அட்வென்ச்சர் மற்றும் டூயல்-ஸ்போர்ட் பைக்குகள் போன்ற பிரிவுகள் பிரபலம் என்றாலும், சூப்பர்மோட்டோ பிரிவு இந்தியாவில் இன்னும் ஆராயப்படாமல் உள்ளது. இந்த புதிய பைக்கின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை கேடிஎம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், சோதனை மாதிரிகள் மீண்டும் மீண்டும் காணப்படுவது, அதன் தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் இந்தியச் சந்தைக்கு ஏற்றவாறு மதிப்பீடு நடைபெற்று வருவதை உணர்த்துகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஒரு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









