கேடிஎம் உருவாக்கி வரும் புதிய பவர்ஃபுல்லான பைக்.. விரைவில் இந்தியாவில் வெளியாகிறது!
490 சிசி இன்ஜினுடன் கூடிய புதிய பைக் மாடல்களை கேடிஎம் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இந்த பைக்குகள சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பைஷாட் புகைப்படங்களும் இணையத்தில் உலா வருகின்றன. உண்மையில் கேடிஎம் என்ன மாதிரியான பைக்குகளை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் இந்த பைக்குகள் வெளியாகுமா?
உலகளவில் தற்போதைய கேடிஎம் லைன்-அப்பில் 690 சிசி வரை சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்கள் தான் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதற்குமேல் 790 சிசியில் இருந்து ட்வின் சிலிண்டர் (அல்லது மல்டி சிலிண்டர்) இன்ஜின்களின் பயன்பாடு தொடங்கிவிடுகிறது. இந்த நிலையில் தான் குறைவான சிசியில் ஒரு புதிய ட்வின் சிலிண்டர் இன்ஜினை கேடிஎம் இப்போது உருவாக்கி வருகிறது.

390 சிசிக்கு அடுத்தபடியாக நேரடியாக 690 சிசி இன்ஜின் தான் கேடிஎம்மிடம் இருக்கிறது. இதற்கு இடைப்பட்டும் எந்தவொரு இன்ஜினும் கேடிஎம்மின் பைக்குகளில் பயன்படுத்தப்படவில்லை. இந்த இடத்தில் தான் 490 சிசி, பேரலல் ட்வின் இன்ஜின் ஒன்றை புதிதாக உருவாக்கி வருகிறது கேடிஎம். சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிங்கிள் சிலிண்டர் 390 சிசி இன்ஜினுக்கு மாற்றாக புதிய 490 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளை கேடிஎம் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே கூறியது போல 690 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்பாட்டில் இருந்தாலும் அது SMC R மற்றும் எண்டூரோ R போன்ற சூப்பர்மோட்டோ மற்றும் ஆஃப்-ரோடு பைக்குகளில் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டியூக், அட்வென்சர் அல்லது RC பைக் மாடல்களில் 690 சிசி இன்ஜின் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. அந்த இடத்தையும், 390 சிசி பிளாட்ஃபார்மிற்கு மாற்றாகவும் இன்னும் சற்று பவர்ஃபுல்லான புதிய 490 சிசி பேரலல் ட்வின் இன்ஜினை கேடிஎம் உருவாக்கி வருவதாகத் தெரிகிறது.

இதுவரை டியூக், அட்வென்சர் என இரண்டு விதமான பைக் வடிவங்களில் இந்த இன்ஜின் சோதனை செய்யப்பட்டு வருவது ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது. இந்தியாவிலும் இந்த பைக்குகள் பிரபலமாக இருக்கும் நிலையில், கேடிஎம்மின் தொடக்கநிலை மல்டி சிலிண்டர் இன்ஜின் பைக்குகளாக இவை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்வின் சிலிண்டர் இன்ஜின் என்பதால் விலை சற்று அதிகமாக இருக்கும். எனவே தான் 390 சிசி கேடிஎம் பைக்குகளையும் தொடர்ந்து இந்தியாவில் விற்பனையில் வைத்திருக்கவும் பஜாஜ் முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் முதன்மையாக இருப்பவர்கள் சிங்கிள் சிலிண்டர் 390 சிசி இன்ஜின் பைக்குகளையும், பெர்ஃபாமன்ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு 490 சிசி, ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக்குகளையும் பஜாஜ் விற்பனை செய்யலாம்.
தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் புதிய இன்ஜின் கொண்ட பைக்குகளும் முதற்கட்ட உருவாக்கத்தில் இருப்பதை அதன் வடிவத்தை வைத்து நாம் பார்க்க முடிகிறது. எனவே இந்தப் புதிய இன்ஜின் குறித்த தகவல்கள் பெரியளவில் இல்லை. ஆனால் 60 hp முதல் 65 hp-க்குள்ளான பவரை உற்பத்தி செய்யும் திறனை இந்தப் புதிய கேடிஎம் ட்வின் சிலிண்டர் பைக் கொண்டிருக்கும் என்று மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
490 டியூக், 490 அட்வென்சர் மற்றும் RC 490 உள்ளிட்ட புதிய பைக் மாடல்களை இந்தப் புதிய இன்ஜினுடன் இந்தியாவிலும் நாம் அடுத்த சில ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம். BMW-வின் F 450 GS, ஏப்ரிலியா டுவோனோ 457, ஏப்ரிலியா RS 457, ஹோண்டா NX500 மற்றும் கவாஸாகி நின்ஜா 500 உள்ளிட்ட 450 சிசி முதல் 500 சிசி வரையிலான பைக்குகளுக்குப் போட்டியாக கேடிஎம்மின் புதிய 490 சிசி பைக்குகள் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிஎம் நிறுவனம் இப்போது முழுவதுமாக பஜாஜின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில் இந்தப் புதிய தொடக்க நிலை ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக் மாடல்களை இந்தியாவிலும் கண்டிப்பாக நாம் எதிர்பார்க்கலாம். எனினும் இப்போது இதன் உருவாக்கம் தொடக்கக் கட்டத்தில் இருப்பதால் இறுதியில் நிறைய மாறுதல்களை மேற்கூறிய பைக்குகள் மற்றும் இன்ஜினும், இந்தத் திட்டமும் சந்திக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications