18% ஜிஎஸ்டியால் விலை குறைந்த இரு கேடிஎம் பைக்குகள்... மத்திய அரசுக்கு தான் நன்றி சொல்லனும்!
கேடிஎம் (KTM) நிறுவனம் எதிர்பார்த்தப்படி இந்தியாவில் அதன் 390சிசி பைக்குகளை 350சிசி என்ஜினுக்கு மாற்றி உள்ளது. 350சிசி மற்றும் அதற்கு கீழான பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கேடிஎம் நிறுவனம் இவ்வாறான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. கேடிஎம் நிறுவனம் மட்டுமின்றி, பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனமும் இவ்வாறான நடவடிக்கையை சமீபத்தில் மேற்கொண்டதை பார்த்திருந்தோம்.
கேடிஎம் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்தியாவில் அது பல விலையுயர்ந்த பைக்குகளை விற்பனை செய்கிறது. இருப்பினும், ஜிஎஸ்டி சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய என்ஜினுக்கு மாற்றப்படும் பைக்குகளாக கேடிஎம் 390 ட்யூக் (390 Duke) மற்றும் 390 அட்வென்ச்சர் (390 Adventure) பார்க்கப்பட்டன. அதன்படி, தற்போது இந்த இரு பைக்குகளும் புதிய 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் கேடிஎம் 390 ட்யூக் மற்றும் 390 அட்வென்ச்சர் என இரு பைக்குகளும் அவற்றின் தனித்துவத்தின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. மிகவும் விலைமிக்க கேடிஎம் பைக்குகளாகவும் இல்லாமல், விலை குறைவான பைக்குகளாகவும் இல்லாமல் மத்திய நிலையில் உள்ள கேடிஎம் பைக்குகளாக இவை உள்ளதால், இந்த இரு பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த 390சிசி பைக்குகளின் ஷார்ப்பான டைனாமிக்ஸ், அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் ஸ்ட்ராங் பெர்ஃபார்மன்ஸ் உள்ளிட்டவை இளம் இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நிலையில், இவை தற்போது 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டு இருப்பது மேலும் இவற்றின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ளதால், இவற்றிற்கான ஜிஎஸ்டி ஆனது 28%-இல் இருந்து 18% ஆக குறைந்துள்ளது.

என்ஜின் மாற்றத்தால் கேடிஎம் 390 ட்யூக் மற்றும் 390 அட்வென்ச்சர் பைக்குகளின் என்ஜின் இயக்க ஆற்றல் ஆனது 41.5 பிஎஸ் மற்றும் 33.5 என்.எம் டார்க் திறனாக குறைந்துள்ளது. இந்த பைக்குகளில் முன்பு வழங்கப்பட்ட 398.63சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, DOHC, 4-ஸ்ட்ரோக் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 45.3 பிஎச்பி மற்றும் 6500 ஆர்பிஎம்-இல் 39 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடியதாக இருந்தது.
என்ஜின் ஆற்றல் குறைந்துள்ளதே தவிர்த்து, இந்த பைக்குகளின் தோற்றம், வீல்பேஸ் (Wheelbase) மற்றும் கிரவுண்ட் கிளியரென்ஸ் (Ground Clearance) அளவுகளிலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் எந்த மாற்றமும் இல்லை. இவ்வளவு ஏன், பைக்கை ஓட்டுவதற்கான ரைடிங் பொசிஷன் கூட மாறவில்லை. கேடிஎம் 390 ட்யூக் ஆனது ஷார்ப்பான, முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டது ஆகும்.
இது, நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல்களில் வளைந்து வளைந்து செல்வதற்கு ஏற்றதாக உள்ளது. மறுப்பக்கம், 390 அட்வென்ச்சர் ஆனது தரையில் இருந்து அதிகமான உயரத்தில் கரடு முரடான பாதைகளுக்கும் கொண்டுச் செல்லக்கூடியதாக உள்ளது. 350சிசி என்ஜின் உடனான கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.2,77,268 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் 350சிசி என்ஜின் உடன் ரூ.2,80,905 என்கிற விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு 390சிசி பைக்குகள் மட்டுமின்றி, இந்தியாவில் 390 ட்யூக் ஆர், 390 அட்வென்ச்சர் எஸ், 390 அட்வென்ச்சர் எக்ஸ் மற்றும் 390 அட்வென்ச்சர் ஆர் உள்ளிட்ட பைக்குகளையும் கேடிஎம் நிறுவனம் விற்பனை செய்கிறது. ஆனால், இவை எதுவும் தற்போதைக்கு 350சிசி என்ஜினுக்கு மற்றப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான ஜிஎஸ்டி விதிக்கப்படும் போதிலும், 350சிசி என்ஜினுக்கு மாற்றப்பட்டுள்ள கேடிஎம் பைக்குகளின் விலைகளில் பெரிய அளவிற்கு எந்த குறைப்பும் இல்லை. ஏனெனில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட போது பைக்குகளின் விலைகளை கேடிஎம் அதிகரிக்கவில்லை. அதனால், தற்போது பெரிய அளவிற்கு விலை குறைப்பும் இல்லை. இருப்பினும், கேடிஎம் 250 ட்யூக் மற்றும் 250 அட்வென்ச்சர் பைக்குகளுடனான விலை வித்தியாசம் மேலும் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications







