பைக்கின் விற்பனையை அதிகரிக்க கேடிஎம் நிறுவனத்தால் செய்ய முடிஞ்சது இதுதான்! கலர் கலரா இனி சாலையில்!
கேடிஎம் இந்தியா (KTM India) நிறுவனம் அதன் ஆர்சி 160 (RC 160) என்கிற ஸ்போர்ட்ஸ் பைக்கில் இரு புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பைக்கின் தொழில்நுட்ப அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், இன்றைய கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில், 'எலக்ட்ரானிக் ஆரஞ்சு மேட்' (Electronic Orange Matte) மற்றும் புதியதாக 'செராமிக் ஒயிட் மேட்' (Ceramic White Matte) ஆகிய கலர் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் 125சிசி பைக்குகளுக்கு பதிலாக 160சிசி பைக்குகளை களமிறக்கி வருகிறது. தற்சமயம் எந்தவொரு 125சிசி கேடிஎம் பைக்கும் விற்பனையில் இல்லை. இந்த 2026ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் 125 ட்யூக் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றாலும், தற்போதைக்கு விற்பனை செய்யப்படும் விலை குறைவான கேடிஎம் மோட்டார்சைக்கிள், 160 ட்யூக் ஆகும்.

இதற்கடுத்து விலை குறைவான கேடிஎம் பைக்காக ஆர்சி 160 விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆர்சி 160 பைக்கிற்கு தான் தற்போது இரு புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த பைக்கிற்கு கருப்பு என்கிற ஒரேயொரு கலர் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த இரு புதிய வண்ணங்கள் அதே விலையில் சேர்க்கப்பட்டுள்ளன.
புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'எலக்ட்ரானிக் ஆரஞ்சு மேட்' வண்ணத்தில், கேடிஎம் நிறுவனத்தின் வழக்கமான பிரகாசமான ஆரஞ்சு நிறம் அடிப்படையாக உள்ளது. இது முழுவதுமாக கருப்பு நிற கிராபிக்ஸ் மற்றும் கருப்பு நிற அலாய் சக்கரங்களுடன் அட்டகாசமாக காட்சியளிக்கிறது. மேலும், இந்த எலக்ட்ரானிக் ஆரஞ்சு மேட் கலர் ஆப்ஷன் ஆனது ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 போன்ற பெரிய ஆர்சி பைக்குகளில் ஏற்கனவே வழங்கப்படுகிறது.

'செராமிக் ஒயிட் மேட்' கலர் ஆப்ஷனை பொறுத்தவரையில், இந்திய கேடிஎம் பைக்குகள் வரிசையில் புதிய வரவாகும். இது வெள்ளை நிறத்தை அடிப்படையாகக் கொண்டு, கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற கிராபிக்ஸ் உடன் உள்ளது. இந்த கலர் ஆப்ஷனில் ஆரஞ்சு நிற அலாய் சக்கரங்கள் தனித்துவமாக அமைந்து, பைக்கிற்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்குகின்றன.
ஏற்கனவே கூறியதுபோல், புதிய கலர் ஆப்ஷன்களை தவிர்த்து கேடிஎம் ஆர்சி 160 ஸ்போர்ட்ஸ் பைக்கின் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில் 164.2சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 19 பிஹெச்பி பவரையும், 15.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.
இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது மென்மையான கியர் மாற்றத்தை வழங்குகிறது. இந்த பைக்கில் ஃபுல்-எல்இடி ஹெட்லைட், டெயில்-லைட் மற்றும் இண்டிகேட்டர்கள் கொண்ட லைட்டிங் அமைப்பு உள்ளது. மேலும், இரண்டாக பிரிக்கப்பட்ட குழாய் ட்ரெல்லிஸ் ஃபிரேமில் உருவாக்கப்படும் ஆர்சி 160 பைக்கில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை வழங்கப்படுகிறது.
37மிமீ-இல் தலைக்கீழான முன்பக்க ஃபோர்க் மற்றும் பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன் போன்ற வசதிகள் இதில் அடங்கும். இரட்டை-சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள் (முன்புறம் 320மிமீ, பின்புறம் 230மிமீ) பாதுகாப்பிற்கு உதவுகின்றன. ஃபுல்-எல்இடி லைட்டிங் மற்றும் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை போன்ற அம்சங்கள் இருந்தாலும், சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட 160 டியூக் பைக்கில் உள்ள TFT திரை ஆர்சி 160 பைக்கிற்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கேடிஎம் ஆர்சி 160 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.85 லட்சமாக உள்ளது. புதிய கலர் ஆப்ஷன்களை பைக்கின் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிமுகம் செய்திருப்பது தான் இதில் சிறப்பான விஷயமாகும். ஒரேயொரு கலர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த பைக்கிற்கு புதியதாக இரு கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருப்பது அதற்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








