ரோடே இல்லைனாலும் பைக்கை தைரியமா கொண்டு போலாம்... கேடிஎம்-இன் தயாரிப்பு அந்த மாதிரி!!
கேடிஎம் (KTM) நிறுவனம் ஆஃப்-ரோடு (Off-road) பயணங்களுக்கு கவனம் செலுத்தும் புதிய 390 அட்வென்ச்சர் ஆர் (390 Adventure R) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாகசப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.3.77 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கேடிஎம் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
புதிய 390 அட்வென்ச்சர் ஆர் பைக் ஆனது குறைவான ஸ்பெக் கொண்ட கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் மற்றும் பிரீமியம் 390 அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இடையே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கான தேவையான வசதிகளை தொழிற்சாலையிலேயே இது பெற்று வந்துள்ளது. இதனால், இந்திய பைக் ஆர்வலர்கள் இனி ஆஃப்-ரோடு சாகசங்களுக்காக வண்டியில் எந்த மாற்றங்களும் செய்யத் தேவையில்லை.

390 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் நீளமான சஸ்பென்ஷன் டிராவல் (230 மிமீ) கொண்ட முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷன் அம்சங்கள் உள்ளன. இது கடினமான பாதைகளிலும், சாகசப் பயணங்களிலும் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. சமமற்ற மற்றும் கரடுமுரடான பரப்புகளில் மேம்பட்ட பிடிமானத்தை வழங்க, கேடிஎம் 390 எண்டூரோ பைக்கில் உள்ள அதே ஆஃப்-ரோடு சிறப்பு டயர்கள் இதிலும் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் கணிசமாக அதிகரிக்கப்பட்டு, தற்போது 272 மிமீ ஆக உள்ளது. மேலும், தரையில் இருந்து இதன் ஓட்டுனர் இருக்கை உயரம் வழக்கமான பைக்குகளை விட உயரமானது; 870 மிமீ கொண்ட இது பைக்கின் அடிப்பகுதியை உயர்த்தி ஆஃப்-ரோடு தன்மையை மேலும் மேம்படுத்துகிறது.

இயந்திர ரீதியாக, இந்த பைக் மாற்றம் இல்லாமல் உள்ளது. அதே 399சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் 46 பிஎஸ் பவரையும், 39 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் ஆனது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
ரைட்-பை-வயர் த்ரோட்டில், டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், மல்டிபிள் ரைடு மோட்கள், முழு வண்ண TFT டிஸ்ப்ளே மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இதில் உள்ளன. 14 லிட்டர் பெட்ரோல் டேங்க், புரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப்கள், கேடிஎம் கனெக்ட் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளுடன் இது வருகிறது.
விலைகளைப் பொறுத்தவரை, வழக்கமான கேடிஎம் 390 அட்வென்ச்சர் விலை ரூ.3.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), புதிய 390 அட்வென்ச்சர் ஆர் ரூ.3.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் குறைந்த ஸ்பெக் கொண்ட கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் ரூ.3.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலைகளில் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர் பல சிறப்பம்சங்களைக் கொண்டாலும், ட்யூப்லெஸ் ஸ்போக் சக்கரங்கள் இல்லாதது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. இந்த விலையில் இந்த அம்சம் இருந்திருந்தால் இன்னும் நடைமுறைக்கு உகந்ததாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருந்திருக்கும். இந்த புதிய கேடிஎம் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், டிரையம்ப் ஸ்கிராம்பிளர் எக்ஸ் மற்றும் வரவிருக்கும் பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் போன்ற பைக்குகளுடன் விற்பனையில் போட்டியிடுகிறது.


Click it and Unblock the Notifications








