யமஹா ஆர்15 மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு கிளம்ப வேண்டியதுதான்... புது கேடிஎம் பைக் ஷோரூமுக்கு வந்தாச்சு!!
இந்தியாவில் தனது புதிய 'ஆர்சி 160' (RC 160) ஸ்போர்ட்ஸ் பைக்கை கேடிஎம் (KTM) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.85 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனையில் யமஹா ஆர்15 (Yamaha R15) பைக்கிற்கு போட்டியாக வந்துள்ள இந்த புதிய மாடல், ஏற்கனவே விற்பனையில் உள்ள கேடிஎம் 160 ட்யூக் (160 Duke) பைக்கை விட ரூ.6,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கேடிஎம் ஆர்சி 160 ஆனது, அதன் பெரிய மாடல்களான ஆர்சி200 மற்றும் ஆர்சி390 பைக்குகளின் வடிவமைப்பு மற்றும் பெரும்பாலான ஹார்ட்வேர் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இதனால், சிறிய என்ஜினை கொண்டுள்ள போதிலும், பெரிய பைக் போன்ற உணர்வை இது வழங்குகிறது. ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டப்பட்டுள்ள இந்த பைக்கில், 37 மிமீ தலைக்கீழான முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் ஒரு மோனோஷாக் பின்பக்க சஸ்பென்ஷன் உள்ளது.

இந்த பைக் 17-இன்ச் அலாய் சக்கரங்களில் இயங்குகிறது. பிரேக்கிங் வசதிக்காக, முன் சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், டூயல்-சேனல் ஏபிஎஸ் பாதுகாப்பையும் புதிய ஆர்சி160 பைக் கொண்டிருக்கிறது. மேலும், இது 13.75 லிட்டர் கொள்ளளவு கொண்ட உலோக பெட்ரோல் டேங்க், கிளிப்-ஆன் ஹேண்டில்பார், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் முழு எல்இடி லைட்டிங் போன்ற சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக, ஆர்சி160 பைக்கில் சூப்பர்மோட் உடன் கூடிய டூயல்-சேனல் ஏபிஎஸ், அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சில வேரியண்ட்களில் நேவிகேஷன் சப்போர்ட் அம்சமும் கூடுதல் சலுகையாகக் கிடைக்கும். ஆர்சி160 பைக்கில் 164.2சிசி, லிக்யுடு-கூல்டு, SOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9,500rpm-இல் 18.73 பிஎச்பி (19 PS) ஆற்றலையும், 7,500rpm-இல் 15.5 என்.எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது.

அதிக ரெவ் கொண்ட இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது மணிக்கு 118 கிமீ அதிகபட்ச வேகத்தை எட்டும் என கேடிஎம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில், இந்த மோட்டார்சைக்கிள் ஒரே கலர் ஆப்ஷனில் (கருப்பு நிறத்தில் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற கிராபிக்ஸ்) மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கேடிஎம் விரைவில் அதிகமான கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சி160 தற்போது இந்தியா முழுவதும் உள்ள கேடிஎம் டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கும். பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் கீழ் செயல்படும் கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகள் பஜாஜின் புனே தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் புதிய ஆர்சி160 பைக்குகள் ஏற்கனவே டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் புரோபைக்கிங் பிரிவின் தலைவர் மணிக் நாங்கியா கூறுகையில், "இளம் பைக் ஓட்டுநர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய செயல்திறனை வழங்கும் வகையில் ஆர்சி160 வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளம் வாடிக்கையாளர்கள் இடையே செயல்திறன் சார்ந்த பைக்குகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், போட்டி நிறைந்த எண்ட்ரி-லெவல் பிரீமியம் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் கேடிஎம் நிறுவனத்தின் ஆதிக்கத்தை ஆர்சி160 வலுப்படுத்துகிறது. ஆர்சி200 பைக் வாங்கும் அளவிற்கு பணம் இல்லாதவர்கள் கூட ஆர்சி160 பைக்கை வாங்க முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளதால், வரும் நாட்களில் சாலைகளில் அதிகளவில் கேடிஎம் ஆர்சி பைக்குகளை காணலாம். அதுமட்டுமில்லாமல், ஆர்சி125 பைக்கின் விற்பனையும் நிறுத்துவிட்டதால், அதனை வாங்க திட்டமிட்டவர்கள் ஆர்சி160 பக்கம் வரலாம்.


Click it and Unblock the Notifications









