வருஷத்துக்கு வருஷம் பைக் மாறிட்டே வருது! இந்த முறை கேடிஎம் புதுசா என்ன அறிமுகப்படுத்தி இருக்கு?
2026 கேடிஎம் டியூக் 200 (KTM Duke 200) மோட்டார்சைக்கிள், மேம்பட்ட செயல்திறன், சிறந்த ஹேண்ட்லிங் மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கில், புதிய வண்ணங்கள், திருத்தப்பட்ட பாகங்கள் மற்றும் சில இயந்திர மேம்பாடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டீலர்ஷிப் ஷோரூம்களுக்கும் வர துவங்கிவிட்ட புதிய 2026 கேடிஎம் ட்யூக் 200 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
புதிய 'அட்லாண்டிக் ப்ளூ' (Atlantic Blue) கலர் ஆப்ஷன் உடன் 2026 கேடிஎம் டியூக் 200 வெளிவருகிறது. இதில் நீல நிற பாடி பேனல்கள் கேடிஎம் நிறுவனத்தின் பிரத்யேக ஆரஞ்சு வண்ணத் ஹைலைட்களுடன் இணைந்துள்ளன. இருக்கைக்கு அடியில் உள்ள ஆரஞ்சு நிற சப்-ஃப்ரேம், கருப்பு நிற மெயின் ஃப்ரேம் உடன் கச்சிதமாகப் பொருந்தி, இந்த மோட்டார்சைக்கிளுக்குச் கூர்மையான, ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொடுக்கிறது.

கருப்பு நிற அலாய் சக்கரங்கள் பைக்கின் தோற்றத்தை மேலும் மேம்படுத்தி, இளைய தலைமுறை ஓட்டுநர்களைக் கவரும் வகையில் உள்ளன. எடை குறைவான அலாய் சக்கரங்கள் மோட்டார்சைக்கிளின் சுறுசுறுப்பு மற்றும் துல்லியமான ஹேண்ட்லிங்கிற்கு மேலும் வலு சேர்த்துள்ளன. புதிய டியூக் 200 பைக்கில் பெரிய டியூக் 390 பைக்கில் இருந்து பெறப்பட்ட பிரேக் ஹார்டுவேர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2026 டியூக் 200 இப்போது பெரிய 320 மிமீ முன் டிஸ்க் பிரேக்குடன் வந்துள்ளது. இது முந்தைய 300 மிமீ டிஸ்க்கிற்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாடு ஆனது பைக்கின் பிரேக்கிங் திறனை கணிசமாக அதிகரிப்பதுடன், ஓட்டுநரின் நம்பிக்கையையும் மேம்படுத்தியுள்ளது. பின்புற டிஸ்க் 230 மிமீ அளவிலேயே தொடர்கிறது.

கேடிஎம் நிறுவனம் டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் சூப்பர்மோட்டோ ஏபிஎஸ் அம்சத்தையும் மீண்டும் ட்யூக் 200 பைக்கில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களுக்கு வேகமான திருப்பங்களிலும், டிராக் ஓட்டும்போதும் அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. சஸ்பென்ஷன் மற்றும் சக்கரங்களின் அளவுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பைக்கின் ஒட்டுமொத்த சமநிலை மற்றும் ரைடிங் சூழலை மேம்படுத்தும் வகையில், கேடிஎம் பல முக்கிய பாகங்களைத் திருத்தியுள்ளது.
முந்தைய 43 மிமீ WP அபெக்ஸ் முன் ஃபோர்க்குகள், இப்போது சிறந்த ஹேண்ட்லிங் துல்லியம் மற்றும் சௌகரியத்தை வழங்கும் 37 மிமீ யூனிட்களாக மாற்றப்பட்டுள்ளன. பின் இருக்கை பயணிக்கான புதிய கிராப் ரெயில் மற்றும் டிசைன் மாற்றப்பட்ட ஃபுட்பெக் அமைப்பு தினசரி பயன்பாட்டிற்கான நடைமுறைத் தன்மையை மேம்படுத்தியுள்ளன.
சக்கரங்களின் பரிமாண அளவுகளும் சற்றே மாற்றியமைக்கப்பட்டு, பின் சக்கர டயர் இப்போது 140-பிரிவு புரொஃபைலைப் (140-section profile) கொண்டுள்ளது. இந்த மேம்பாடுகளுடன், மோட்டார்சைக்கிளின் சில அடிப்படை அம்சங்கள் மாறாமல் தொடர்கின்றன. இந்த வகையில், அதே 199சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் 25 பி.எஸ் ஆற்றலையும், 19.5 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.

இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் நகரப் பயணங்களுக்கும், அவ்வப்போது நெடுஞ்சாலைப் பயணங்களுக்கும் ஏற்ற நேர்கோட்டு மற்றும் வேகமான செயல்திறனைத் தொடர்ந்து வழங்குகிறது. தொழில்நுட்ப அம்சங்களில், முந்தைய அப்டேட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 5 அங்குல டிஎஃப்டி டிஸ்ப்ளே (TFT display) தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
கேடிஎம் கனெக்ட் (KTM Connect), ப்ளூடூத் ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற அம்சங்கள் இந்த பைக்கை அதன் பிரிவில் போட்டித்தன்மையுடன் வைத்திருக்க உதவுகின்றன. விலையைப் பொறுத்தவரை, முந்தைய மாடல் ரூ.1.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய மாடலின் விலை வெறும் ரூ.2,000 அதிகரிக்கப்பட்டு ரூ.1.94 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரீமியம் தரத்திலான செயல்திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் பிரிவில், டியூக் 200 பைக்கின் போட்டித்தன்மையை பலப்படுத்தும் வகையில், பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் கேடிஎம் கவனம் செலுத்தியுள்ளது. இந்திய சந்தையில் டியூக் 200, பஜாஜ் பல்சர் என்எஸ்200 (Bajaj Pulsar NS200), டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (TVS Apache RTR 200 4V), ஹோண்டா சிபி ஹார்னெட் 2.0 (Honda CB Hornet 2.0) மற்றும் சுஸூகி ஜிக்ஸெர் 250 (Suzuki Gixxer 250) போன்ற மோட்டார்சைக்கிள்களுடன் போட்டியிடுகிறது.


Click it and Unblock the Notifications









