தரமான பெர்ஃபாமன்ஸுடன் புது பைக்கை களமிறக்கும் கேடிஎம்.. யமஹா, கவாஸாகி எல்லாம் இனி அவ்வளவு தான்!
தற்போது இந்தியாவில் விற்பனையில் இருப்பதிலேயே மிகவும் பவர்ஃபுல்லான சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட மாஸ் மார்க்கெட் பைக் மாடல் என்றால் அது கேடிஎம்மின் RC 390 தான். சிங்கிள் சிலிண்டர் இன்ஜினைக் கொண்டிருந்தாலும், ட்வின் சிலிண்டர் இன்ஜினுக்கு இணையான பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கும் பைக் இது. இந்நிலையில் இந்த பைக்கிற்கு ட்வின் சிலிண்டர் இன்ஜினைக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
அப்படியான ஒரு திட்டத்தையே கேடிஎம் வைத்திருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆம், RC 390-க்கு கொடுப்பதற்காகவே புதிய ட்வின் சிலிண்டர் இன்ஜின் பிளாட்ஃபார்மை கேடிஎம் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், கேடிஎம் நிறுவனத்திடமிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ அல்லது தகவல்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RC 390-யை அப்டேட் செய்யாத கேடிஎம்: இந்தியாவில் 390 சிசி பிரிவில் 390 டியூக், 390 அட்வென்சர், RC 390 மற்றும் எண்டூரோ 390 R ஆகிய பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது கேடிஎம். இதில் RC 390-யைத் தவிர்த்து மற்ற அனைத்து பைக் மாடல்களிலும் மேம்படுத்தப்பட்ட 399 சிசி இன்ஜினை அந்நிறுவனம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. ஆனால், RC 390-யில் மட்டும் முன்பிருந்த 373 சிசி இன்ஜினே பயன்பாட்டில் உள்ளது. பஜாஜின் பல்சர் 400Z மற்றும் டாமினார் 400 ஆகிய பைக்குகளிலும் இந்த 373 சிசி இன்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் RC 390-க்கு புதிய ட்வின் சிலிண்டர் இன்ஜின் பிளாட்ஃபார்மை கேடிஎம் கொடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புதிய இன்ஜினுடன், மற்ற வகைகளிலும் மேம்படுத்தப்பட்ட RC 390 பைக்கை 2027ல் இந்தியாவில் வெளியிட கேடிஎம் திட்டமிட்டிருக்கிறது. RC 390-க்கு பிறகு இந்த இதே ட்வின் சிலிண்டர் இன்ஜினை, தங்களுடைய மற்ற 390 சிசி பைக்குகளுக்கும் கேடிஎம் கொடுத்து அப்டேட் செய்யவும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

RC 390 பைக்கிற்கு ட்வின் சிலிண்டரைக் கொடுத்து அப்டேட் செய்வதற்கு இது சரியான நேரம் என்றே கூறலாம். கடந்தாண்டு 350 சிசி-க்கு கீழான இன்ஜின் கொண்ட பைக்குள் மீதான ஜிஎஸ்டி வரிய 18% ஆகக் குறைத்தது மத்திய அரசு. கேடிஎம், ட்ரையம்ப் மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் 450 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக்குகளையும் விற்பனை செய்து வருகின்றன. இந்த பைக்குகளின் இன்ஜினை மறுவடிவமைப்பு செய்து 350 சிசிக்கு கீழாகக் குறைக்கும் முடிவை எடுத்தது பஜாஜ்.
முதலில் ட்ரையம்ப் மற்றும் பஜாஜின் 400 சிசி பைக்குகளிலும், பின்னர் கேடிஎம்மின் 390 சீரிஸ் பைக்குகளிலும் இந்த சிறிய இன்ஜின் கொடுக்கப்பட்டு அப்டேட் செய்யப்படவுள்ளது. இந்த அப்டேட் மூலம் பைக்கின் விலையும், அதன் மீதான வரியும் குறைக்கப்படும். ஆனால், பெர்ஃபாமன்ஸை விரும்பும் கேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்காது. எனவே 390 சீரிஸ் பைக்குகளின் விலையை மட்டும் அப்டேட் செய்யாமல், பைக்குகளையே மொத்தமாக அப்கிரேடு செய்யவிருக்கிறது கேடிஎம்.
ட்வின் சிலிண்டர் இன்ஜினுடன், இப்போது இருப்பதை விட கூடுதல் பெர்ஃபாமன்ஸ் கூடுதல் சிறப்பம்சங்கள், ஆனால் விலையும் கூடுதலாக இருக்கும். பெர்ஃபாமன்ஸை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக், பட்ஜெட் முக்கியம் என்னும் வாடிக்கையாளர்களுக்கு 350 சிசிக்கு கீழான இன்ஜின் கொண்ட பைக் எனப் பிரித்து வைக்க முடியும். மேலும், 400 சிசி பிரிவில் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக்குகள் அதிகமாகி வரும் நிலையில், RC 390-யை சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுடன் எவ்வளவு காலத்திற்கு கேடிஎம் வைத்திருக்க முடியும்.
ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட RC 390 பைக்கை, ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட யமஹா R3, கவாஸாகி நின்ஜா 400, ஏப்ரிலியா RS 457 மற்றும் BMW, டிவிஎஸ்ஸின் 420 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின் ஃபேர்டு பைக்குகளுக்குப் போட்டியாக கேடிஎம் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது. தங்களது இந்தத் திட்டம் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் என கேடிஎம் நினைக்கிறது.
தற்போதைய கேடிஎம் RC 390: தற்போது விற்பனையில் இருக்கும் 373.23 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 43.5 PS பவர் மற்றும் 37 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பைக்கை ரூ.3.22 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது கேடிஎம்.
இந்த பைக்கின் முன்பக்கம் 43 மிமீ WP ஏபெக்ஸ் USD ஃபோர்க் சஸ்பென்ஷன் சிஸ்டமும், பின்பக்கம் 10 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் WP ஏபெக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷன் சிஸ்டமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்காக முன்பக்கமும் பின்பக்கமும் 320 மிமீ மற்றும் 230 மிமீ டிஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர MTC, பை-டேரக்ஷனல் க்விக்ஷிப்டர், கார்னரிங் ஏபிஎஸ், சூப்பர்மோட்டோ ஆகிய எலெக்ட்ரானிக் வசதிகள் மற்றும் TFT டிஸ்பிளே உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களையும் தற்போதைய RC 390 பைக் கொண்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: RC 390 சிசி பைக் ஒரே நேரத்தில் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று பட்ஜெட் அடிப்படையிலும், மற்றொன்று பெர்ஃபாமன்ஸ் அடிப்படையிலும். பெர்ஃபாமன்ஸ் சற்று குறைந்தாலும், பட்ஜெட் முக்கியம் என்னும் வாடிக்கையாளர்கள் பட்ஜெட் RC 390-யையும் பைக்கையும், பெர்ஃபாமன்ஸ் முக்கியம் என்னும் வாடிக்கைாளர்கள் ட்வின் சிலிண்டர் இன்ஜினுடன் அப்டேட் செய்யப்படும் பைக்கையும் வாங்கலாம். இரண்டுமே முக்கியம் என்பவர்களுக்கு தற்போதைய RC 390 சிறந்த தேர்வாக இருக்கும். அனைத்து வகையிலும் மிகச் சிறப்பான ஒரு ஸ்போர்ட் பைக்காகவே இப்போதைய RC 390 பைக் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








