மலேசியாகாரர்களுக்கே நம்ம ஊரில் தயாரிக்கப்படும் பைக் தான்... ஆனா டபுள் மடங்கு அதிக விலை!
BMW மோட்டார்ராட் நிறுவனத்திற்கு இந்தியா ஓர் முக்கியமான சந்தையாகும். மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதற்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கான மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்வதற்காகவும் இந்தியாவை BMW மோட்டார்ராட் நிறுவனம் வெகுவாக பயன்படுத்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையை BMW நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
அவ்வாறு இந்தியாவில் உருவாக்கப்படும் மேட்-இன்-இந்தியா BMW பைக்குகள் பல நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் BMW F450 GS பைக்குகள் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் ஆனது இந்தியாவில் விலை குறைவான BMW அட்வென்ச்சர் பைக்காக விளங்குகிறது.

2-சிலிண்டர் என்ஜினை கொண்ட இந்த அட்வென்ச்சர் பைக் ஆனது TVS மோட்டார் மற்றும் BMW மோட்டார்ராட் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது ஆகும். 135-டிகிரி சாய்வான கிரான்க்ஷாஃப்ட் செட்-அப் உடன் கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற பாகங்கள் F450 GS பைக்கில் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இந்த அட்வென்ச்சர் BMW பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.70 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
ஆனால், மலேசியன் சந்தையில் இந்த பைக் கிட்டத்தட்ட டபுள் மடங்கு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இந்த பைக்கின் விலை 40 ஆயிரம் RM ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.9.14 லட்சம் ஆகும். வெளிநாட்டில் உருவாக்கப்பட்டு அங்கிருந்து மலேசியாவிற்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்பட உள்ளதால் இவ்வாறு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

F450 GS பைக்கின் முக்கிய சிறப்பம்சமே அதன் குறைவான எடை ஆகும். வெறும் 178 கிலோ எடையில் இந்த பைக் உருவாக்கப்படுவதால், பள்ளம் மேடான சாலைகளில் எளிதாக இந்த பைக்கை ஹேண்ட்லிங் செய்ய முடியும். இதற்கேற்ப இந்த பைக்கின் முன் சக்கரம் ஆனது 19 இன்ச்சிலும், பின் சக்கரம் சற்று சிறியதாக 17 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன.
சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் சுமார் 180மிமீ-இல் நீளமான டிராவல் உடன் KYB சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்படுகிறது. இவற்றுடன் ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்ராக்ஷன் கண்ட்ரோலும் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. மேலும், ABS புரோ, பல்வேறு ரைடிங் மோட்கள், என்ஜின் டிராக் டார்க் கண்ட்ரோல், 6.5-இன்ச் TFT டிஸ்பிளே உள்ளிட்ட நவீன அம்சங்களும் வழங்கப்படுகின்றன.
இதில், TFT டிஸ்பிளே ஆனது ஸ்மார்ட்போன் உடன் இணைக்கக்கூடியதாக உள்ளது. மேலும், மென்மையான பயணத்திற்காக ஈசி ரைடு க்ளட்ச் அம்சமும் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது. F450 GS பைக்கில் பொருத்தப்படும் 420சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 48 பிஎச்பி மற்றும் 43 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆஃப்-ரோடு பயணங்களுக்காக ஸ்போர்டியான டிசைனிலான விண்ட்ஷீல்டு, ராலி சீட், உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய பிரேக் & கியர்ஷிஃப்ட் லிவர்கள், ஸ்போக் சக்கரங்கள், ரீபாண்ட் & கம்பிரெஷன் செட்டிங்ஸ் உடன் அட்ஜெஸ் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், க்னக்கிள் கார்ட்கள், உயரத்தில் பொருத்தப்பட்ட முன்பக்க ஃபெண்டர் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: BMW F450 GS பைக் ஆனது அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா என உலகளாவிய BMW அட்வென்ச்சர் பைக்காக உருவாக்கப்பட்டது ஆகும். இதனால் இந்த பைக் மலேசிய நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது நாம் எதிர்பார்த்த ஒன்றே ஆகும். இவ்வாறு மேட்-இன்-இந்தியா பைக் வெளிநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது, இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக நன்மை அளிக்கும்.


Click it and Unblock the Notifications