டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை விட சிறந்ததா புதிய பஜாஜ் பல்சர் பைக்? ரூ.1.24 லட்சம் மட்டும்தான் விலை!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பல்சர் என்160 பைக்கை மேம்படுத்தி சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் 160சிசி பைக் மார்க்கெட்டில் போட்டி வலுத்து வருவதால் அதனை சமாளிக்க பல்சர் என்160 பைக்கிற்கு புதிய அப்கிரேட்களை பஜாஜ் வழங்கியுள்ளது. குறிப்பாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக் புதிய பல்சர் என்160 பைக்கிற்கு வழக்கம்போல் பெரிதும் சவாலாக இருக்கும்.
ஏனெனில், டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் மீது எப்போதுமே இந்திய மக்களுக்கு தனி ஈர்ப்பு உள்ளது. அதேநேரம், பஜாஜ் பல்சரின் பிரபலத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆதலால், இந்த இரு 160சிசி பைக்குகளுள் எதை வாங்குவது என்கிற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு ஏற்படுவது சகஜமே. அந்த குழப்பத்திற்கான தீர்வை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

என்ஜின் & செயல்படுதிறன்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் என்ஜின் சிஸ்டத்தில் 4 வால்வுகள் வழங்கப்படுவதால், அதிக ஆர்பிஎம் வேகத்தில் இயங்கும்போதும் என்ஜினால் விரைவாக குளிர்வடைய முடிகிறது. இதனால், நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100கிமீ வேகத்தில் செல்வதற்கு இந்த அப்பாச்சி பைக் ஏற்றதாகும். GTT எனப்படும் க்ளைட் த்ரூ டெக்னாலஜி வழங்கப்பட்டாலும், நெரிசல் மிகுந்த சாலைகளில் இந்த பைக்கில் அடிக்கடி கியரை மாற்றி பயணிக்க வேண்டியுள்ளது.
மறுபக்கம், பல்சர் என்160 பைக்கில் என்ஜின் சிஸ்டத்தில் இரு வால்வுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால், மணிக்கு 100கிமீ வேகத்தை எட்டுவது தாமதமாகுவது மட்டுமின்றி, இந்த பல்சர் பைக்கில் மணிக்கு 90கிமீ வேகத்தை எட்டிய பின்பு அதே வேகத்தில் பைக்கை இயக்கி செல்வது கடினமாக உள்ளது. அதாவது, அதன்பின் வேகம் குறைகிறது. இருப்பினும், 5வது கியரிலும் மணிக்கு 20கிமீ வேகத்தில் எந்தவொரு பிரச்சனையும் இன்றி இயங்கக்கூடியதாக பல்சர் என்160 விளங்குகிறது. இது நெரிசல் மிகுந்த சாலைகளில் எளிதாக பயணிக்க உதவும்.

பயண அனுபவம் & ஹேண்ட்லிங்
பல்சர் என்160 பைக்கில் கூடுதல் விரைப்பான மற்றும் நிலையான சேசிஸ் வழங்கப்படுகிறது. இதனால், அதிவேக பயணங்களை இந்த பைக்கில் பயமில்லாமல் மேற்கொள்ள முடிகிறது. அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பான பொசிஷனில் இந்த பைக்கில் ரைடர் இருக்கை வடிவமைக்கப்படுகிறது. அதேபோல், இந்த பல்சர் பைக்கின் பிரேக் சிஸ்டங்களும் ஓட்டுபவரை வசீகரிக்கின்றன.
அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் சற்று மென்மையான சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இது நகர்புற சாலைகளின் சிறிய பள்ளம், மேடுகளை சிறப்பாக கையாண்டாலும், பெரிய பள்ளங்களில் ஏற்றி இறக்குவதற்கு ஏற்றது இல்லை. ரைடிங் பொசிஷனை பொறுத்தவரையில், மேலே கண்ட பல்சர் பைக் உடன் ஒப்பிடுகையில் இதில் ரைடர் தனது கால்களை சற்று பின்னோக்கி வைத்தப்படி ஓட்ட வேண்டியதாக உள்ளது. இதனால், நெடுஞ்சாலை பயணங்களின் போது விரைவாக அசதி ஏற்படலாம்.
தொழிற்நுட்ப & மெக்கானிக்கல் அம்சங்கள்
அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்எக்ஸோனெக்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், பயணத்திற்கான வழிக்காட்டி, மொபைல் போன் அழைப்பு எச்சரிக்கைகள் உள்ளிட்டவற்றை பைக்கின் திரையிலேயே காணலாம். இந்த இரு பைக்குகளிலும் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் யுஎஸ்டி ஃபோர்குகள் மற்றும் டபுள்-சேனல் ABS போன்றவை கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டில் ஒரு பைக்கை தேர்வு செய்வது சற்று குழப்பமானதே. நீங்கள் ஆக்ரோஷமான பயணத்தையும், அடிக்கடி நெடுஞ்சாலைக்கு கொண்டு செல்வதற்குமான பைக்கை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக் ஏற்றதாக இருக்கும். இதில் மாடர்ன் வசதிகள் மற்றும் ரைடிங் மோட்கள் போன்றவையும் கிடைப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட் ஆகும்.
அதுவே, நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற பைக்கை தேடுகிறீர்கள் என்றால், 2026 பல்சர் என்160 பைக் ஏற்றது ஆகும். ஏனெனில், இது டாப் கியரில் செல்லும்போதும் அதிர்வுகளை குறைத்து, மென்மையான பயணத்தை வழங்குகிறது. மேலும், இந்த பல்சர் பைக்கின் பிரேக் சிஸ்டமும் பாராட்டுக்குரியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications