கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V மற்றும் எக்ஸ்ட்ரீம் 250R பைக்குகள் அறிமுகம்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் 160R 4V (Xtreme 160R 4V), எக்ஸ்ட்ரீம் 250R (Xtreme 250R) ஆகிய இரண்டு ஸ்போர்ட்டி பைக்குகளையும் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு பைக்குகளிலும் புதிய டிஎஃப்டி (TFT) திரை உள்ளிட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாடல்கள் மூலமாக பட்ஜெட் பிரீமியம் பைக் சந்தையில் தனது நிலையை வலுப்படுத்த ஹீரோ தீவிரமாக இறங்கி உள்ளது.
புதிய எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கின் ஸ்டாண்டர்டு வேரியன்ட் ரூ.1.27 லட்சத்திலும், புரோ வேரியன்ட் ரூ.1.37 லட்சத்திலும், கார்பன் வேரியன்ட் ரூ.1.41 லட்சத்திலும் வந்துள்ளது. மறுபுறம், எக்ஸ்ட்ரீம் 250R பைக்கின் விலை ரூ.1.98 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R பைக்கில் புதிய வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் திரை வழங்கப்பட்டுள்ளது. இதில் புளூடூத் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்பு வழங்கப்பட்ட எல்சிடி திரையுடன் ஒப்பிடும்போது, புதிய திரை நவீனமான தோற்றத்தையும் கூடுதல் தகவல் வசதிகளையும் வழங்குகிறது.
இந்த பைக்கில் டிராக்ஷன் கன்ட்ரோல், மழை (Rain), சாலை (Road), ஸ்போர்ட்ஸ் (Sport), டிராக் (Track) என நான்கு ரைடிங் மோடுகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ரைடு-பை-வயர் தொழில்நுட்பத்துடன் இரு திசைகளிலும் செயல்படும் குயிக் ஷிஃப்டர் (Bidirectional Quickshifter) வழங்கப்படுகிறது. டயர்களில் உள்ள காற்றழுத்தத்தைக் கண்காணிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமும் (TPMS) இதில் இடம்பெற்றுள்ளது.
எஞ்சின் விபரம்
எக்ஸ்ட்ரீம் 250R பைக்கில் 249.03சிசி, லிக்விட் கூல்டு எஞ்சின் இடம்பெறுகிறது. புதுப்பிக்கப்பட்ட மாடலில் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 எச்பி சக்தியையும், 25.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. முந்தைய பதிப்புடன் ஒப்பிடும்போது டார்க் அளவு 0.3 என்எம் அதிகரித்துள்ளது.
மேலும், பின்புறத்தில் புதிய சியட் ஸ்போர்ட்ராட் ரேடியல் டயர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கார்பன் ரெட், கார்பன் பிளாக், கார்பன் ஒயிட் என மூன்று புதிய வண்ணத் தேர்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் தற்போது ஸ்டாண்டர்டு, புரோ, கார்பன் என மூன்று வேரியன்டுகளில் கிடைக்கிறது. இதில் கார்பன் வேரியன்டில் மட்டுமே புதிய டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதிகளும் இதில் இடம்பெறுகின்றன.
புதிய எல்இடி ஹெட்லைட், எச் வடிவ பகல்நேர விளக்குகள் (DRLs), மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எரிபொருள் டேங்க் ஆகியவை பைக்கின் தோற்றத்தை மேலும் ஸ்போர்ட்டியாக மாற்றுகின்றன. க்ரூஸ் கன்ட்ரோல், ரெயின், ரோடு, ஸ்போர்ட்ஸ் என மூன்று ரைடிங் மோடுகள் மற்றும் டிராக் டைமர் (Track Timer) ஆகிய வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
எஞ்சின் மற்றும் வண்ணத் தேர்வுகள்
இந்த பைக்கில் 163.2சிசி, நான்கு வால்வு கொண்ட ஏர்-ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சமாக 17.1 எச்பி சக்தியை 8,750 ஆர்பிஎம்மிலும், 14.6 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
கார்பன் வேரியன்ட் கார்பன் ரெட், கார்பன் கிரே, கார்பன் பிளாக், அப்ராக்ஸ் ஆரஞ்சு ஆகிய வண்ணங்களிலும், புரோ வேரியன்ட் புரோ ரெட் மற்றும் புரோ பிளாக் வண்ணங்களிலும் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில் ஃபயர்ஸ்டார்ம் ரெட் மற்றும் பேர்ல் பிளாக் ஆகிய வண்ணங்கள் வழங்கப்படுகின்றன.
முன்பதிவு மற்றும் டெலிவரி
இரண்டு பைக்குகளுக்குமான முன்பதிவு தொடங்கியுள்ளது. எக்ஸ்ட்ரீம் 250R மற்றும் எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்குகளின் டெலிவரி வரும் நவம்பர் 1 முதல் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், எக்ஸ்ட்ரீம் 160R 4V ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் டெலிவரி மட்டும் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications


