பைக்கை பார்த்த உடனே தெரிஞ்சு போச்சு எந்த கம்பெனினு! இன்னும் விற்பனைக்கே வரல அதுக்குள்ள சாலைக்கு வந்தாச்சு!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் இந்தியாவில் பல புதிய பைக்குகளை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரையில், உலகளவில் வணிகம் செய்துவரும் இந்த சென்னை பைக் நிறுவனத்திற்கு விலை குறைவான 350சிசி பைக்குகள் தான் அதிகம் விற்பனையாகும் பைக்குகளாக உள்ளன என்றாலும், பவர்ஃபுல்லான, விலையுயர்ந்த பைக்குகளையும் அறிமுகம் செய்ய ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.
அத்தகைய ராயல் என்ஃபீல்டு பைக்குகளுள் ஒன்றுதான், காண்டினெண்டல் ஜிடி750 (Continental GT750) ஆகும். ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய 750சிசி பைக்குகளில் பணியாற்றி வருகிறது. அவற்றுள் ஒன்றான புதிய காண்டினெண்டல் ஜிடி750 பைக் ஒன்று பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்னும் விற்பனைக்கு வராத இந்த பைக் இவ்வாறு பொது சாலையில் காட்சி தருவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஆனால் இந்த முறை வெளியாகியுள்ள படங்களில் பைக்கை பற்றிய ஒரு முக்கியமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இத்தனை நாள் வரையில் புதிய காண்டினெண்டல் ஜிடி750 ஆனது முற்றிலும் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்காக வரும் என நினைத்திருந்தோம்.
ஆனால் தற்போதைய இந்த ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது தற்சமயம் விற்பனையில் இருக்கும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் பரிணாம வளர்ச்சியாக இருக்கும் என்பதுபோல் தெரிகிறது. காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை விட இன்னும் கூடுதல் கேஃப் ரேசர் போன்றதான தோற்றத்தை இது கொண்டுள்ளது. பைக்கின் பின்பகுதி ரீடிசைன் செய்யப்பட்டுள்ளது; இதனால் பின்பக்க மட்கார்டு மேலும் கூடுதலாக வளைக்கப்பட்டுள்ளது.

பின்பக்க டெயில்லைட் தற்சமயம் காண்டினெண்டல் ஜிடி650 பைக்கில் இருப்பதை போலவே காட்சியளிக்கிறது. ஆனால், பைக்கின் பின்பக்கத்தில் நம்பர் பிளேட் மட்கார்டில் இன்னும் கீழாக பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் பின்பக்கத்தில் வட்ட வடிவிலான எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களையும் பார்க்க முடிகிறது. ஆனால், இது பைக்கை வாங்குபவர்களுக்கு கூடுதல் ஆக்ஸஸரீ (Accessory) ஆகவே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைக்கின் பின்பக்க எக்ஸாஸ்ட் குழாய் ரீடிசைன் செய்யப்பட்டுள்ளது. இது தற்போதைய 650 பைக்கின் எக்ஸாஸ்ட் குழயை காட்டிலும் மெல்லியதாக உள்ளது. காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் எக்ஸாஸ்ட் குழாய் பருமனாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் அவற்றை கொண்டு செல்வது சற்று சிரமமாக இருப்பதாக சில கஸ்டமர்கள் புகார் கூறியதை அடுத்து இந்த மாற்றத்தை ராயல் என்ஃபீல்டு செய்துள்ளது என நினைக்கிறோம்.
இதனுடன், பைக்கின் இருக்கை மற்றும் பின்பக்க சஸ்பென்ஷனும் மாற்றப்பட்டுள்ளதை காண முடிகிறது. பைக்கின் ஹேண்டில்பாருக்கு இறுதியில் மிரர்கள் உள்ளன. இந்த பைக் சிங்கிள்-பீஸில் வட்ட வடிவ டிஎஃப்டி (TFT) திரையை கொண்டுள்ளது. இது பழைய அனலாக் (Analogue) திரைக்கு பதிலாக வந்துள்ளது. இதே வட்ட வடிவ டிஎஃப்டி திரை தான் ராயல் என்ஃபீல்டின் குரில்லா (Guerrilla) மற்றும் ஹிமாலயன் 450 (Himalayan 450) பைக்குகளிலும் உள்ளது.
இருப்பினும், இரட்டை வட்ட வடிவ அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் (Instrument Cluster) திரையை ஹேண்டில்பாருக்கு மத்தியி்ல் கொடுத்திருக்கலாம் என்பது இப்போதும் சிலரது மனகுமுறலாக இருக்கலாம். இந்த புதிய காண்டினெண்டல் ஜிடி750 பைக்கில் அலாய் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த பைக்கில் முன் சக்கரத்தில் கூடுதல் நிறுத்தும் பவரை வழங்கக்கூடிய டபுள் டிஸ்க் பிரேக்குகளை பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி750 பைக் இவ்வாறு அவ்வப்போது பொது சாலைகளில் காட்சி தருவதால், இதன் அறிமுகம் விரைவில் இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். காண்டினெண்டல் ஜிடி650 பைக்கின் தோற்றம் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆதலால், அதன் பரிணாம வளர்ச்சியாக வருவது காண்டினெண்டல் ஜிடி750 பைக்கிற்கு பெரிய அனுகூலமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








