ராயல் என்பீல்டின் முதல் மின்சார பைக் என்றதுமே கொஞ்சம் உஷாரா இருந்திருக்கனும்! பெங்களூரு கம்பெனி என்ன ஆக போகுதோ
இந்தியாவில் பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில், ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் ஃபிளையிங் ஃப்ளீ சி6 (Flying Flea C6) மற்றும் பெங்களூருவை சேர்ந்த அல்ட்ராவயலட் (Ultraviolette) நிறுவனத்தின் எக்ஸ்47 கிராஸ்ஓவர் (X47 Crossover) ஆகிய இரு எலெக்ட்ரிக் பைக்குகளும் தங்கள் தனித்துவமான அணுகுமுறைகளுடன் ஒன்றுக்கு ஒன்று போட்டியாக விளங்குகின்றன.
புதிய ஃபிளையிங் ஃப்ளீ சி6 ஆனது பழமையான ரெட்ரோ மற்றும் எதிர்கால வடிவமைப்பு என இரண்டும் கலந்த கலவையாக உள்ளது. இது நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். அதுவே, அல்ட்ராவயலட் எக்ஸ்47 கிராஸ்ஓவர் ஆனது சாகச பயணங்களுக்கான உயர் செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் பைக்காக கடந்த 2025 அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

செயல்திறன் மற்றும் ரைடிங் அனுபவம்: அல்ட்ராவயலட் எக்ஸ்47 கிராஸ்ஓவர், 40 பிஎச்பி ஆற்றல் மற்றும் 100 என்.எம் டார்க் திறன் உடன் செயல்திறனில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இது, வழக்கமான ஸ்ட்ரீட் பைக்குகளை விட அதிக சஸ்பென்ஷன் டிராவலையும், மேம்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸையும் கொண்டுள்ளது.
இது, நகர்ப்புற சாலைகள் மற்றும் கரடுமுரடான பாதைகள் என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டின் ஃபிளையிங் ஃப்ளீ சி6 எடை குறைவான வடிவமைப்புடன், நகரப் போக்குவரத்தில் எளிதாக ஓட்டுவதற்கு ஏற்றதாக உள்ளது. வெறும் 124 கிலோ எடையுள்ள இந்த பைக், சிட்டி ரைடிங்கிற்கு உகந்த, சீரான ஆற்றல் வெளியீட்டை வழங்குகிறது.

தொழிற்நுட்ப அம்சங்கள்: எக்ஸ்47 கிராஸ்ஓவர் ஆனது ரேடார் அடிப்படையிலான அடாஸ் (ADAS - Advanced Driver-Assistance Systems) மற்றும் டேஷ் கேமராக்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி உள்ளது. ஆனால் இதில் டாஷ் கேமராக்களை கூடுதல் ஆக்ஸசரீயாகவே பைக்குடன் சேர்த்து வாங்க முடியும். மேலும், இந்த அல்ட்ராவயல்ட் எலெக்ட்ரிக் பைக் தனித்துவமான டிஆர்எல் (Daytime Running Light) அமைப்பையும், எதிர்காற்றில் எளிதாக இயங்குவதற்கு ஏற்ற ஆக்ரோஷமான வடிவமைப்பையும் கொண்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டின் ஃபிளையிங் ஃப்ளீ சி6, பாரம்பரியத்துடன் நவீனத்துவத்தை இணைக்கிறது. ஈக்கோ, மழை, நெடுஞ்சாலை, ஸ்போர்ட் மற்றும் கஸ்டமைஸ் என ஐந்து ரைடிங் மோட்களை இது வழங்குகிறது. மேலும், இதன் TFT டிஸ்ப்ளே திரை மூலம் மேம்பட்ட ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியையும் பெறலாம்.
விலை: ஃபிளையிங் ஃப்ளீ சி6 எலெக்ட்ரிக் பைக் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே ரூ.2.79 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BaaS முறையில் பேட்டரியை வாடகையாக பெற்றால், இந்த பைக்கின் விலை ரூ.1.99 லட்சம் மட்டுமே. மறுப்பக்கம், எக்ஸ்47 கிராஸ்ஓவர் எலெக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.74 லட்சத்தில் இருந்து சுமார் ரூ.4.49 லட்சம் வரையில் உள்ளன. அதுவே, BaaS ஆப்ஷனில் வெறும் ரூ.1.49 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு எலெக்ட்ரிக் பைக்குகளில் எதை தேர்வு செய்வது? என எங்களை கேட்டால், நீங்கள் பாரம்பரிய பிராண்ட் மதிப்புகள், நகர்ப்புற நெரிசலில் எளிதாக செல்லக்கூடிய எடை குறைவான, அதிவேகமான அம்சங்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டின் தனித்துவமான ரெட்ரோ-மாடர்ன் அழகியலை விரும்பினால், ஃபிளையிங் ஃப்ளீ சி6 சிறந்த தேர்வாக இருக்கும். இன்னும் இந்த பைக்கை நாங்கள் ஓட்டிப் பார்க்கவில்லை. இதுதொடர்பான எங்களது விரிவான ரிவியூவை விரைவில் எதிர்பார்க்கலாம்.
அதுவே, அதிக செயல்திறன், கூடுதல் வேகம், ரேடார் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை நீங்கள் எதிர்பார்த்தால் அல்ட்ராவயலட் எக்ஸ்47 கிராஸ்ஓவரை தேர்வு செய்யலாம். குறிப்பாக, அட்வென்ச்சர் பயணங்கள் அல்லது சற்றே கரடுமுரடான சாலைகளில் அடிக்கடி செல்வதற்கு இந்த அல்ட்ராவயலட் எலெக்ட்ரிக் பைக்கின் நீண்ட சஸ்பென்ஷன் முக்கிய நன்மையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








