வேறு ரூட்டில் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை குறிவைக்கும் டிவிஎஸ்
இந்தியாவில் நடுத்தர ரக மோட்டார்சைக்கிள் சந்தையில் ராயல் என்ஃபீல்டு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. ராயல்என்ஃபீல்டு மார்க்கெட்டை குறிவைத்து ஹோண்டா, டிரையம்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் சிறந்த மாடல்களுடன் போட்டி போட்டு வருகின்றன. இந்த வரிசையில், தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் வேறு வழியில் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை குறிவைத்து களமிறங்க ஆயத்தமாகி வருகிறது.
அதாவது, தனது பிராண்டில் புதிய மாடலுடன் ராயல் என்ஃபீல்டுடன் நேரடியாக மோதாமல் தனது கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நார்ட்டன் நிறுவனத்தின் பிரிமீயம் மாடல்களை களமிறக்குவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது. மேலும், உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் நடுத்தர வகை பாரம்பரிய ஸ்டைல் மோட்டார்சைக்கிள்களுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கிறது.

(Representational Image - Nortan Atlas)
இதனை மனதில் வைத்து நார்ட்டன் பிராண்டில் புத்தம் புதிய சிங்கிள் சிலிண்டர் கொண்ட 450சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறது. இந்த புதிய மாடல் வரும் நவம்பரில் இத்தாலியில் நடைபெற இருக்கும் ஐக்மா 2026 சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யவும் ஆயத்தமாகி வருகிறது.
டிவிஎஸ் கொடுத்த பொருளாதார ஆதரவுடன் நார்ட்டன் நிறுவனமும் இந்த ரோட்ஸ்டர் வகையிலான புதிய 450சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறது. EICMA 2026 சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்த பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். அந்த வகையில், இந்தியாவிலும் அடுத்த ஆண்டு இந்த புதிய மாடல் வர இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் நடுத்தர பிரிவு மோட்டார்சைக்கிள்கள் பாரம்பரிய டிசைனுடன் எளிமையான தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் வேளையில், நார்ட்டன் பிராண்டின் புதிய மோட்டார்சைக்கிள் பிரிமீயம் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முற்படும்.
மேலும், நார்ட்டன் பிராண்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய 450சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஆலையிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது. நார்ட்டன் 450சிசி மோட்டார்சைக்கிள் டிவிஎஸ் நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் திட்டத்தில் முக்கியமான மாடலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும் நவம்பரில் ஐக்மா சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் நார்ட்டன் நிறுவனம் வெளியிட உள்ளதால், இப்போதே உலக அளவில் நார்ட்டன் நிறுவனத்தின் புதிய 450சிசி மாடல் குறித்து ஆவல் ஏகத்துக்கும் எகிறி உள்ளது.
குறிப்பாக, இந்த புதிய மோட்டார்சைக்கிளின் விலை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும்போதுதான், இந்தியாவில் விற்பனையாகும் ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450, ஹோண்டா சிபி350 உள்ளிட்ட மாடல்களுடன் எந்த அளவுக்குப் போட்டியிடும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
மறுபுறம், இந்தியாவில் நார்ட்டன் பிராண்டை அறிமுகப்படுத்துவதில் டிவிஎஸ் நிறுவனத்தின் உற்பத்தி அனுபவமும் விற்பனைக்குப் பிந்தைய சேவை கட்டமைப்பும் பெரிய அளவில் உதவும். அத்துடன் நார்ட்டன் நிறுவனத்தின் விற்பனை சூடுபிடித்தால் அதன் பொருளாதார நிலையும் மேம்படும் வாய்ப்புகள் ஏற்படும். இந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்போது, இந்தியாவின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் நார்ட்டன் எந்த இடத்தைப் பிடிக்கப்போகிறது என்பது தெளிவாகும்.
கடந்த 1898-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரிட்டிஷ் பாரம்பரியம் கொண்ட நார்ட்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. நார்ட்டன் நிறுவனம் தற்போது 1,200சிசி எஞ்சின் கொண்ட மேன்எக்ஸ் ஆர் (Manx R), மேன்எக்ஸ் (Manx), 585சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட அட்வென்ச்சர் பைக்கான அட்லஸ் (Atlas), ஸ்போர்ட் டூரர் மாடலான அட்லஸ் ஜிடி (Atlas GT) ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. இதில் அட்லஸ் மாடல்கள் டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications


