எல்லா குடும்பத்திலும் இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் இருந்தால் பெட்ரோல் செலவே இல்ல! நிரூபிக்கப்பட்ட தரம்!
ஒபென் எலெக்ட்ரிக் (Oben Electric) நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் ஒட்டுமொத்தமாக சுமார் 3.2 கோடி கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு தங்களது ஒபென் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை இயக்கி உள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
ஒபென் எலெக்ட்ரிக், இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் எலெக்ட்ரிக் வாகன பிராண்ட்களுள் ஒன்று. இதற்கு சாட்சி தான், இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 3.2 கோடி கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு தங்களது ஒபென் எலெக்ட்ரிக் பைக்குகளை ஓட்டியிருப்பது ஆகும். இந்த சாதனையை வெறும் 2 வருடங்களில் ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனம் எட்டியிருப்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயமாகும்.

ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனம் தற்சமயம் ரோர் (Rorr), ரோர் இ.இசட் (Rorr EZ), ரோர் இ.இசட் சிக்மா (Rorr EZ Sigma) என அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் பைக்குகளில் கவனம் செலுத்தி வருகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) எதுவும் இப்போதைக்கு ஒபென் எலெக்ட்ரிக்கில் இருந்து விற்பனை செய்யப்படுவது இல்லை.
இருப்பினும், எலெக்ட்ரிக் பைக்குகள் மூலமாகவே 3.2 கோடி கிமீ-க்கும் அதிகமான தொலைவை தனது வாடிக்கையாளர்கள் மூலமாக இந்த நிறுவனம் கடந்துள்ளது. அதற்கேற்ப, ரோர், ரோர் இ.இசட், ரோர் இ.இசட் சிக்மா ஆகிய மூன்று எலெக்ட்ரிக் பைக்குகளும் வெவ்வேறு விதமான சூழல்களை எதிர்கொள்ளும் விதமாக உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, அவ்வப்போது மேற்கொள்ளப்படும் குறுகிய தூர நகர்புற பயணங்களுக்கு இவை ஏற்றவையாக உள்ளன.

இருப்பினும், இன்னமும் சென்னையில் ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) எதுவும் திறக்கப்படாதது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாகவே, சேலம், கடலூர், தேனி மற்றும் காரைக்குடி என நான்கு பகுதிகளில் மட்டுமே தலா ஒன்று என நான்கு ஒபென் எலெக்ட்ரிக் ஷோரூம்கள் செயல்படுகின்றன.
ஆனால், வட இந்தியாவில் இந்த நிறுவனத்தின் நெட்வொர்க் நன்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் தான் ஒபென் எலெக்ட்ரிக் பைக்குகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதாவது, இந்த மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் தான் அதிக தொலைவிற்கு ஒபென் எலெக்ட்ரிக் பைக்குகளை ஓட்டியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இந்திய அளவில், ஒபென் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு மாறிய வாடிக்கையாளர்கள் ஏறக்குறைய சுமார் ரூ.8 கோடியை எரிபொருள் செலவில் இருந்து சேமித்துள்ளதாக ஒபென் எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. இது, கிட்டத்தட்ட 385 மெட்ரிக் டன்கள் எடைக்கு சமமான கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வை தடுத்துள்ளது. இவ்வாறு கார்பன் உமிழ்வை தடுப்பது மட்டுமின்றி, விற்பனையிலும் ஒபென் எலெக்ட்ரிக் ஜொலித்து வருகிறது.
இந்தியாவில் இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு சுமார் 375% தேவை கடந்த ஆண்டை காட்டிலும் ஏற்பட்டுள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் மேலும் 500 சில்லறை விற்பனை மைய ஷோரூம்களை திறக்க ஒபென் எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு பெங்களூருவில் 3.5 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரண்டே வருடங்களில் தங்களது எலெக்ட்ரிக் பைக்குகளை 3.2 கோடி-க்கும் அதிகமான கிமீ தொலைவிற்கு பயணிக்க வைத்ததில் இருந்து, ஒபென் எலெக்ட்ரிக் நிறுவனம் தன்னையும் ஒரு முன்னணி 2-வீலர் நிறுவனமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனமாக இருப்பினும், தமிழ்நாட்டில் ஒபென் எலெக்ட்ரிக் அதிக ஷோரூம்களை கொண்டில்லாதது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனம் புதியதாக திறக்கும் 500 ஷோரூம்களுள் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமையும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








