1 கிமீ-க்கு வெறும் 25 பைசா தான் செலவு.. புதிய மலிவு விலை எலெக்ட்ரிக் பைக் வெளியானது!
இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் ரோர் இவோ (Rorr Evo) என்ற புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை வெளியிட்டுள்ளது ஓபன் எலெக்ட்ரிக் (Oben Electric) நிறுவனம். போட்டி நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் தலையிடாமல், எலெக்ட்ரிக் பைக்குகள் பிரிவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து வருகிறது ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம். சரி அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்தப் புதிய பைக் எப்படி இருக்கிறது, என்ன அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
விலை:
இந்தப் புதிய எலெக்ட்ரிக் பைக்கை நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் பட்ஜெட் விலையில், அதாவது ரூ.99,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம். ஆனால் அது அறிமுக சலுகை விலை மட்டுமே. முதலில் இந்த ரோர் இவோ எலெக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்யும் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வலை என அறிவித்துள்ளது அந்நிறுவனம். அதன் பிறகு பைக்கின் விலையை ரூ.1.25 லட்சமாக உயர்த்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது ஓபன்.

பேட்டரி, ரேஞ்சு மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்:
இந்த பட்ஜெட் எலெக்ட்ரிக் பைக்கில் 9 kW பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரையும், 3.4 kWh LFP பேட்டரி பேக்கையும் பயன்படுத்தியுள்ளது ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம். இந்த எலெக்ட்ரிக் மோட்டாரானது அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொடுக்கும் நிலையில், மணிக்கு 40 கிமீ வேகத்தை 3 நொடிகளில் எட்டும் திறனையும் கொண்டுள்ளது.
இதன் பேட்டரியானது 180 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தினசரிப் பயன்பாட்டில் 150 கிமீ வரையிலான உண்மையான ரேஞ்சை தாராளமாகப் பெற முடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம். இந்த எலெக்ட்ரிக் மோட்டாருக்கு 8 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கும் அந்நிறுவனம், இதனை 280 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் சோதனை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பிற அம்சங்கள்:
ஏற்கனவே இருக்கும் ARX பிளாட்ஃபார்மில் ட்ரெல்லிஸ் ஃபிரேமைப் பயன்படுத்தி இந்த எலெக்ட்ரிக் பைக்கைக் கட்டமைத்திருக்கிறது ஓபன் எலெக்ட்ரிக். பைக்கின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் 7 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பக்கமும் 270 மிமீ டிஸ்க் பிரேக்குகள் CBS (Combined Braking System) வசதியுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
200 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸ் இருப்பதால் எந்த வகையான பாதையையும் தயக்கமின்றி எளிதாகக் கடக்க முடியும். ஆனால் சீட் உயரம் 780 மிமீ தான். இதனால் யார் வேண்டுமானாலும் இந்த பைக்கை மிக எளிதாக ஓட்டவும், கையாளவும் முடியும். 140 கிலோ எடையைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், 230 மிமீ வரையிலான வாட்டர் வேடிங் திறனையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எக்கோ, ரோடு, ஹேவக் மற்றும் ஸ்மார்ட் IQ என நான்கு ரைடிங் மோடுகளைக் கொண்டுள்ளது இந்த ஓபன் ரோர் இவோ எலெக்ட்ரிக் பைக். இந்த ஸ்மார்ட் IQ மோடானது AI மூலம், நாம் ஓட்டும் விதம் மற்றும் அது தொடர்பான தகவல்களைக் கொண்டு ரேஞ்சைக் கணக்கிட்டுச் சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் பைக்கின் ரேஞ்சை சரியாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நம்முடைய பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ள முடியும்.
எக்கோ மோடு என்றால் மிகவும் குறைவான வேகத்திலேயே செல்ல வேண்டும் என எண்ண வேண்டாம். இந்த மோடிலேயே அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வரையிலான வேகத்தில் நாம் செல்ல முடியும். வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டு இந்த மாற்றத்தினைச் செய்துள்ளது ஓபன் எலெக்ட்ரிக். இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதி கொண்ட 5 இன்ச் TFT டிஸ்பிளவும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் நாம் குறிப்பிட்டுப் பேச வேண்டிய அல்லது பாராட்ட வேண்டிய அம்சம் என்றால் அது டிசைன் தான். இதற்கு முன்னர் விற்பனையில் இருந்த ஓபன் எலெக்ட்ரிக் பைக்குகள் அல்லது தற்போது விற்பனையில் இருக்கும் பல்வேறு எலெக்ட்ரிக் பைக்குகளுடனும் ஒப்பிடும் போது மிகச்சிறப்பாக இந்தப் புதிய பைக்கை வடிவமைத்திருக்கிறது ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம்.
பார்த்தவுடன் எலெக்ட்ரிக் பைக் என்று சொல்ல முடியாத வகையிலான டிசைனையே இந்த ரோர் இவோ எலெக்ட்ரிக் பைக் கொண்டிருக்கிறது. பார்ப்பதற்கு எரிபொருள் பைக் போலவே இது இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பிடித்த அம்சமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. பைக்கில் அனைத்து விளக்குளையும் LED-யாகவே கொடுத்திருக்கிறது ஓபன் எலெக்ட்ரிக். முகப்பில் ப்ரொஜெக்டார் முகப்பு விளக்கு செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 6 லிட்டர் அண்டர்ஸீட் ஸ்டோரேஜும், 4 லிட்டர் டேங்க் ஸ்டோரேஜும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் முக்கியமான ஆவணங்கள் மற்றும் சிறிய பொருட்களை பைக்கிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். டேங்க் ஸ்டோரேஜ் இடத்தில் இரண்டு USB போர்ட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டாண்டர்டான 15A சாக்கெட் மூலமாகவே இந்த பைக்கை சார்ஜ் செய்ய முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ப்ளூ, ரெட், ஒயிட் மற்றும் பிளாக் என நான்கு நிறங்களில் புதிய ரோர இவோ பைக் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலே கூறியது போல இப்போது ரூ.99,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக்கை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு இப்போதே தொடங்கப்பட்டிருக்கிறது. ஜூன் மாதம் முதல் இந்த பைக்கின் டெலிவரி தொடங்கப்படவிருக்கிறது. முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்குப் பிறகு இந்த பைக்கை ரூ.1.25 லட்சம் என்ற விலையிலேயே வாங்க முடியும்.
இந்த ரோர் இவோவைத் தவிர்த்து ரோர் இஸி சிக்மா என்ற எலெக்ட்ரிக் பைக் மாடலையும் தற்போது இந்தியாவில் விற்பனையில் வைத்திருக்கிறது ஓபன் எலெக்ட்ரிக். இந்த ரோர் இஸி சிக்மா பைக் மாடலானது சலுகைகளுடன் ரூ.1.10 லட்சம் முதலான எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு பைக்குகளிலும் நிறையே அம்சங்கள் ஒன்று போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது நீங்கள் ஒரு எலெக்ட்ரிக் பைக்கை வாங்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த ரோர் இவோ பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். எரிபொருள் பைக் வாங்கப் போகிறவர்களும் இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஷோரூமுக்கு சென்று ஒருமுறை பாருங்கள். ஏனெனில் எரிபொருள் பைக்கை விட இந்த எலெக்ட்ரிக் பைக்கில் பயன்பாட்டுச் செலவு மிகவும் குறைவு.
தினசரி 15 கிமீ தூரம் பயன்படுத்தினீர்கள் என்றாலும் செலவு வெறும் 116 ரூபாய் மட்டுமே. இதுவே எரிபொருள் பைக் என்றால் இதே அளவு பயன்பாட்டிற்கு 1,160 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். 150 சிசி பைக்கை வைத்து இந்த செலவு கணக்கிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்தப் புதிய எலெக்ட்ரிக் பைக்கில் 1 கிமீ பயணம் செய்ய வெறும் 0.25 பைசா மட்டுமே. எனவே இதனையும் ஒரு முறை பரிசீலனை செய்யத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications