ஆர்சிபி அணியை விட முரட்டு கம்பேக் கொடுக்கும் ஓலா எலெக்ட்ரிக்! ஆர்டிஓ-இல் பதிவு செய்ய கூட்டம் அலை மோதுது!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் கடந்த சில மாதங்களாக விற்பனையில் பெரிதும் சரிவை சந்தித்துவந்த நிலையில், நடந்து முடிந்த 2026 மார்ச் மாதத்தில் எல்லாவற்றிற்கும் சேர்த்து சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெங்களூருவில் தலைமையிடத்தையும், ஓசூரில் தொழிற்சாலையையும் கொண்டு செயல்படும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை ஆரம்பத்தில் மிக சிறப்பாக இருந்ததை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு, 2024 சமயத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கினர்.

இதனால், குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக ஓலா உருவெடுத்தது. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் கஸ்டமர்களிடம் இருந்து புகார்கள் வந்ததை அடுத்து ஓலா வாகனங்களின் விற்பனை குறைய துவங்கியது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் பெரிய அளவில் சரிவை கண்டு வெறும் 3,973 எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இது மக்கள் மத்தியிலும், எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் மத்தியிலும் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. இதில் வெகுண்டு எழுந்த ஓலா எலெக்ட்ரிக், கடந்த மார்ச் மாதத்தில் தொடர்ச்சியாக சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்தது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் (Cricket) தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடியதற்காகவும், அதன்பின் அதில் வெற்றி பெற்றதற்காகவும் என தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஓலா சலுகைகளை அறிவித்ததை பார்க்க முடிந்தது.

இன்னும் சொல்லப்போனால், முகூர்த்த நாட்களுக்காக கூட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஓலாவில் இருந்து சலுகைகள் அறிவிக்கப்பட்டதை பார்க்க முடிந்தது. இதன் மூலமாக, கடந்த ஒரே மாதத்தில் சுமார் 10 ஆயிரத்து 117 ஓலா எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆர்டிஓ (RTO)-இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வஹான் (VAHAN) தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது 2026 பிப்ரவரியில் பதிவான 3,973 ஓலா வாகனங்கள் உடன் ஒப்பிடுகையில் சுமார் 150 சதவீதத்திற்கும் அதிகமாகும். குறிப்பாக, ஏற்கனவே கூறியதுபோல் கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 1,000 ஓலா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. சர்வீஸ் பணிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் மூலமாக இந்த அளவிற்கான தேவை கிடைத்துள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்த அளவிற்கு என்றால், விற்பனை செய்யப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் வாகனங்களில் 80 சதவீத வாகனங்களை ஒரே நாளில் இந்தியா முழுவதும் உள்ள தங்களது சர்வீஸ் மையங்கள் மூலமாக சர்வீஸ் செய்ய முடியும் என்கிறது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். மேலும், கடந்த 2025 மார்ச் மாதம் ஆனது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு முக்கியமான மாதம் ஆகும்.
ஏனெனில், ஒட்டுமொத்தமாக வஹான் தளத்தில் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையில் கடந்த மார்ச் மாதத்தில்தான் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 10 இலட்சம் என்கிற பிரம்மாண்டமான மைல்கல்லை எட்டியதாக அறிவித்தது. இதன் மூலம் உற்சாகமடைந்த ஓலா நிறுவனம் கடந்த மாதத்தில் அறிவித்த திட்டங்களில் 8 வருடங்களுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் முக்கியமானது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு இது சோதனை காலம் ஆகும். இதில் கடந்த மார்ச் மாதத்தில் சிறப்பான விற்பனையை பெற்றிருந்தாலும், இதனை வரும் மாதங்களுக்கு தொடர்ந்தால்தான் மார்க்கெட்டில் தனது பொசிஷனை ஓலா எலெக்ட்ரிக் மீண்டும் மீட்டெடுக்க முடியும். இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டு இருப்பது, கடந்த மார்ச் மாதத்தில் வஹான் தளத்தில் பதிவான ஓலா வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். கடந்த மாதத்தில் ஓலா எத்தனை வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்பது இதன் பின்னரே வெளிவரும்.


Click it and Unblock the Notifications








