ஒரு டைம்ல ஓலாவுக்கு எவ்வளவு பில்டப் கொடுத்தாங்க... இந்தியா-பாகிஸ்தான் போட்டியை விட நிலைமை சுமாரா இருக்கு!
கடந்த சில காலாண்டுகளாக ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் தனது இருசக்கர வாகன விற்பனையில் தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது. இந்தச் சரிவுக்கு, தயாரிப்பின் தரம் குறித்த பிரச்சனைகளல்ல என்றும், மாறாக சேவை தொடர்பான சவால்களே முக்கியக் காரணம் என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் (Bhavish Agarwal) சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாக இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனச் சந்தையில் ஓலா எலக்ட்ரிக் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வந்தது. இருப்பினும், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதன் விற்பனை கணிசமாகக் குறைய துவங்கியது. டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), ஏத்தர் எனர்ஜி (Ather Energy) மற்றும் ஹீரோ விடா (Hero Vida) போன்ற முன்னணி போட்டியாளர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) பிரிவில் தங்கள் சந்தைப் பங்கை கணிசமாக அதிகரித்து வருகின்றனர்.

ஓலா நிறுவனம் 2024இல் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது உண்மை. ஆனால், 2025ஆம் ஆண்டு இந்த நிறுவனத்திற்கு சவாலான காலமாக அமைந்தது. வாகனங்களை அதிகம் விற்பனை செய்யும் நிறுவனங்களின் தரவரிசைகளில் பின்தங்கியதுடன், போட்டி நிறுவனங்களிடம் சந்தைப் பங்கையும் பெரிய அளவில் இழந்தது.
பல ஓலா கஸ்டமர்கள் தங்கள் ஸ்கூட்டர்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், சேவை மையங்களில் பழுது பார்க்கும் பணிகளில் அதிக தாமதங்கள் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். ஸ்கூட்டர்கள் நீண்ட நாட்களுக்கு அந்தச் சேவை மையங்களிலேயே நிற்பதாகவும், பழுதுகள் உரிய நேரத்தில் சரிசெய்யப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இது வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெரிதும் பாதித்து, பிராண்ட் விசுவாசத்தைப் பலவீனப்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், வாடிக்கையாளர்கள் வலுவான சேவை சப்போர்ட்டையும், நம்பகத்தன்மையையும் வழங்கும் பிற நிறுவனங்களான டிவிஎஸ், பஜாஜ் ஆட்டோ, ஏத்தர் எனர்ஜி மற்றும் ஹீரோ விடா போன்ற பிராண்டுகளைப் பரிசீலிக்கத் தொடங்கினர். இந்த நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகன பிராண்டுகளாக ஓலா எலக்ட்ரிக்கைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாவிஷ் அகர்வால், "எங்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஒரு சவால் உள்ளது, அதை சரி செய்ய நாங்கள் உழைக்கிறோம். அது பிராண்ட் மீதான நம்பிக்கையையும், கடந்த சில காலாண்டுகளின் விற்பனையையும் பாதித்துள்ளது. செயல்படுத்துதலில் ஏற்பட்ட குறைபாடுகள் வருங்கால வாடிக்கையாளர்களிடையே பிராண்ட் நம்பிக்கையைப் பாதித்ததை ஒப்புக்கொள்கிறோம்.
இருப்பினும், இது சேவை அளவிலான பிரச்சனைதான், தயாரிப்புத் தரப் பிரச்சனை அல்ல," என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சேவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் நிறுவனம் தீவிரமாக உழைப்பதாகவும், இந்த மேம்பாடுகளுக்குச் சில காலம் ஆகலாம் என்றும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தவிர, ஓலா எலக்ட்ரிக் தனது தயாரிப்பு வரிசையையும் தீவிரமாக விரிவுபடுத்துகிறது.

'4680 பாரத் செல் பேட்டரி' (4680 Bharat Cell Battery) என்கிற பெயரில் தனது சொந்த பேட்டரி செல்களை உருவாக்கி, வெளிநாட்டு சப்ளையர்களைச் சார்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைத்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன், 'ரோட்ஸ்டர்' (Roadster) உட்பட ஒரு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நீண்டகால வளர்ச்சி யுக்தியின் ஒரு பகுதியாக, எதிர்காலத்தில் மேலும் பிரீமியம் தரத்திலான புதிய இவி மாடல்களை அறிமுகப்படுத்தவும் ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய 2-வீலர் சந்தையில் குறுகிய காலத்திலேயே பெரிதும் கவனத்தை ஈர்த்த நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக் என சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு, எளிமையான தோற்றம் கொண்ட எஸ்1 இ-ஸ்கூட்டர்கள் மூலம் ஓலா அறிமுகத்திற்கு முன்னதாகவே பெரிதும் கவனத்தை பெற்று இருந்தது.
ஆரம்பத்தில், டீலர்ஷிப் ஷோரூம்கள் இல்லாமல் இணையம் வாயிலாக ஆன்லைன் ஷாப்பிங் முறையை மட்டுமே ஓலா கடைப்பிடித்த நிலையில், ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஷோரூம்களின் தேவையை அறிந்து அவற்றை கொண்டுவர ஆரம்பித்தது. அதேபோன்று, ஓலா சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையும் வரும் காலங்களில் அதிகரிக்கும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications









