மக்கள் மீண்டும் வாங்க ஆரம்பித்திருக்கும் ஓலா ஸ்கூட்டர்கள்! எலெக்ட்ரிக் பைக்கிற்கும் கஸ்டமர்ஸ் அதிகரிப்பு!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் விற்பனையில் சில மாத சரிவுகளை அடுத்து, கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் ஓரளவிற்கு சிறப்பான வளர்ச்சியை விற்பனையில் கண்டுள்ளது. இதுகுறித்து வஹான் (VAHAN) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
2021ஆம் ஆண்டில் மார்க்கெட்டில் நுழைந்த போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 (S1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆனால், கடந்த 1 வருடமாகவே ஓலாவின் விற்பனை பெரிய அளவில் குறைய துவங்கியது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஓலாவின் விற்பனை அதாள பாதாளத்திற்கு சென்றது.

இதில் முழித்துக் கொண்ட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மார்ச் மாதத்திலும், கடந்த ஏப்ரல் மாதத்திலும் தொடர்ச்சியாக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்ததை பார்க்க முடிந்தது. இதன் விளைவாக, கடந்த மார்ச் மாதத்தில் 10 ஆயிரத்து 133 ஓலா எலெக்ட்ரிக் வாகனங்கள் நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ (RTO) அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வஹான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுவே, கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் இன்னும் ஒருபடி மேலாக 12 ஆயிரத்து 166 ஓலா எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வஹான் இணையத்தளம் தெரிவிக்கிறது. இதன்படி பார்க்கும்போது, ஓலா வாகனங்களின் விற்பனை ஆனது மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் 20% அதிகரித்துள்ளது.

மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் அதிக வாகனங்களை விற்பனை செய்த முன்னணி எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் விளங்குகிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓலா நிறுவனத்திற்கு சமீப மாதங்களாக உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது.
அதேபோல், ஓலாவின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) மெல்ல மெல்ல அதிக வரவேற்வை பெற துவங்கியுள்ளது. அதேநேரம், சொந்த முயற்சியில் உருவாக்கும் 4680 பாரத் செல்க பேட்டரிகளை தனது வாகனங்களில் வழங்குவதிலும் ஓலா தீவிரமாக உள்ளது. இதன் மூலமாக வாகன உற்பத்தி செலவை குறைத்து, நிலையான வணிகத்தை கடைப்பிடிக்க முடியும் என ஓலா எலெக்ட்ரிக் நம்புகிறது.
பொருத்தப்படும் வாகனத்தை பொறுத்து, ஓலா எலெக்ட்ரிக்கின் 4680 பாரத் செல் பேட்டரிகள் அதிகப்பட்சமாக 500கிமீ வரையில் ரேஞ்சை வழங்கக் கூடியவைகளாக உள்ளன. தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியில் உள்ள ஓலா தொழிற்சாலையில் ஓலாவின் சொந்த முயற்சியில் உற்பத்தி செய்யப்படும் இந்த பேட்டரிகள் தற்போதைக்கு எஸ்1 எக்ஸ்+, எஸ்1 புரோ, ரோட்ஸ்டர் எக்ஸ்+ உள்ளிட்ட ஓலா எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை 22% குறைந்துள்ளது. மார்ச்சில் 1 லட்சத்து 92 ஆயிரம் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 42 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
கடந்த மார்ச் 31ஆம் தேதியோடு எலெக்ட்ரிக் 2-வீலர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த ரூ.5,000 மானியம் நிறைவடைய இருந்ததால், எலெக்ட்ரிக் 2-வீலரை வாங்கும் ஐடியாவில் இருந்தவர்கள் மார்ச் மாதத்திலேயே வாங்கிவிட முண்டியடித்தனர். இதனால் ஏப்ரலில் வாங்குவதற்கு ஆள் இல்லை. அப்படியிருந்தும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனையில் 20% வளர்ச்சியை கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications