பெட்ரோலுக்கும் சேர்த்து பணம் கொடுக்கும் மனசு யாருக்கு வரும்! இது இல்லாம ரூ.20,000 சலுகை வேற!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் கடந்த சில வாரங்களாகவே புது, புது பெயர்களில் தொடர்ச்சியாக சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. சரிந்துவரும் விற்பனையை எப்படியாவது மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த அறிவிப்புகளை அது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'எண்ட்ஐஸ்ஏஜ்' (EndICEAge) என்கிற பெயரில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம், வாங்க.
ஓலா நிறுவனத்தின் இந்த சலுகையை பற்றி பார்ப்பதற்கு முன்னர், இந்த சலுகைக்கு அது சூட்டியிருக்கும் பெயரின் சுவாரஸ்யத்தை பற்றி பார்த்துவிடுவோம். எண்ட் ஐஸ் ஏஜ் என்பது ஒருபக்கம் பார்த்தால் பனிகாலம் முடிந்து கோடைக்காலம் துவங்குவதை குறிக்கிறது, அதுவே மறுப்பக்கம் பார்த்தால் பெட்ரோல்/டீசல் என்ஜின் வாகனங்களின் முடிவுக்காலத்தை குறிக்கிறது.

இண்டர்னல் கம்பஸ்ஷன் என்ஜின் (Internal Combustion Engine) என்பதன் சுருக்கமாகவும் ICE என்பதுதான் குறிப்பிடப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுவரும் போர் பதற்ற சூழலினால் கச்சா எண்ணெய்க்கும், எரிவாயுக்களுக்கும் உலகளவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால், பெட்ரோல்/ டீசல் பற்றாக்குறை குறித்த அச்சம் ஏற்கனவே இந்திய மக்கள் மத்தியிலும் ஏற்பட ஆரம்பித்து இருப்பதை பார்க்க முடிகிறது.
பெட்ரோல்/ டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா என்பது இன்னும் உறுதியாக கூற முடியாவிடினும், இந்த சூழலில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் நன்றாக கல்லா கட்ட ஆரம்பித்துள்ளன. ஏனெனில், நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர ஆரம்பித்து இருப்பதை பார்க்க முடிகிறது. சலுகைகள், தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு இருப்பது எல்லாம் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியே ஆகும்.

குறிப்பாக, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெவ்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக அதன் வாகனங்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்றதற்காக கூட ஓலா சலுகைகளை அறிவித்து இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால், ஓலாவின் இந்த எல்லா சலுகைகளும் 2- 3 நாட்கள் என மிகவும் குறுகிய கால சலுகைகளே ஆகும்.
தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் எண்ட்ஐஸ்ஏஜ் சலுகையும் கூட மார்ச் 16ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அறிவிப்பின்படி, ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (S1 Electric Scooters) மற்றும் ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் பைக்குகளை (Roadster Electric Bikes) வாங்குபவர்கள் சுமார் ரூ.20,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம்.
இதில் ரூ.10,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 வரையில் மதிப்பிலான 8 வருடத்திற்கு நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதம் (Battery Warranty) உள்ளிட்டவை அடங்குகின்றன. இதனுடன், ஹேஸ்டேக் எண்ட்ஐஸ்ஏஜ் உடன் சமூக வலைத்தளங்களில் புதிய முயற்சியையும் துவங்கியுள்ளது. அதாவது, ஹேஸ்டேக் எண்ட்ஐஸ்ஏஜ்-ஐ பதிவிட்டு புதிய ஓலா கஸ்டமர்கள் பெட்ரோல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக்கிற்கு மாறிய தங்களது அனுபவங்களை கூறுமாறு ஓலா கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ஹேஸ்டேக் எண்ட்ஐஸ்ஏஜ் உடன் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை டேக் (Tag) செய்து புதிய ஓலா கஸ்டமர்கள் தங்களது கடந்த மாத பெட்ரோல் செலவை ரசீது உடன் பதிவிட்டால், அடுத்த இரண்டு நாட்களுக்கு நாள் ஒன்றிற்கு அதில் தலா மூன்று வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பெட்ரோல் செலவை சரிச்செய்து கொடுக்கப்படும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் பெட்ரோலுக்கு ஆன செலவில் குறிப்பிட்ட தொகையை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் செலுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாதம் முழுவதும் ஒரே சலுகையை வழங்காமல், இவ்வாறு குறுகிய கால சலுகைகளை மாதம் முழுவதற்கும் வழங்குவது மக்கள் மத்தியில் இன்னும் கூடுதல் கவனத்தை ஈர்க்கும். இதில் இருந்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் விற்பனையை மேம்படுத்துவதில் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது.
மேலும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மத்திய அரசின் பிரதமர் இ-டிரைவ் (PM E-Drive) திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுவரும் ரூ.5,000 மானியம் ரத்து செய்யப்படுவதால் கணிசமான எண்ணிக்கையிலான இவி 2-வீலர் வாடிக்கையாளர்கள் குறைவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓலாவின் இவ்வாறான தொடர்ச்சியான சலுகைகள் கஸ்டமர்களை இந்த மார்ச் மாதத்திலேயே ஈர்க்கக்கூடும்.


Click it and Unblock the Notifications








