அடிமாட்டு விலையில் ஓலா வாகனங்கள் கிடைக்க போறதுக்கு காரணமான கண்டுப்பிடிப்பு! ஓசூரில் உற்பத்தி!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் சொந்த முயற்சியில் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP) பேட்டரியை தயாரிக்க அனைத்து விதங்களிலும் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஓலா எலெக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் குறையும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
ஓலா எலெக்ட்ரிக், இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களுள் ஒன்று. சமீப காலமாக ஓலாவின் விற்பனை குறைய துவங்கி இருந்தாலும், அதனை சரிச்செய்யும் விதமாக பல முயற்சிகளை ஓலா எலெக்ட்ரிக் மேற்கொண்டு வருகிறது. சொந்த முயற்சியில் 4680 பாரத் செல் (4680 Bharat Cell) பேட்டரிகளை உருவாக்கியது எல்லாம் அந்த முயற்சிகளின் ஒருபகுதியே ஆகும்.

அந்த வரிசையில் புதியதாக, தனது சொந்த முயற்சியில் சுருக்கமாக LFP எனப்படும் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரிகளையும் உருவாக்க ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தயாராகி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், முதல் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி மாதிரியை கூட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வடிவமைத்துவிட்டது. அதில் சில ஆய்வுகள் மற்றும் சோதனைகளை செய்து பார்த்த பின் தனது எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்துவதா அல்லது வேண்டாமா என்பதை ஓலா பின்னர் முடிவெடுக்கும்.
ஓலாவின் புதிய லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி செல் ஆனது 46100 கோள வடிவத்தில் உள்ளது. தற்சமயம் ஓலா எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் நிக்கல் மாங்கனீசு கோபால்ட் (NMC) பேட்டரி செல்லை காட்டிலும் புதிய LFP பேட்டரி செல் ஆனது அளவில் பெரியதாக உள்ளது. இந்த புதிய LFP செல்லை மும்பை பங்கு சந்தை (BSE) மற்றும் தேசிய பங்கு சந்தை என இரண்டிலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

பாதுகாப்பு கருதி முதற்கட்டமாக கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு சோதித்து பார்த்த பின்னர், ஓலா எலெக்ட்ரிக் வாகனங்களில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவதற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலா சமீப காலமாக வழங்கி வரும் 4680 பாரத் செல் பேட்டரிக்கு மாற்றாக புதிய LFP பேட்டரி கொண்டுவரப்படுகிறதா? என குழம்பி கொள்ள வேண்டும்.
ஏனெனில், 4680 என்பது பேட்டரியின் வடிவமைப்பை குறிக்கிறது. பேட்டரி செல் ஒன்றின் அகலம் 46மிமீ மற்றும் உயரம் 80மிமீ என்பதன் சுருக்கமே '4680' என்பதாகும். இதற்கு முன்னர் சீனா மற்றும் கொரியன் நிறுவனங்களில் 2170 பேட்டரி செல்களை ஓலா நிறுவனம் பயன்படுத்தி வந்த நிலையில், 4680 பாரத் செல் பேட்டரிகளை சொந்தமாக தனது ஓசூர் தொழிற்சாலையிலேயே உருவாக்கி தனது வாகனங்களில் வழங்க கடந்த சில மாதங்களாக ஓலா துவங்கியுள்ளது.
4680 செல் பேட்டரிகளை உலகளவில் பல நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன; என்ன... ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இவ்வாறான பேட்டரியை பயன்படுத்துகிறோம் என ஓப்பனாக அறிவித்துவிட்டு பயன்படுத்துகிறது. ஏனெனில், 2170 செல் பேட்டரிகளை விட 4680 செல் பேட்டரிகள் அதிக திறன் கொண்டவைகளாக விளங்குகின்றன. 2170 பேட்டரிகளை போன்று 4680 பேட்டரிகளும் நிக்கல்-மாங்கனீசு-கோபால்ட் கலவையில் தான் உருவாக்கப்படுகின்றன.
ஆனால், விரைவில் 4680 செல் பேட்டரிகள் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் கலவைக்கு மாற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படியே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் 4680 பாரத் செல் பேட்டரிகளில் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் கலவையை பயன்படுத்த துவங்க உள்ளது. இதற்கு காரணம், NMC-ஐ விட LFP ஆனது பாதுகாப்பானதாகவும், வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பில் மட்டுமில்லை, LFP பேட்டரிகளால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலைகளையும் குறைவாக நிர்ணயிக்க முடியும். இதன்படி, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம், LMFP எனப்படும் லித்தியம் மாங்கனீசு இரும்பு பாஸ்பேட் கலவையிலான 4680 செல் பேட்டரிகளும் பல வெளிநாடுகளில் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் அதனையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்களில் வழங்கலாம்.


Click it and Unblock the Notifications








