ஃபுல் சார்ஜில் 500கிமீ போகும் ஓலா பைக்! விலையில் ரூ.60,000 குறைச்சிட்டால் ஒண்ணுமே இல்லையே!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) ரோட்ஸ்டர் எக்ஸ்+ (Roadster X+)-இன் விலையை அதிரடியாக சுமார் ரூ.60,000 வரையில் குறைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதன்படி, ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்கை எவ்வளவு குறைவான விலையில் வாங்கலாம் என்பதைப் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
வாகனங்களை உற்பத்தி செய்வதில் தொடர்ந்து அதிகரித்துவரும் செலவுகளினாலும், போக்குவரத்து செலவுகளினாலும் மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலைகளை இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உயர்த்திவரும் நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மாறாக தனது ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்கின் விலையை குறைத்து ஷாக் கொடுத்துள்ளது.

மார்க்கெட்டில் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக் 4.5kWh மற்றும் 9.1kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 4.5kWh பேட்டரி உடன் ரூ.1.35 லட்சத்திலும், 9.1kWh பேட்டரி உடன் ரூ.1.90 லட்சத்திலும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், 9.1kWh பேட்டரி உடனான ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்கின் விலை சுமார் ரூ.60,000 குறைக்கப்பட்டு ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 4.5kWh பேட்டரியை காட்டிலும் அளவில் பெரியதான மற்றும் பவர்ஃபுல்லான 9.1kWh பேட்டரி உடன் ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்கை குறைந்த விலையில் வாங்கலாம்.

ஆனால் இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே ஆகும். குறுகிய காலத்திற்கு என்று கூட சொல்ல முடியாது, குறுகிய நேரத்திற்கு மட்டுமே. ஏப்ரல் 3ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரோட்ஸ்டர் எக்ஸ்+ 9.1kWh எலெக்ட்ரிக் பைக்குகளை மட்டுமே இந்த சலுகை உடன் வழங்க ஓலா திட்டமிட்டுள்ளது.
ரோட்ஸ்டர் எக்ஸ்+ 9.1kWh எலெக்ட்ரிக் பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஓசூரில் உள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஜிகா ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆற்றல்மிக்க வாகனம் இதுவாகும். எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானது என்றால், இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 500கிமீ தொலைவு வரையில் பயணிக்கலாம்.
இதனாலேயே இந்த ஓலா எலெக்ட்ரிக் பைக்கின் விலை சலுகை இல்லாமல் சுமார் ரூ.1.90 லட்சமாக உள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதல்முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக் அதன் பின்னர் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு அப்கிரேட் செய்யப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக்கின் இந்த சலுகையின் முக்கிய காரணமே விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, சொந்த முயற்சியில் உற்பத்தி செய்யும் 4680 பாரத் செல் (4680 Bharat Cell) பேட்டரிகளை அதிகளவில் மக்களிடம் கொண்டுப்போய் சேர்க்க வேண்டும் என்பதாகும். சலுகை விலையில் கிடைக்கும் ரோட்ஸ்டர் எக்ஸ்+ 9.1kWh எலெக்ட்ரிக் பைக்குகள் 4680 பாரத் செல் பேட்டரி உடன் வழங்கப்பட உள்ளன.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை கடந்த சில மாதங்களாக குறைந்ததை அடுத்து, கடந்த மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே தொடர்ச்சியாக சலுகைகளை ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து வருகிறது. இதன் மூலமாக, கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 10,117 ஓலா எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆர்டிஓ (RTO)-இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் வஹான் (VAHAN) தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








