வந்த வேகத்தில் காணாமல் போகும் ஓலா எலெக்ட்ரிக்! ஒரே மாதத்தில் பாதியாக குறைந்த விற்பனை!
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனச் சந்தை கடந்த சில வருடங்களில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. சமீப காலமாக சாலையில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் 2-வீலர்களை பார்க்க முடிவதுதான் இதற்கு சாட்சியாகும். குறிப்பாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters)-இன் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. இதனாலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளன.
அந்த வகையில், கடந்த 2026 பிப்ரவரி மாதத்திலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. வாஹன் போர்டல் (VAHAN Portal) தரவுகளின்படி, டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் தொடர்ந்து விற்பனை பட்டியலில் முதலிடத்தில் நீடித்து, அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

இருப்பினும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரையில், இந்தியாவின் எலெக்ட்ரிக் 2-வீலர் சந்தையில் பெரும் ஆதிக்கமாக விளங்கும் என கருதப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) தொடர்ந்து விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility) நிறுவனத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டு ஆறாவது இடத்திற்கு ஓலா எலெக்ட்ரிக் சரிந்துள்ளது.
மறுபுறம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சந்தையில் தனது ஆதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறது. ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்படும் டிவிஎஸ் 2026 பிப்ரவரியில் 31,601 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. 2026 ஜனவரி உடன் ஒப்பிடும்போது இது சற்று குறைவு என்றாலும், ஒட்டுமொத்த விற்பனை வலுவாகவே உள்ளது.

இதற்கு காரணம், டிவிஎஸ் ஐக்யூப் (iQube) இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகத் தொடர்ந்து திகழ்வது ஆகும். பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) தனது சேத்தக் இவி (Chetak EV) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. புனேவை மையமாகக் கொண்ட இந்த நிறுவனம் 2026 பிப்ரவரியில் 25,323 சேத்தக் இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.
இது கடந்த ஜனவரியில் 25,717 யூனிட்டுகளாக பதிவாகி இருந்தது. சேத்தக் அதன் உலோக உடல் அமைப்பு மற்றும் உறுதியான கட்டுமானத் தரத்திற்காக இந்த பிரிவில் தனித்து நிற்கிறது. ஏத்தர் எனர்ஜி (Ather Energy) 20,582 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்று மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அதுவே, 2026 ஜனவரியில் பதிவான 22,130 ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைவு. ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்பப் பயனர்களை அதிகம் ஈர்த்து, நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக மாறியதால், ஏத்தர் தனது சந்தையை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp)-இன் விடா எலெக்ட்ரிக் (Vida Electric), 2026 பிப்ரவரியில் 12,514 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. ஆனால், 2026 ஜனவரியில் 13,349 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹீரோ விடா விற்பனை செய்திருந்தது.
| Manufacturer | February 2026 | January 2026 |
|---|---|---|
| TVS Motor Company | 31,601 | 34,741 |
| Bajaj Auto | 25,323 | 25,717 |
| Ather Energy | 20,582 | 22,130 |
| Hero Vida | 12,514 | 13,349 |
| Greaves Mobility | 4,726 | 5,342 |
| Ola Electric | 3,968 | 7,531 |
ஹீரோ விடா பிராண்ட் தொடர்ந்து சந்தைப் பங்கை அதிகரித்து, ஓலா எலக்ட்ரிக்கை மிஞ்சி, எலெக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவில் தனது நிலையை வலுப்படுத்த நெருங்கியுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், ஹீரோ விடா மட்டுமின்றி, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை முந்தி கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமும் விற்பனை தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருப்பது பெரிய ஆச்சரியமாகும்.
அதன் ஆம்பியர் (Ampere) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மூலம் பிப்ரவரியில் ஓலா எலக்ட்ரிக்கை முந்திய கிரீவ்ஸ் நிறுவனம் 4,726 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை கிரீவ்ஸ் நிறுவனம் 2026 ஜனவரியில் பதிவு செய்திருந்த 5,342 யூனிட்களை விட குறைவாகும். அப்படியென்றால், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எந்த அளவிற்கு சரிந்துள்ளது என்பதை யோசித்து பாருங்கள்.
ஓலா எலக்ட்ரிக் குறிப்பிடத்தக்க விற்பனை சரிவைக் கண்டு, இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனச் சந்தையில் ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2026 பிப்ரவரியில் ஓலா நிறுவனம் வெறும் 3,968 எலெக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையை மட்டுமே பதிவு செய்துள்ளது. 2026 ஜனவரியின் 7,531 யூனிட்டுகளில் இருந்து இது ஒரு பெரிய வீழ்ச்சி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறுகிய காலத்தில் பெரிதும் கவனத்தை ஈர்த்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதே வேகத்தில் சரிவை சந்தித்து வருவது, இந்தியாவின் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் சந்தை எந்த அளவிற்கு மாற்றங்களை சந்தித்து வருகிறது என்பதற்கு சாட்சியாகும். அதேநேரம், டிவிஎஸ், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் சீரான வளர்ச்சியை பதிவுய் செய்து வருவது, மக்கள் முன்னணி 2-வீலர் பிராண்ட்களை எந்த அளவிற்கு நம்புகின்றனர் என்பதை காட்டுகிறது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் தொடர்ந்து போட்டி அதிகரிப்பதை வெளிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








