320 கிமீ ரேஞ்சு கொடுக்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. அதுவும் ரொம்ப கம்மி விலையில!
இந்தியாவில் பெரிய பேட்டரி பேக்குடன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்ட் ஒன்ற அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓலா. இந்தியாவில் S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது ஓலா. S1 X, S1 X+, S1 ப்ரோ மற்றும் S1 ப்ரோ+ எனப் பல்வேறு வேரியன்ட்களாக இந்த ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றல் அடிப்படையான S1 X வேரியன்டானது 2 kWh, 3 kWh மற்றும் 4 kWh பேட்டரி பேக் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சற்று மேம்பட்ட S1 X+ வேரியன்டோ 4 kWh பேட்டரி பேக் தேர்வை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நிலையில் தான் சற்று பெரிய 5.2 kWh பேட்டரி பேக் தேர்வுடன் கூடிய S1 X+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை தற்போது புதிதாக வெளியிட்டுள்ளது ஓலா.

இந்தப் புதிய மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 5.2 kWh பேட்டரி பேகில் ஓலா சொந்தமாக தயாரிக்கும் 4680 பாரத் செல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த 5.2 kWh பேட்டரி பேக்கானது S1 ப்ரோ+ வேரியன்டில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை புதிய S1 X+ வேரியன்டிலும் கொடுத்திருக்கிறது ஓலா.
இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே அதிக ரேஞ்சைக் கொண்டிருப்பது இந்த 5.2 kWh பேட்டரி கொண்ட S1 ப்ரோ+ தான். இந்த ஸ்கூட்டரானது சுமார் 320 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டிருந்தது. அதே அளவு ரேஞ்சையே புதிய S1 X+ 5.2 kWh வேரியன்டும் கொண்டிருக்கிறது. அதிக ரேஞ்சு மட்டுமின்றி மணிக்கு அதிகபட்சமாக 125 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது இந்த பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட்கள்.

11 kW பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் இந்தப் பெரிய பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இவற்றை அடிப்படையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக நாம் கருத முடியாது. இவற்றை பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வகையில் தான் நாம் சேர்க்க வேண்டும்.
அதிக பெர்ஃபாமன்ஸ் என்னும் போது அதிக பாதுகாப்பு வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும். எனவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பக்கம் டிஸ்க் பிரேகுடன், பிரேக்-பை-வயர் தொழில்நுட்பத்தையும் கொடுத்திருக்கிறது ஓலா. இதனால் சாலையில் அதிவேகத்தில் செல்லும் போது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். ஒரு வாகனத்தின் பிரேக்கிங் பவரே, அந்த வாகனம் அதிகபட்சமாக எவ்வளவு வேகம் வரை செல்ல முடியும் என்பதை மறைமுகமாக முடிவு செய்கிறது.
பெரிய பேட்டரி கொண்ட புதிய S1 X+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்டை ரூ.1.30 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது ஓலா. மேலும், இது அறிமுக விலை என்றும் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15ம் தேதி வரை இந்த அறிமுக விலையில் புதிய ஸ்கூட்டர் மாடலை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அதன் பின்னர் விலை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
இதற்கு கீழாக 4 kWh பேட்டரி பேக் கொண்ட S1 X+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்டானது ரூ.1.02 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும், 5.2 kWh பேட்டரி பேக் கொண்ட S1 ப்ரோ+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்டானது ரூ.1.45 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்து வரும் தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை நிலை நிறுத்தும் ஓலாவின் முயற்சிகளில் ஒன்றாக இதனை நாம் பார்க்கலாம். முன்னர் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுவனமாக இருந்தது ஓலா. தற்போது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்து, ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
பேப்பரில் சிறப்பான எண்களையே ஓலாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்ட் கொண்டுள்ளது. எனினும் நிஜத்தில் அதன் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்கும் என்பதனை இப்போதே நாம் கூற முடியாது. மேலும் இந்தக் புதி மாடலின் டெலிவரி தேதியையும் ஓலா தற்போது அறிவிக்கவில்லை. ஓலாவின் டெலிவரி வரலாறு சற்று சிக்கலானது தான். எனவே முதலில் வாடிக்கையாளர்களின் கைகளை இந்த ஸ்கூட்டர் அடைய வேண்டும்.


Click it and Unblock the Notifications








