டிவிஎஸ், ஏத்தருக்கு சவால்... 301 கிமீ ரேஞ்ச் கொண்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! விலை ரூ.99,999 மட்டுமே!
இந்தியாவின் முன்னனி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக், சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய ஓலா எஸ்1இசட் (Ola S1Z) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.79,999 என்ற மிகக் குறைந்த அறிமுக சலுகை விலையில் களமிறக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் செல் (Bharat Cell) பேட்டரி தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறைவான ரேஞ்ச் மற்றும் குறைந்தபட்ச அம்சங்கள் மட்டுமே இருக்கும் என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் இந்த எஸ்1இசட் மாடலை ஓலா வடிவமைத்துள்ளது. இந்த ஸ்கூட்டர் இரண்டு முக்கிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் விபரங்கள்
ஓலா எஸ்1இசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேஸ் வேரியண்ட் 3.1 kWh பேட்டரி பேக் அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 179 கிமீ வரையிலான ஐடிசி (IDC) சான்றுபடி ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி அலுவலகம் சென்று வருபவர்களுக்கும், நகரப் பகுதிகளுக்குள் அதிகம் பயணிப்பவர்களுக்கும் இந்த வேரியண்ட் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த வேரியண்ட்டிற்கு ரூ.79,999 எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சற்றே விலை உயர்ந்த வேரியண்ட்டான ஓலா எஸ்1இசட் பிளஸ் (Ola S1Z Plus) மாடலில் அதிக மின் ஆற்றலை சேமிக்கும் திறன் படைத்த 5.1 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது ஐடிசி சோதனை சான்றுகளின்படி 301 கிமீ என்ற மிக அதிக தூரம் பயணிக்கும் ரேஞ்சை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் அறிமுக விலை ரூ.99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செயல்திறன்
இரு வேரியண்ட்களிலும் அதிகபட்சமாக 4 kW அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இதில், 3.1 kWh மாடல் 0-40 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளில் எட்டும் நிலையில், 5.1 kWh வேரியண்ட் 4.9 வினாடிகளில் இந்த வேகத்தை எட்டுகிறது.
இதனால், S1 Z-ன் ஆரம்ப வேரியண்ட் நகர்ப்புற தினசரி பயன்பாட்டை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் நிலையில், 301 கிமீ ரேஞ்ச் கொண்ட 5.1 kWh மாடல் நீண்ட தூரம் பயணிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
உள்நாட்டு பேட்டரி தொழில்நுட்பம்
இந்த ஸ்கூட்டரின் முக்கியமான சிறப்பம்சம் அதன் பேட்டரி தொழில்நுட்பமாக கூறலாம். ஓலா நிறுவனம் தனது 46 Series LFP cell platform என்ற புதிய கட்டமைப்பு அடிப்படையிலான பேட்டரி செல்களை தனது புதிய தொழில்நுட்ப மையத்தில் உருவாக்கி, ஜிகாஃபேக்டரி ஆலையில் தயாரிப்பதாக தெரிவித்துள்ளது. S1 Z வரிசையில் இந்த உள்நாட்டு LFP தொழில்நுட்பத்தை ஓலா முதல்முறையாக தனது 'மாஸ் மார்க்கெட்' ஸ்கூட்டரில் கொண்டு வந்துள்ளது.
இந்த பேட்டரிகள் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் முதல் பிளஸ் 70 டிகிரி செல்சியஸ் வரையிலான அனைத்து வெப்பநிலைகளிலும் சீராக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பேட்டரிகளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் என ஓலா உறுதியளிக்கிறது. பேட்டரி தயாரிப்புக்கான செலவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த ஸ்கூட்டரை இவ்வளவு குறைந்த விலையில் வழங்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் அம்சங்கள்
குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக வந்தாலும், தொழில்நுட்ப வசதிகளில் எந்த குறைபாடும் வைக்கப்படவில்லை. ஓலா எஸ்1இசட் மாடலில் நிறுவனத்தின் புதிய மூவ் ஓஎஸ்5 (MoveOS 5) மென்பொருள் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓடிஏ (OTA) சாப்ட்வேர் அப்டேட்டுகள், ஜிபிஎஸ் டிராக்கிங், ரைடு குறித்த விபரங்கள், குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாதவாறு கட்டுப்படுத்தும் ஜியோ-ஃபென்சிங் வசதி மற்றும் டைம்-ஃபென்சிங் போன்ற நவீன ஸ்மார்ட் இணைப்பு வசதிகளை ஓலா மொபைல் ஆப் வழியாகப் பயன்படுத்த முடியும்.
டெலிவரி விவரங்கள்
புதிய ஓலா எஸ்1இசட் (3.1 kWh) மாடலுக்கான டெலிவிரிப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. அதேவேளையில், அதிக ரேஞ்ச் தரும் ஓலா எஸ்1இசட் பிளஸ் (5.1 kWh) மாடலின் டெலிவரி வரும் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த ஆரம்ப விலை, நீடித்த பேட்டரி ஆயுள் மற்றும் 300 கிமீ வரையிலான ரேஞ்ச் ஆகிய சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த ஓலா எஸ்1இசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

