இப்போ இந்த நிறுவனத்தோட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் அதிகமா விற்பனையாகுதாம்.. அப்படி இதுல என்ன இருக்கு?
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வந்த ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் விற்பனை கடந்த சில மாதங்களாக மீண்டு கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுவனம் என்றால் அது ஓலா எலெக்ட்ரிக் தான்.
வேறு எந்த நிறுவனமும் பெரிய அளவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யாத காலத்திலேயே அதிகபட்சமாக மாதம் 40,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரை ஓலா விற்பனை செய்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களினால் அதன் விற்பனை சரியத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக முதலிடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

மாதத்திற்கு 40,000 யூனிட்டுகளில் இருந்து வெறும் 5,000 யூனிட்டுகளாக அதன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை குறைந்தது. தொடர்ந்து விற்பனையை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை ஓலா மேற்கொண்டதாகத் தெரிகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் அனுகுமுறையை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு, சிறப்பாக சர்வீஸ் வழங்கும் வகையிலும் தங்களது ஷோரூம்களையும் சர்வீஸ் செண்ட்களையும் மேம்படுத்தியிருக்கிறது.
இதன் காரணமாக மீண்டும் அந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். மூன்றாவது மாதமாக, கடந்த மே மாதமும் ஓலாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை உயர்ந்திருக்கிறது. கடந்த மாதம் மட்டும் 15,139 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஓலா எலெக்ட்ரிக்.

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 23 சதவீதம் விற்பனை உயர்வாகும். கடந்த 2026 ஏப்ரலில்12,323 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்திருந்தது ஓலா. மார்ச் மாதமும் அந்நிறுவனத்தின் விற்பனை கணிசமான அளவில் உயர்ந்திருந்தது. சிறப்பான செயல்பாடுகளை தொடரும் பட்சத்தில் வரும் மாதங்களிலும் ஓலாவின் விற்பனை மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தான் ஓலாவின் விற்பனை சரியத் தொடங்கியது. கடந்தாண்டு மே மாதமும் 15,221 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையே ஓலா விற்பனை செய்திருந்தது. அத்துடன் ஒப்பிடும் போது தற்போது 90 யூனிட்டுகள் வரை குறைவாகவே விற்பனை செய்துள்ளது.
கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது விற்பனை அளவு கிட்டத்தட்ட ஒன்று தான் என்றாலும், சந்தைப் பங்குகள் மிகவும் குறைவு. ஏனெனில் போட்டி நிறுவனங்கள் எல்லாம் மிக அதிக அளவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் 50,000 யூனிட்டுகளுக்கு இணையாக ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யத் தொடங்கியிருக்கின்றன.
15,139 யூனிட்டுகள் விற்பனையுடன் கடந்த மே மாதம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை சந்தையில் 8.8 சதவீதம் சந்தைப் பங்குகளைக் கைப்பற்றியிருக்கிறது ஓலா. 2024 மே மாதத்துடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு. 2024 மே மாதம், அதாவது சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 49.5 சதவீதம் சந்தைப் பங்குகளைத் தன்வசம் வைத்திருந்தது ஓலா எலெக்ட்ரிக்.
அப்படியென்றால் 2024 மே மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் ஒன்று ஓலாவினுடையதாக இருந்தது. கடந்தாண்டு மே மாதம், அதாவது 2025 மே மாதம் இது 20 சதவீதமாகக் குறைந்தது. 2025 மேயில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐந்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் ஒன்றாக ஓலாவினுடையது இருந்தது. தற்போது அது இன்னும் குறைந்து பதினொன்றில் ஒன்றாக மாறியிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மூன்று மாதங்களாக ஓலாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை உயர்ந்திருக்கிறது. அது வரும் மாதங்களில் இன்னும் உயருமா அல்லது இதே இடத்தில் நிலை கொள்ளுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இந்தியாவில் சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் சொல்லலாம். அதன் சர்வீஸ் தான் அவ்வளவு சிறப்பானதாக இல்லாமல் இருந்தது.
அது தவிர ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையையும் குறைக்கும் வகையில் பல்வேறு செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அதெல்லாம் சேர்ந்து ஓலாவின் விற்பனையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அந்தக் குறைகளை எல்லாம் ஓலா களைந்திருக்கும் பட்சத்தில் வரும் மாதங்களிலும் அதன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை தொடர்ந்து உயரவே வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications