'மேட் இன் இந்தியா' ஸ்கூட்டர்களை களமிறக்கும் பியாஜியோ... ஆக்டிவா, ஜூபிடருக்கு போட்டியாக 2027-ல் களமிறங்குகிறது!
ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர் சந்தையை குறி வைத்து இத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ குழுமம் இந்திய சந்தைக்காக மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதுவரை இந்தியாவில் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா போன்ற பிரீமியம் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வந்த நிறுவனம், இனி அதிக விற்பனை நடைபெறும் கம்யூட்டர் ஸ்கூட்டர் (Commuter Scooter) பிரிவிலும் களமிறங்க தயாராகியுள்ளது. அதிலும் முக்கியமாக, இந்த புதிய ஸ்கூட்டர்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன.
பியாஜியோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டியாகோ கிராஃபி (Diego Graffi) தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்திய சந்தைக்கு மிகவும் பொருத்தமான அம்சங்களுடன் கூடிய புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடல்களை வரும் 2027ம் ஆண்டின் முதல் பாதியிலேயே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்காக பிரத்யேகமான பிளாட்ஃபார்மில் புதிய ஸ்கூட்டர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அதிக விற்பனை நடைபெறும் இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கைப்பற்றுவதே பியாஜியோவின் முக்கிய இலக்காக இருக்கிறது.

'மேட் இன் இந்தியா'
புதிய ஸ்கூட்டர்களின் வடிவமைப்பு, இன்ஜினியரிங், மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவை மையமாகக் கொண்டு நடைபெற்று வருகின்றன. அதன்பின், இந்த ஸ்கூட்டர்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் பராமதி (Baramati) தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன. தற்போது இதே ஆலையில்தான் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. புதிய திட்டம் காரணமாக இந்த தொழிற்சாலையின் உற்பத்தி திறனும் கணிசமாக அதிகரிக்கப்பட உள்ளது.
இந்தியாவுக்காக புதிய பிராண்டு
இதுவரை பியாஜியோ என்றாலே இந்தியாவில் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா என்ற இரண்டு பிராண்டுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், புதிய திட்டத்தில் உருவாக்கப்படும் இந்த புதிய ஸ்கூட்டர்கள் வெஸ்பா அல்லது ஏப்ரிலியா பிராண்டின் கீழ் வராமல் இந்தியாவுக்கான புதிய பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படும். அதாவது, இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை மையமாகக் கொண்ட முற்றிலும் புதிய கொள்கைத் திட்டத்தை பியாஜியோ குழுமம் எடுத்துள்ளது.
யாருக்கு போட்டியாக வருகிறது?
பியாஜியோ குழுமம் அறிமுகம் செய்யப்படும் புதிய மாடல்கள் இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 110, ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர்
அதாவது, இந்தியாவில் அதிக விற்பனையாகும் மாஸ் மார்க்கெட் ஸ்கூட்டர் சந்தையை குறிவைத்து இந்த புதிய மாடல்கள் வரும். அதேநேரத்தில், வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள் தொடர்ந்து பிரிமீயம் செக்மென்ட்டை குறிவைத்து தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.
தரத்தில் சமரசமிருக்காது
அந் நிறுவனத்தின் தலைவர் டியாகோ கிராஃபி கூறுகையில், இந்த புதிய ஸ்கூட்டர்கள் விலை சவாலாக வந்தாலும், பியாஜியோவின் பாரம்பரியமான பிரீமியம் அம்சங்கள், தரமான கட்டுமானம், வித்தியாசமான டிசைன் ஆகியவை தொடரும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, ஆக்டிவா போன்ற மாஸ் மார்க்கெட் ஸ்கூட்டராக இருந்தாலும், தோற்றம் மற்றும் தரத்தில் தனித்துவத்தை உருவாக்க பியாஜியோ முயற்சி செய்யும்.
ஏன் இந்த முடிவு?
கடந்த சில ஆண்டுகளாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர் பிரிவின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக 110cc முதல் 125cc வரை உள்ள கம்யூட்டர் ஸ்கூட்டர்கள்தான் மாதந்தோறும் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. மறுபுறம் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா போன்ற பிரீமியம் ஸ்கூட்டர்களின் விற்பனை அளவு குறைவாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில், அதிக விற்பனை கிடைக்கும் பிரிவில் நுழைவதன் மூலம் தனது சந்தைப் பங்கையும், உற்பத்தி அளவையும் உயர்த்த பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது.
எஞ்சின் எப்படி இருக்கும்?
பியாஜியோ இதுவரை எஞ்சின் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், இந்திய சந்தையின் தேவையை கருத்தில் கொண்டால், 110cc முதல் 125cc வரையிலான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படலாம் என்று ஆட்டோமொபைல் துறையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
எப்போது அறிமுகம்?
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2027-ம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி-மே) அறிமுகம் செய்யப்படும். பியாஜியோ குழுமம் வாகனத் தயாரிப்பில் நெடிய அனுபவமும், தரத்திற்கும் பெயர் போனதால், இந்த புதிய ஸ்கூட்டர்கள் மீதான எதிர்பார்ப்பும் வெகுவாக அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
பியாஜியோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஒரு புதிய ஸ்கூட்டர் அறிமுகம் மட்டுமில்லாமல், இந்திய சந்தையை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய வர்த்தக் கொள்கை மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இதுவரை வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா மூலம் பிரீமியம் வாடிக்கையாளர்களை மட்டுமே இலக்காக வைத்திருந்த நிறுவனம், இப்போது ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர், சுஸுகி அக்ஸெஸ் போன்ற மாடல்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிக விற்பனை பிரிவில் களமிறங்க உள்ளது.


Click it and Unblock the Notifications