வாங்குனா இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் வாங்கனும்.. ஏன் தெரியுமா?
இந்திய எலெக்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தாமதமாக நுழைந்த நிறுவனங்களில் யமஹாவும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டது யமஹா. EC-06 என்ற பெயரில் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. இது முழுமையாக யமஹாவே வடிவமைத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எனக் கூற முடியாது.
பெங்களூருவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஸ்டார்ட்-அப் நிறுவனமான ரிவர் மொபிலிட்டி (River Mobility) இந்தியாவில் இன்டீ (Indie) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனை செய்து வருகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டே புதிய EC-06 வடிவமைக்கப்பட்டிருக்கிறது. யமஹாவின் பெயரில் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்தியாவில் ரிவர் நிறுவனமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்தும் வருகிறது.

ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தில் முக்கியமான முதலீட்டாளராக உள்ளது யமஹா. ரிவர் மொபிலிட்டியின் மீதுள்ள நம்பிக்கையால் தான் அதன் தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. சரி, இந்த ஸ்கூட்டரை ஏன் வாங்க வேண்டும் அல்லது ஏன் வாங்கக்கூடாது என்பதற்கான சில காரணங்களை இங்கே நாம் பார்க்கலாம். இந்த ஸ்கூட்டரை வாங்க வேண்டும் அல்லது ஏதேனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்ற திட்டம் வைத்திருப்பவர்கள் இந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.
யமஹா EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏன் வாங்கலாம்?
இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தையில் தனித்துவமான டிசைனைக் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இருந்து வருகிறது. ஆனால், இது அனைவருக்கும் பிடித்த ஒரு டிசைனாக இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான். நிறையே பேர் இந்த டிசைன் தங்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், அதனை அடிப்படையாகக் கொண்ட யமஹா EC-06, அனைவருக்கும் பிடித்த வகையில் தனித்துவமான டிசைனைக் கொண்டுள்ளது.

முறையான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான லுக்குடன், அதே நேரம் பிராக்டிகலான அம்சங்களில் பெரிய அளவில் கைவைக்காமல் இந்த EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே ஒட்டுமொத்தமாக சிறப்பான ஹேண்டிலிங்கைக் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக இந்த EC-06ஐ கூறலாம். சேஸி, பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் என அனைத்து முக்கியமான அம்சங்களையும் தங்களுடைய தரத்திற்கு ஏற்ப யமஹா மாற்றியமைத்துள்ளது.
நல்ல பெர்ஃபாமன்ஸ் மற்றும் ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இந்த EC-06 இருக்கிறது. 9 hp பவர் மற்றும் 26 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 4 kWh பேட்டரி பேக்குடன், 169 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது.
EC-06 ஸ்கூட்டரை ஏன் தவிர்க்கலாம்?
ஸ்கூட்டர்களில் முக்கியமான அம்சமே அதன் பிராக்டிகாலிட்டி தான். பிராக்டிகாலிட்டி என்று வரும் போது அண்டர்சீட் ஸ்டோரேஜும் முக்கியமான ஒரு அளவுகோளாக இருக்கும். ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 43 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கும். பெரும்பான்மை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்ட போது அண்டர்சீட் ஸ்டோரேஜின் அளவு குறைந்துவிட்டது. தற்போது 24.5 லிட்டர் பூட் ஸ்பேஸை மட்டுமே கொண்டுள்ளது யமஹா EC-06.
மற்றொரு காரணம் சார்ஜிங் நேரம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் 450W சார்ஜரை மட்டுமே கொடுத்துள்ளது யமஹா. இந்த சிறிய சார்ஜரைக் கொண்டு EC-04ன் 4 kWh பேட்டரியை சார்ஜ் செய்ய 10 மணி நேரமும், 80% வரை சார்ஜ் செய்ய 8 மணி நேரமும் ஆகிறது.
இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் 750W சார்ஜர் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்ட, அதனை விட அதிக விலை கொண்ட இந்த EC-06 ஸ்கூட்டருக்கு அதனை விட சிறிய சார்ஜர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு நல்ல விஷயம் ரிவர் இன்டீயின் 750W சார்ஜரை இந்த EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடனும் நாம் பயன்படுத்த முடியும் என்பது.
விலை:
ஒரு தயாரிப்பு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், தரம் குறைவான இருந்தாலும் அதனை வாடிக்கையாளர்கள் வாங்குவார்களா இல்லையா என்பதை முடிவெடுக்க வைப்பதில் விலைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இந்த EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.68 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது யமஹா. இது ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (ரூ.1.50 லட்சம்) விட ரூ.18,000 அதிகமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிசைன் மட்டும் உங்களுக்குப் பிடித்திருந்தால் யமஹாவின் EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாற்றாக ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கூட நீங்கள் பரிசீலனை செய்யலாம். ஆனால் ஒரே பிரச்சினை அனைத்து ஊர்களிலும் சர்வீஸ் செண்டர்கள் மற்றும் விற்பனை மையங்கள் இருக்குமா என்பது தான். உங்கள் ஊரில் இருந்தால் கண்டிப்பாக அதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலூர் என எட்டு நகரங்களில் 12 ரிவர் மொபிலிட்டி டீலர்ஷிப்கள் செயல்பட்டு வருவதாக தங்களுடைய அதிகார்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








