ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் விலையில் எலெக்ட்ரிக் பைக்! மத்திய அரசு கைவிட்டாலும் பைக் கம்பெனி கைவிடல!
ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors), இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளை நீண்ட காலமாக விற்பனை செய்து, நாட்டின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (Electric Motorcycle) நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக சலுகை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரூ.25,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசாங்கம் கடந்த சில வருடங்களாகவே பிரதமர் இ-டிரைவ் (PM E-Drive) திட்டத்தின்கீழ் மானியம் வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதற்கு பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் மானியம் முக்கிய காரணம் ஆகும்.

இப்படிப்பட்ட இந்த மானிய திட்டத்தை இந்த மார்ச் மாதத்தோடு மத்திய அரசு நிறுத்தவுள்ளது. இந்த திட்டத்தை தொடர்வதற்கான எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளிவரவில்லை. இந்த மானிய திட்டத்தின்படி ஒவ்வொரு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கும் தலா ரூ.5,000 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது பெரிய தொகை இல்லையென்றாலும், இது நிறுத்தப்படுவதால் எலெக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை சமாளிக்கும் முயற்சியாக இந்த மார்ச் மாதத்திலேயே முடிந்தவரையில் அதிக வாகனங்களை விற்க எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன. அதன்படி, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமும், ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் கடந்த சில தினங்களாக சலுகைகளை அறிவித்ததை பார்த்திருந்தோம். அந்த வரிசையில் தற்போது ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் மார்ச் மாத சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, மார்ச் 31ஆம் தேதிக்குள் ரிவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை வாங்குவோர் ரூ.25,000 வரையிலான சலுகைகளை பெறலாம். இதன் மூலமாக, ரூ.4,999 மதிப்பிலான இன்ஸ்சூரன்ஸ் (Insurance) மற்றும் கூடுதல் உத்தரவாதத்தை இலவசமாக பெறலாம். மேலும், வாங்கும் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை பொறுத்து ரூ.8,000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.
இவற்றுடன், பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் இந்த மார்ச் மாதத்தில் ரூ.5,000 சலுகையை பெறலாம். இவை எல்லாம் சேர்த்து இந்த மார்ச் மாதத்தில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்குபவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.25,000 வரையிலான சலுகைகள் கிடைக்கும் என ரிவோல்ட் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை அறிய ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூமை அணுகலாம்.
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஆர்வி1 (RV1), ஆர்வி பிளேஸ் எக்ஸ் (RV BlazeX) மற்றும் ஆர்வி400 (RV400) என்கிற மூன்று எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், 4 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் ஆர்வி1 எலெக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.1 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
அதிகப்பட்சமாக மணிக்கு 70கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய ஆர்வி1 எலெக்ட்ரிக் பைக்கில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். அதுவே, மற்ற ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகளான ஆர்வி பிளேஸ் எக்ஸ் மற்றும் ஆர்வி400-இன் டாப்-ஸ்பீடு 85kmph மற்றும் ரேஞ்ச் 150கிமீ ஆகும். இவற்றின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.25 லட்சம் மற்றும் ரூ.1.43 லட்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகளின் ஆன்-ரோடு (On-road) விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து பெரியதாக வித்தியாசம் இல்லாமல் இருப்பதற்கு மத்திய அரசின் பிரதமர் இ-டிரைவ் மானியம் முக்கியமானது. அத்தகைய மானியம் இல்லாமல் போவதால், ரிவோல்ட் பைக்குகளின் விற்பனை ஏப்ரலில் இருந்து சற்று சரிவை சந்திக்கக்கூடும். ஆதலால், கஸ்டமர்களை இந்த மார்ச் மாதத்திலேயே அதிகம் பெறும் முயற்சியாக ரிவோல்ட் நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது. இது எந்த அளவிற்கு பலன் அளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








