மணிக்கு 90கிமீ வேகத்தில் சீறிப்பாயும் புதிய எலெக்ட்ரிக் பைக்... எங்களை கேட்டால் இந்த கலரில் வாங்குவதே சிறந்தது
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக RVX என்கிற எலெக்ட்ரிக் பைக் கடந்த ஜூலை 2ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெவோல்ட் நிறுவனத்தின் பிரதானமான மோட்டார்சைக்கிளான RV400 உடன் ஒப்பிடுகையில் சில கூடுதல் வசதிகள் உடன் களமிறக்கப்பட்டுள்ள புதிய RVX எலெக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1,24,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற ரெவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகள் உடன் ஒப்பிடுகையில் சற்று திருத்தியமைக்கப்பட்ட டிசைன், அதிக பவர்ஃபுல்லான மோட்டார் உள்பட இன்னும் சில மாற்றங்கள் உடன் இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் புதிய ரெவோல்ட் RVX அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று கலர் ஆப்ஷன்களிலும் எந்தெந்த மாதிரியான தோற்றத்தில் RVX கிடைக்கும் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரெபெல் சிவப்பு
இந்த சிவப்பு நிறமானது, கிட்டத்தட்ட ரெவோல்ட் RV400 எலெக்ட்ரிக் பைக்கின் எக்லிப்ஸ் சிவப்பு நிறத்திற்கு இணையாக உள்ளது. ஆனால், புதிய RVX பைக்கின் இந்த சிவப்பு நிறம் சற்று பிரகாசமாக உள்ளது. இந்த கலர் ஆப்ஷனில், ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ள வெள்ளை நிற கிராஃபிக்ஸ் பைக்கிற்கு கம்பீரமான தோற்றத்தை வழங்கியுள்ளன. ஆதலால், சாலையில் செல்லும் போது மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிய வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த ரெபெல் சிவப்பு கலர் ஆப்ஷன் ஏற்றதாக இருக்கும்.
எலெக்ட்ரிக் நீலம்
கலர் ஆப்ஷனின் பெயருக்கேற்றாற்போல், இந்த கலர் ஆப்ஷனில் பைக் பளிச்சிடும் நீல நிறத்தில் கிடைக்கும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான நிறமாக நீலம் பார்க்கப்படுவதால், புதிய RVX பைக்கை எலெக்ட்ரிக் நீல நிறத்தில் வாங்கலாம். இருப்பினும், பைக்கை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிற கிராஃபிக்ஸ் ஆனது ரெபெல் சிவப்பு நிறத்தை ஒத்ததாக உள்ளது. இதனால், ரெபெல் சிவப்பை போன்று இந்த நிறத்திலும் கம்பீரமாக RVX காட்சியளிக்கிறது.

காஸ்மிக் கருப்பு
மேற்கூறப்பட்ட மற்ற இரு கலர் ஆப்ஷன்களில் இருந்து வேறுப்பட்ட நிறத்தில் பிரத்யேகமாக இந்த எலெக்ட்ரிக் பைக்கை வாங்க விரும்புபவர்களுக்கு காஸ்மிக் கருப்பு ஏற்றதாக இருக்கும். ஏனெனில், இதில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டுமின்றி, கோல்டன் நிறமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற இரு கலர் ஆப்ஷன்களை காட்டிலும் இதில் பைக் பிரீமியம் தரத்தில் தோற்றமளிக்கிறது. குறிப்பாக, கோல்டன் நிறத்திலான முன்பக்க தலைக்கீழான சஸ்பென்ஷன் ஃபோர்க் நம்மை வசீகரிக்கிறது.
புதிய ரெவோல்ட் RVX எலெக்ட்ரிக் பைக்கில் 4 கிலோவாட்ஸ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரின் மூலமாக அதிகப்பட்சமாக 5.3 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இதன் மூலமாக, இந்த பைக்கில் 0-இல் இருந்து மணிக்கு 40கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடலாம்.
இருப்பினும், இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கை மணிக்கு 90கிமீ வேகத்திற்கு மேல் கொண்டு செல்ல முடியாது. இந்த பைக்கில் எலெக்ட்ரிக் மோட்டாரில் 3.24kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. பைக்கில் இருந்து வெளியே எடுக்கக்கூடிய இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகபட்சமாக 160கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். தற்போதைக்கு ஸ்டாண்டர்ட் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் RVX அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய RVX எலெக்ட்ரிக் பைக் ஆனது மார்க்கெட்டில் கணிசமான கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜூலை 2ஆம் தேதி இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த பைக்கை மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம் என்பதை ஜூலை 3ஆம் தேதி அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications