245 சதவீதம் உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை.. இது தான் காரணமா!
இந்தியாவில் இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கிக் குவித்து வருவது புதிய செய்தி கிடையாது. முன்னர் 6 சதவீதமாக இருந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை இந்த 2026ம் ஆண்டு 8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றவுடன் டிவிஎஸ், பஜாஜ், ஹீரோ விடா மற்றும் ஏத்தர் ஆகிய முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டும் தான் நாம் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.
ஆனால், இந்த முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தவிர்த்து, பல்வேறு சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையும் முன்னருடன் ஒப்பிடும் போது பலமடங்கு உயர்ந்து வருகிறது. அப்படியான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் ரிவர் மொபிலிட்டி (River Mobility) விற்பனை செய்து 'இன்டீ' (Indie).

கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இந்த இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை சுமார் 245 சதவீதம், அதாவது சுமார் இரண்டரை மடங்கு உயர்ந்திருக்கிறது. 2025 மே மாதம் இந்தியாவில் மொத்தமாக 1,078 இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது ரிவர். தற்போது அது 3,720 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கிறது. மேலே கூறியது போல சுமார் 245 சதவீதம்.
இந்த விற்பனை அளவுடன் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை சந்தையில் 2.18 சதவீதம் சந்தைப் பங்குகளையும் கைப்பற்றியிருக்கிறது ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தென்னிந்தியாவிலேயே பிரதானமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் இதன் டீலர்ஷிப்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ப்ரீமியமான மற்றும் தனித்துவமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்றால் ரிவர் இன்டீ ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பெரிதாக இருக்கும் இதன் அளவு மற்றும் பிராக்டிகாலிட்டி வசதிகள் காரணமாக இதனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எஸ்யூவி என அழைக்கிறது ரிவர் மொபிலிட்டி நிறுவனம்.
1.53 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) என்ற விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 4 kWh பேட்டரி பேக் மூலம் 160 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை நாம் பெற முடியும். 9 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது. இதனால் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வரையிலான வேகத்தில் இந்த ஸ்கூட்டரில் நாம் பயணம் செய்ய முடியும்.
பிராக்டிகாலிட்டி அம்சங்களில் தான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றவற்றில் இருந்து தனித்துத் தெரிகிறது. இந்தியாவிலேயே பெரிய அண்டச்ஸீட் ஸ்டோரேஜுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ரிவர் இன்டீ தான். சுமார் 43 லிட்டர் வரையிலான ஸ்டோரேஜ் ஸ்பேஸைக் கொண்டுள்ளது. இத்துடன் 12 லிட்டர் வரையிலான லாக்கபிள் கிளவ்பாக்ஸும் முன்பக்க ஏப்ரனில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவும் போதவில்லை என்றால் சைடில் பேனியர்கள் மற்றும் பின்பக்கம் டாப் பாக்ஸை வைத்துக் கொள்ளும் வகையிலான அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர் மொபிலிட்டி கொடுத்திருக்கிறது. இதன் டிசைன் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று சொல்ல முடியாது. இதன் தனித்துவமான டிசைன் உங்களுக்குப் பிடித்திருந்தால், தினசரி பயன்பாட்டிற்கு வாங்கிப் போடும் அளவிற்கு சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் இது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை சற்று அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற வகையில் பெர்ஃபாமன்ஸ் மற்றும் பிராக்டிகாலிட்டியைக் கொண்டிருக்கிறது இந்த ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். மேலும் இதன் பேட்டரி 5 மணி நேரத்திலேயே அதிகவேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வேறு ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன் ஒருமுறை இந்த ரிவர் இன்டீயையும் டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications