இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்த இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்கூட்டரின் விற்பனை.. அப்படியென்ன இருக்கு?
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை கடந்த ஜூன் மாதம் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் 1,93,495 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையாகியிருக்கின்றன. இந்தாண்டு மார்ச் மாதத்திற்குப் பின்பு இது ஒரே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிகபட்ச விற்பனை அளவாகும். மார்ச் மாதம் இந்தியாவில் 1,99,386 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடங்களில் யார் இருப்பார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் தான் அது. நாம் இங்கே பார்க்கப் போவது ஒரு சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைப் பற்றி. பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிவர் மொபிலிட்டி (River Mobility) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய உயரங்களை ஒவ்வொரு மாதமும் எட்டி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் சுமார் 4,391 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் இது கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 214 சதவீதம் அதிக விற்பனையாகும். ஆம், கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது ரிவர் மொபிலிட்டியின் விற்பனை அளவு கடந்த ஜூன் மாதம் இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் 1,399 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
யமஹா இந்ந ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தில் முக்கிய முதலீட்டாளராக இருப்பது, இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் யமஹா இந்தியாவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டதும், வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அது விற்பனையிலும் எதிரொலித்திருக்கிறது.

இந்தியாவில் தற்போது இன்டீ (Indie) என்ற ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே ரிவர் மொபிலிட்டி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் தான் யமஹாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான EC-06ம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனையும் ரிவர் மொபிலிட்டி தான் உருவாக்கி, யமஹாவிற்காக கர்நாடகாவில் இருக்கும் தங்களது தொழிற்சாலையில் தயாரித்துக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே, யமஹாவின் EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால், அதற்குப் பதிலகா ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைக் கூட பரிசீலனை செய்யலாம். யமஹாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட ரிவர் இன்டீ குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், EC-06ஐ விட சில கூடுதல் அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
கடந்த ஜூன் மாத விற்பனையுடன் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் 2 சதவீதம் சந்தைப் பங்குகளையும் கைப்பற்றியிருக்கிறது ரிவர் மொபிலிட்டி நிறுவனம். மேலும், டாப் 10 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பட்டியலில் கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி அடுத்தபடியாக, ஏழாவது இடத்தில் இருக்கிறது ரிவர் மொபிலிட்டி.
முதல் ஐந்து இடங்களில் டிவிஎஸ், பஜாஜ் ஆட்டோ (சேட்டக்), ஏத்தர் எனர்ஜி, ஹீரோ மோட்டோகார்ப் (விடா) மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இதே வேகத்தில் சென்றால் இந்தியாவில் குறிப்பிடத்தக்க விற்பனையைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக விரைவில் ரிவர் மொபிலிட்டி நிறுவனம் உருவெடுத்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வந்தாலும், தனித்துவமான டிசைனுடன், மிகவும் பிராக்டிகலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அதனை விற்பனை செய்து வருகிறது ரிவர் மொபிலிட்டி. மேலும், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கூட்டர்களிலேயே பெரிய அண்டர் சீட் ஸ்டோரேஜைக் கொண்டது ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான். சுமார் 43 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜை ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications