ராயல் என்ஃபீல்டு வெளியிடும் புதிய பைக் இது தான்.. இவ்வளவு கம்மி விலையிலையா?
ராயல் என்ஃபீல்டு சீக்கிரமா வெளியிடுங்க என வாடிக்கையாளர்கள் ஆர்வமாகக் கேட்டு வரும் ஒரு பைக் மாடலாக புல்லட் 650 இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பாவில் நடைபெற்ற EICMA நிகழ்வில் இந்த கிளாஸிக் க்ரூஸர் பைக்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு. அதனைத் தொடர்ந்து அதே நவம்பர் மாதமே கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்வில் இந்தியாவிலும் இந்த பைக்கைக் அறிமுகப்படுத்திவிட்டது.
தொடர்ந்து கடந்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் மாதங்களில் இந்த புல்லட் 650 பைக்கை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் அது வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தான் வரும் ஜூன் மாதம் இந்த பைக் கண்டிப்பாக இந்தியாவில் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையில் புல்லட் 650-யின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை எதிர்பார்ப்பு ஆகிய தகவல்களைப் பார்க்கலாம்.

கிளாஸிக் 650-யின் வெளியீட்டிற்கு ராயல் என்ஃபீல்டு மேற்கொண்ட அதே பாதையையே புல்லட் 650-க்கும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. கிளாஸிக் 650 பைக்கை 2024ம் ஆண்டு நடைபெற்ற EICMA நிகழ்வில் முதலில் அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு, தொடர்ந்து 2025 மார்ச் மாதம் இந்தியாவில் வெளியிட்டுவிட்டது. ஆனால் புல்லட் 650 பைக்கிற்கு காலம் தாழ்த்தி வருகிறது.
ராயல் என்ஃபீல்டின் மற்ற 650 சிசி பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே 648 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, பேரரல் ட்வின் இன்ஜினே புதிய புல்லட் 650 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 47 hp பவர் மற்றும் 52.3 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

பார்த்தவுடனேயே புல்லட் பைக் என்று கண்டுகொள்ளும் வகையிலான டிசைன் லாங்குவேஜையே புதிய புல்லட் 650 கொண்டுள்ளது. ஒன்று போல டிசைன் என்றாலும் 350-யை விட 650 சிசி பைக்கானது பெரிதாகவும் மஸ்குலராகவும் இருக்கிறது. மேலும் ப்ரீமியமாக இருப்பதோடு, சாலைகளில் செல்லும் போது ரோடு பிரசன்ஸும் 350 புல்லட்டை விட 650 சிசி புல்லட்டிற்கு சிறப்பாகவே இருக்கும்.
இந்த ஓல்டு ஸ்கூல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக்கில் LED முகப்பு விளக்குகளை ராயல் என்ஃபீல்டு கொடுத்திருந்தாலும், டெயில் லேம்ப் மற்றும் இன்டிகேட்டர்களுக்கு வழக்கமான பல்பு யூனிட்டுகளே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ரெட்ரோ பைக் என்ற ஃபீலையும் ராயல் என்ஃபீல்டு தக்க வைக்க நினைக்கிறதோ. 243 கிலோ எடையுடன் மற்ற எந்த ராயல் ராயல் என்ஃபீல்டு பைக்கையும் விட கனமான பைக்காக புல்லட் 650-யே இருக்கிறது.
கேனன் பிளாக் மற்றும் பேட்டில்ஷிப் ப்ளூ ஆகிய இரண்டு தனித்துவமான நிறங்களுடனேயே இந்த பைக் தற்போது பட்டியலிடப்பட்டிருக்கிறது. பைக்கின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும் கிளாஸிக் 650 பைக்கை விட 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை குறைவான விலையில் புல்லட் 650 பைக் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 650 பைக்கானது 3.64 லட்சம் ரூபாய் முதல் 3.79 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புல்லட் 650 பைக்கை இன்னும் குறைவாக 2.90 லட்சம் ரூபாய் விலையில் கூட ராயல் என்ஃபீல்டு வெளியிடலாம் என சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
ராயல் என்ஃபீல்டின் அனைத்து 650 சிசி பைக்குகளுமே 3 லட்சம் ரூபாய்க்கு மேலான விலையையே கொண்டுள்ளன. மேலும் கடந்தாண்டு தான் 350 சிசிக்கு மேலான பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உயர்த்தியது. இந்த அனைத்து காரணங்களையும் வைத்துப் பார்க்கும் போது 3.50 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையிலேயே புல்லட் 650 பைக் வெளியாக வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புல்லட் 350 பைக்கில் இருந்து அப்கிரேடு செய்வதற்கு புல்லட் 650 சிறந்த சாய்ஸ். சிறிய புல்லட்டை வைத்து ஓவர்டேக்குகளில் திணறுவது போல இருக்காது 650 புல்லட். நெடுஞ்சாலைகளில் கார்களைக் கூட அசால்ட்டாக ஓவர்டேக் செய்யும் அளவிற்கு பவரை இந்த பைக் பெற்றிருக்கிறது. விரைவிலேயே இந்த பைக்கிற்கான முன்பதிவு தொடங்கும் எனத் தெரிகிறது. தொடங்கியவுடனே புக் செய்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications