ராயல் என்ஃபீல்டின் புது புல்லட் பைக்கை வாங்கலாமா? BSA கம்பெனியிடம் இன்னும் சூப்பரான பைக்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து புதியதாக புல்லட் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த பைக்கிற்கு BSA மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் கோல்டு ஸ்டார் 650 பைக் நேரடி போட்டியாக உள்ளது. இந்த இரு 650சிசி பைக்குகளில் எதை வாங்குவது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
என்ஜின் (Engine): புதிய புல்லட் 650 பைக்கில் 270-டிகிரி சாய்வான நிலையில் டபுள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது மென்மையான இயக்கத்திற்கும், அசத்தலான சைலன்சர் சத்தத்திற்கும் வழிவகுக்கக் கூடியதாக உள்ளது. மறுபக்கம் BSA கோல்டு ஸ்டார் 650 பைக்கில் சிங்கிள்-சிலிண்டர் என்ஜினாக இருப்பினும், பெரிய அளவிலான 650சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.

ரோடாக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கோல்டு ஸ்டார் பைக்கின் இந்த 650சிசி என்ஜின் ஆனது உடனடியாக அதிக டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ளது. மேலும், குறைவான வேகத்தில் இயங்கும்போதும் டார்க் திறனை சிறப்பாக வழங்குவதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளிலும் இந்த பைக்கை எளிதாக இயக்கி செல்ல முடியும்.
ஹேண்ட்லிங் & எடை: BSA கோல்டு ஸ்டார் 650 பைக் ஆனது கிட்டத்தட்ட 30 கிலோ எடை குறைவானதாக உள்ளது. அதுமட்டுமின்றி, முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தையும் குறைவாக கொண்டுள்ளது. மேலும், இந்த பைக்கில் வழங்கப்படும் பைரெல்லி டயர்கள் வளைவுகளில் திரும்பும்போது கூடுதல் தைரியத்தை வழங்குகின்றன. அதேநேரம், புதிய புல்லட் 650 பைக் கோல்டு ஸ்டார் 650 பைக்கை காட்டிலும் எடைமிக்கதாக இருப்பினும் ஹேண்ட்லிங் செய்வதில் பெரியதாக சிரமமாக இல்லை.

ரைடிங் பொசிஷன் (Riding Position): தரையில் இருந்து ரைடர் அமரும் இருக்கையின் உயரத்தை புல்லட் 650 பைக் 800மிமீ-இல் பெற்றிருக்கும் நிலையில், கோல்டு ஸ்டார் 650 பைக் 780மிமீ-இல் சற்று குறைவான உயரத்தில் கொண்டிருப்பதால் உயரம் குறைவானவர்களாலும் இந்த BSA பைக்கை எளிதாக ஹேண்ட்லிங் செய்ய முடியும். அதுமட்டுமின்றி, புல்லட் 650 பைக்கில் வழங்கப்பட்டுள்ள 2-சிலிண்டர் என்ஜின் ஆனது பைக்கில் இருந்து வெளியே தெரியும் அளவிற்கு சற்று அகலமாக உள்ளது.
தொழிற்நுட்ப வசதிகள்: புதிய புல்லட் 650 பைக்கில் அட்ஜெஸ் செய்யக்கூடிய லிவர்கள் மற்றும் பயணத்திற்கான வழிக்காட்டியை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது. அதுவே, கோல்டு ஸ்டார் 650 பைக் ஆனது பழைய BSA கோல்டு ஸ்டார் பைக்கை போன்று பாரம்பரியமான டாஷ்போர்டு திரையை கொண்டுள்ளது. இருப்பினும், இந்த பைக்கில் USB சார்ஜிங் போன்ற மாடர்ன் வசதிகளை பெறலாம்.
சர்வீஸ் நெட்வொர்க் (Service Network): ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் எந்த அளவிற்கு பரந்து விரிந்த சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் உள்ளது என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். மேலும், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கான உதிரி பாகங்களை பெறுவதும் சிரமம் இல்லாத ஒன்றாகவே உள்ளது. அதுவே, BSA பிராண்ட் ஆனது நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில்தான் மீண்டும் இந்திய மார்க்கெட்டில் நுழைந்துள்ளதால், அதன் நெட்வொர்க் இன்னும் பெரியதாக விரிவடையவில்லை.
| Feature | Royal Enfield Bullet 650 | BSA Gold Star 650 |
| Engine | 648cc, parallel-twin, air/oil-cooled | 652cc, single-cylinder, liquid-cooled |
| Output | 47 hp @ 7,250 rpm | 52.3 Nm @ 5,650 rpm | 45 hp @ 6,500 rpm | 55 Nm @ 4,000 rpm |
| Transmission | 6-speed with slipper clutch | 5-speed with slipper clutch |
| Kerb Weight | ~243 kg | 213 kg |
| Seat Height | 800 mm | 780 mm |
| Brakes (F/R) | 320mm / 300mm Disc (Dual-channel ABS) | 320mm / 255mm Disc (Dual-channel ABS) |
| Estimated Price | ~₹3.65 Lakh (Ex-showroom) | ₹3.34 Lakh - ₹3.46 Lakh (Ex-showroom) |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு 650சிசி பைக்குகளில் ஒன்றை தேர்வு செய்வது உண்மையில் சவாலான ஒன்றே. இருப்பினும் சற்று உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால், என்ஜின் ஆற்றலில் புல்லட் 650 பைக் 2 எச்பி அதிகமானதாகவும், கோல்டு ஸ்டார் 650 பைக் 2.7 என்.எம் கூடுதலான டார்க் திறனை வழங்கக் கூடியதாகவும் உள்ளதை அறியலாம்.
அதேபோல், விலையிலும் புல்லட் 650 பைக் ஆனது கோல்டு ஸ்டார் 650 பைக்கை காட்டிலும் 20 ஆயிரம் ரூபாய் அளவிற்கு விலை குறைவானதாக உள்ளது. எடையிலும், சுமார் 30 கிலோ அளவிற்கு எடை குறைவானதாக உள்ளதால், இந்த இரு பைக்குகளில் எங்களது சாய்ஸ் BSA கோல்டு ஸ்டார் 650 ஆகும். இருப்பினும், புதிய புல்லட் 650 பைக்கில் 6 கியர்கள் வழங்கப்பட்டு இருப்பதையும், ராயல் என்ஃபீல்டின் பரந்து விரிந்த நெட்வொர்க்கையும் மறந்துவிட வேண்டாம்.
பைக்குகளின் ஒப்பீடு அட்டவணை புதியதாக சேர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications