ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக்கில் 2 சூப்பர் வசதிகள் அறிமுகம்: ரைடர்களுக்கு டபுள் ஜாக்பாட்!
ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக்கில் 2 சூப்பரான புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த இந்த வசதிகள் தற்போது வழங்கப்பட்டு இருப்பதால், இந்த மோட்டார்சைக்கிளை ஓட்டும்போது மேலும் மென்மையான மற்றும் மேம்பட்ட அனுபவத்தை பெற முடியும். குறிப்பாக, நகர்ப்புற போக்குவரத்து மற்றும் நீண்ட தூர பயணங்களின்போது இந்த புதிய அப்டேட் அதிக பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புதிய வசதி குறித்த முழு விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
மிட்சைஸ் மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 தொடர்ந்து முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது. ரெட்ரோ ஸ்டைல், சக்திவாய்ந்த எஞ்சின், சுகமான ரைடிங் அனுபவம் ஆகியவற்றால் இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அதிக விற்பனையாகும் 350சிசி பைக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் என அனைத்து தரப்பினரிடமும் இந்த பைக் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிப்பதற்கும், வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் (Assist & Slipper Clutch) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் பயன்கள்?
அசிஸ்ட் க்ளட்ச் என்பது க்ளட்ச் லிவரை அழுத்துவதற்கு தேவையான விசையை குறைக்கும் தொழில்நுட்பமாகும். இதனால் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி க்ளட்ச் பயன்படுத்த வேண்டிய சூழலில் கைகளுக்கு சோர்வு குறையும். நீண்ட நேரம் பைக் ஓட்டும்போதும் ரைடருக்கு அதிக வசதியை வழங்கும்.
ஸ்லிப்பர் க்ளட்ச் என்பது திடீரென அதிக கியரில் இருந்து குறைந்த கியருக்கு மாற்றும்போது பின்புற சக்கரம் லாக் ஆகாமல் அல்லது துள்ளாமல் பாதுகாக்கும் அமைப்பாகும். இதனால் பைக் அதிக கட்டுப்பாட்டுடன் இயங்கும். குறிப்பாக மலைப்பாதைகள், வளைவுகள் மற்றும் வேகமாக கியர் குறைக்க வேண்டிய சூழ்நிலைகளில் இந்த வசதி பாதுகாப்பையும், மென்மையான ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்குகிறது.
இந்த புதிய வசதி காரணமாக கியர் மாற்றும் அனுபவம் மேலும் மென்மையாக மாறுவதுடன், நீண்ட தூர பயணங்களில் ரைடரின் சோர்வும் குறையும்.
மற்றொரு சூப்பர் வசதி:
அத்துடன், இந்த பைக்கில் டைப்-சி யுஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான ரைடர்கள் ஸ்மார்ட்போனில் நேவிகேஷன் பயன்படுத்துவதால், பயணத்தின் போது மொபைல் பேட்டரி விரைவாக குறையும். அந்த பிரச்சினையை தவிர்க்கும் வகையில் இந்த சார்ஜிங் போர்ட் உதவும். நீண்ட தூர பயணங்களின்போது மொபைலை தொடர்ந்து சார்ஜ் செய்து கொண்டு நேவிகேஷனை இடையூறு இல்லாமல் பயன்படுத்த முடியும்.
ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் தொடர்ந்து 349சிசி திறன் கொண்ட ஜே-சீரிஸ் ஏர்கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. மேலும், இந்த எஞ்சின் குறைவான அதிர்வுகளுடன் மென்மையான செயல்பாட்டை வழங்கும் வகையில் ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புற பயணங்கள் மட்டுமின்றி, நீண்ட தூர டூரிங் பயணங்களுக்கும் இது சிறந்த தேர்வாக இருக்கிறது.
இதன் அகலமான மற்றும் சுகமான இருக்கை அமைப்பு நீண்ட நேரம் பயணம் செய்தாலும் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. ட்வின் டவுன்ட்யூப் ஃப்ரேம் அமைப்பு மோசமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் நிலைத்தன்மையுடன் கூடிய ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது.
சஸ்பென்ஷனை பொறுத்தவரை, முன்புறத்தில் 130 மிமீ டிராவல் கொண்ட 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃப்ரோக்குகளும், பின்புறத்தில் 6-ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ட்வின் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளங்கள் நிறைந்த சாலைகளிலும் பயணம் சுகமாக இருக்கும்.
13 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் மற்றும் 195 கிலோ எடையுடன் வரும் இந்த மோட்டார்சைக்கிள், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ரூ.1.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட வேரியண்ட்டிலும் இது கிடைக்கிறது.
இந்த பைக் இந்திய சந்தையில் ஹோண்டா சிபி350, ஜாவா 42, யெஸ்டி ரோட்ஸ்டெர் மற்றும் ட்ரையம்ப் ஸ்பீடு 400 போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக இருந்து வருகிறது. தற்போது அறிமுகமானுள்ள அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் போன்ற புதிய வசதிகள், க்ளாசிக் 350-ன் மதிப்பை மேலும் உயர்த்தும் அம்சமாக பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications