ராயல் என்ஃபீல்டு வாங்கும் பிளானில் இருந்தால் முடிவை மாற்றிடுவீங்க! கிளாசிக் 350-க்கு டிரையம்ப் செக்மேட்!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பொன்னேவில்லே 350 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விற்பனையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக வரும் இந்த புதிய டிரையம்ப் பைக் மிகவும் பவர்ஃபுல்லான 350சிசி என்ஜினை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய பொன்னேவில்லே 350 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இந்தியாவின் 350சிசி பைக்குகள் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக்கின் விற்பனையை எப்படியாவது தன் பக்கம் திருப்பும் முயற்சியாக பல பைக் நிறுவனங்கள் தொடர்ச்சியாக புது, புது 350சிசி பைக்குகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.

அந்த வரிசையில் டிரையம்ப் புதியதாக களமிறக்கும் மோட்டார்சைக்கிள் தான் பொன்னேவில்லே 350 ஆகும். கிளாசிக் 350 பைக்கை காட்டிலும் பவர்ஃபுல்லான என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்படுவதினால் இந்த புதிய டிரையம்ப் பைக்கின் அறிமுகம் மீது கவனம் எழுந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் பைக்குகளிலேயே பவர்ஃபுல்லானதாக பொன்னேவில்லே 350 இருக்கும்.
பொன்னேவில்லே 350 பைக்கின் என்ஜின் எந்த அளவிற்கு சிறந்ததாக இருக்கும் என்றால், நெரிசலான நகர்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ப மென்மையாக இயக்க ஆற்றலை வழங்கும் அதேநேரத்தில் நெடுஞ்சாலை பயணங்களின் போது அதிக ஆற்றலை வழங்கும். இதற்கேற்ப, நன்கு சவுகரியமாக அமர்ந்துக் கொண்டு ஓட்டும் வகையில் இந்த பைக்கின் உடலமைப்பு இருக்கும்.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் அதன் 398சிசி என்ஜினை 349சிசி என்ஜினாக மாற்றியது. 350சிசி-க்கு குறைவான என்ஜினை கொண்ட பைக்குகளுக்கான GST-ஐ மத்திய அரசு குறைத்துக் கொண்டதை அடுத்து இவ்வாறான நடவடிக்கையில் டிரையம்ப் இறங்கியது. இந்த மாற்றத்திற்காக என்ஜினின் ஸ்ட்ரோக்கின் நீளம் குறைக்கப்பட்டது.
இவ்வாறு மாற்றப்பட்ட என்ஜினில் இருந்துதான் பொன்னேவில்லே 350 பைக்கிற்கான புதிய 350சிசி என்ஜின் பெறப்படுகிறது. 398சிசி-இல் இருந்து 349சிசி-க்கு மாற்றப்பட்ட என்ஜினின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக புதிய 350சிசி என்ஜின் இருக்கும். அதாவது, முடிந்தவரையில் எல்லா விதங்களிலும் ட்யூன் செய்யப்பட்டு, மென்மையாக ஆற்றலை பைக்கிற்கு வழங்கும்.
இருப்பினும், என்ஜின் சிஸ்டத்தில் ஒரேயொரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த வகையில், புதிய டிரையம்ப் பொன்னேவில்லே 350 பைக்கில் வழங்கப்பட உள்ள 349சிசி சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 29 பிஎஸ்-இல் இருந்து 37 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
என்ஜின் வழங்கும் அதிகப்பட்ச டார்க் திறன் ஆனது 32 என்.எம் வரையில் இருக்கலாம். என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படும். அதுவே, ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகளில் பொருத்தப்படும் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 20 பிஎஸ் மற்றும் 27 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை மட்டுமே வழங்கக் கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதியதாக அறிமுகம் செய்யப்படும் அனைத்து 350சிசி பைக்குகளும் ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகளை தான் போட்டியாக கருதுகின்றன. இருப்பினும், அந்த வரிசையில் ஒன்றாக, சாதாரணமாக புதிய டிரையம்ப் பொன்னேவில்லே 350 பைக்கை கருத முடியாது. ஏனெனில், பவர்ஃபுல்லான என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்படுவது இதன் மிக பெரிய பலமாக இருக்கும். இருப்பினும், இந்த பைக்கின் விலை எவ்வளவாக நிர்ணயிக்கப்படும் என்பதை பொறுத்தே இது கிளாசிக் 350 பைக்கிற்கு எந்த அளவிற்கு போட்டியாக இருக்கும் என்பதை கூற முடியும்.


Click it and Unblock the Notifications