மெக்ஸிவை அலறவிடப் போகும் இந்திய நிறுவனம்.. இனி அங்கயும் நம்ம தான் டாப்பு
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவது நமக்குத் தெரியும் தான். இந்தியாவிற்கு வெளியே சர்வதேச அளவிலும் முன்பை விட ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அதிகம் விற்பனையாகி வருகின்றன. கடந்த மார்ச் 31ம் தேதியன்று நிறைவடைந்த 2026ம் நிதியாண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சர்வதேச விற்பனை அளவு 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் தான் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யவும் ராயல் என்ஃபீல்டு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக மெக்ஸிகோவில் புதிய அசெம்பிளி தொழிற்சாலை ஒன்ற அமைப்பது குறித்து ராயல் என்ஃபீல்டு பரிசீலித்து வருகிறது. இதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்கியிருக்கிறது அந்நிறுவனம்.

மெக்ஸிகோவில் இது வரை நேரடியாக இறக்குமதி செய்தே பைக்குகளை விற்பனை செய்து வந்துள்ளது ராயல் என்ஃபீல்டு. இந்நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பைக்குகள் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக அந்நிறுவனம் உயர்த்தியிருக்கிறது. இந்த காரணத்தினாலேயே மெக்ஸிகோவில் புதிய அசெம்பிளி தொழிற்சாலை ஒன்றை அமைப்பது குறித்த பரிசீலனையில் இறங்கியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
இந்தியாவைக் கடந்து சர்வதேச அளவில் பிரேசில், கொலம்பியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஏழு ராயல் என்ஃபீல்டு அசெம்பிளி தொழிற்சலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு சந்தையில் தேவை இருக்கம் பட்சத்தில் அங்கே அசம்பிளி தொழிற்சாலைகளை அமைத்து வருகிறது இந்த பைக் தயாரிப்பு நிறுவனம்.

மெக்ஸிகோவைத் தொடர்ந்து பிரேசிலிலும் இரண்டாவது அசெம்பிளி தொழிற்சாலையை அமைப்பது குறித்தும் ராயல் என்ஃபீல்டு பரிசீலனை செய்து வருகிறதாம். ஏற்கனவே பிரேசிலில் ஒரு அசெம்பிள் தொழிற்சாலையை மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் கூட்டணி அமைத்து செயல்படுத்தி வருகிறது ராயல் என்ஃபீல்டு. தற்போது அதனைத் தொடர்ந்து பிரேசிலில் சொந்தமாகவே புதிய அசெம்பிளி தொழிற்சாலயை அமைப்பது குறித்து அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசில் தான் ராயல் என்ஃபீல்டு அதிக பைக்குகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையாக இருந்து வருகிறது. கடந்தாண்டு பிரேசிலில் ராயல் என்ஃபீல்டின் விற்பனை 71 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. இந்தியாவிற்கு வெளியே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு வேகமாக வளர்ந்து வரும் ஒரு சந்தையாக பிரேசில் இருக்கிறது. அதனாலேயே அந்நாட்டில் இரண்டாவது அசெம்பிளி தொழிற்சாலையை அமைப்பதில் அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.
கடந்தாண்டு வெளிநாடுகளில் மட்டும் 1.20 லட்சம் பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருக்கிறது. மேலே கூறியது போல கடந்த நிதியாண்டில் வெளிநாட்டு விற்பனை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு விற்பனை மூலம் மட்டுமே 3,288 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறது அந்நிறுவனம். இந்தியாவில் 350 சிசி பைக்குகளுக்கே அதிக டிமாண்டு இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பைக்குகளுக்கே அதிக டிமாண்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யும் நிலையில், உள்நாட்டில் பைக் மாடல்களையும் இந்தாண்டு வலுவாக விரிவாக்கம் செய்ய ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முடிவிற்குள் இந்தியாவில் ஐந்து புதிய பைக்குகளின் வெளியீட்டை அல்லது அறிமுகத்தை நாம் பார்க்கலாம். அத்துடன் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 13 பைக் மாடல்களையும் ஒவ்வொன்றாக அப்டேட் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டும் வாங்கும் ஒரு பைக் நிறுவனமாக இருந்து இன்று அனைத்துத் தரப்பினரும் வாங்குதற்கு ஏற்ப மாறியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. சிறிய பைக்குகளில் காட்டும் அதே வேகத்தை 650 சிசி பைக்குகளின் விரிவாக்கத்திலும் ராயல் என்ஃபீல்டு காட்டி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் எதிர்பாராத அளவிற்கு ராயல் என்ஃபீல்டின் விற்பனை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications