சர்ப்ரைஸ்... ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 750 மாடலும் அறிமுகம்: முக்கியத் தகவல்கள்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான கான்டினென்டல் ஜிடி வரிசையில் 750சிசி மாடலை இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் EICMA 2026 மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் கான்டினென்டல் ஜிடி 650க்கு அடுத்த கட்டத்திற்கான மாடலாக புதிய ஜிடி 750 உருவாக்கப்பட்டுள்ளது.
கூடுதல் திறன் கொண்ட எஞ்சின், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பிரீமியம் கஃபே ரேசர் பைக் பிரிவில் புதிய தேர்வாக இது அறிமுகமாகியுள்ளது. இதுவரை இந்த மோட்டார்சைக்கிள் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், சர்ப்ரைஸாக மிலன் கண்காட்சியின் மூலமாக பொதுபார்வைக்கு கொண்டுவந்துள்ளது ராயல் என்ஃபீல்டு.

புதிய எஞ்சின்
ஹிமாலயன் 750 மாடலில் இருக்கும் அதே 743சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு, பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 650சிசி எஞ்சினுடன் ஒப்பிடும்போது அதிக செயல்திறனை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எஞ்சினின் அதிகாரப்பூர்வ பவர் மற்றும் டார்க் விபரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மூலம் நெடுஞ்சாலை பயணங்களிலும் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது.
ஹிமாலயன் 750 பைக்கில் எலக்ட்ரானிக் த்ராட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், கான்டினென்டல் ஜிடி 750 பைக்கில் கேபிள் மூலம் இயங்கும் த்ராட்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தனித்தனி சைலென்சர் குழாய்கள் இடம்பெற்றுள்ளன. இது பைக்கின் பாரம்பரிய இரட்டை சிலிண்டர் ஒலியை மேலும் சிறப்பாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இரண்டு மாடல்கள்
புதிய கான்டினென்டல் ஜிடி 750 பைக் இரண்டு விதமான வடிவமைப்புகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஃபேரிங் பொருத்தப்பட்ட மாடல் அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் பாடி பேனல்கள் மற்றும் ரேஸ் பைக்குகளை நினைவுபடுத்தும் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. இது வேகமாக பயணிப்பதற்கு ஏற்ற தோற்றத்தை வழங்குகிறது.
ஃபேரிங் இல்லாத மாடல் வழக்கமான கான்டினென்டல் ஜிடி பைக்கின் அடையாளத்தைத் தக்க வைத்துள்ளது. இதில் ஹேண்டில்பார் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், வழக்கமான கஃபே ரேசர் தோற்றத்தை விரும்புபவர்களுக்கும், சற்று வசதியான பயண நிலையை எதிர்பார்ப்பவர்களுக்கும் வெவ்வேறு தேர்வுகளாக இருக்கும்.
நவீன வசதிகள்
இந்த பைக்கில் ஹைபிரிட் ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாரம்பரிய அனலாக் மீட்டர்களுடன் டிஜிட்டல் திரையும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேகம் உள்ளிட்ட முக்கியமான பயணத் தகவல்களை எளிதாகப் பார்க்க முடியும். பைக்கின் பாரம்பரிய வடிவமைப்பை மாற்றாமல் நவீன வசதிகளை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. இதனால் பழமையான மோட்டார் சைக்கிள் தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் புதிய தொழில்நுட்பங்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கும் இது ஈர்ப்பை ஏற்படுத்தும்.
பிரேக்கிங் மற்றும் சஸ்பென்ஷன்
புதிய கான்டினென்டல் ஜிடி 750 பைக்கில் முன்புறத்தில் இரண்டு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புறத்தில் ஒரு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் பாதுகாப்பு வசதியும் இடம்பெற்றுள்ளது. அதிக திறன் கொண்ட பைக்கிற்கு ஏற்றவாறு பிரேக்கிங் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனைப் பொறுத்தவரையில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சாலையின் தன்மைக்கு ஏற்ப சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அறிமுகம்
இந்த புதிய பைக் Red Line, TT Blue மற்றும் Master Clean ஆகிய மூன்று நிறங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நிறங்களுக்கு ஏற்ப அலாய் வீல்கள் மற்றும் ஸ்போக் வீல்கள் என வெவ்வேறு அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் கான்டினென்டல் ஜிடி 650க்கு மேலான விலைப் பிரிவில் புதிய ஜிடி 750 அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த மாத இறுதியில் கோவாவில் நடைபெற உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக இந்த பைக் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


