புதிய அத்தியாயம் தொடங்குகிறது! ராயல் என்பீல்டின் முதல் எலெக்ட்ரிக் பைக் அடிமாட்டு விலையில் நாளை அறிமுகம்!
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனமும் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கிற்கு ஃபிளையிங் ஃப்ளா சி6 (Royal Enfield Flying Flea C6) என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற EICMA வாகன திருவிழாவில் ராயல் என்பீல்டு ஃப்ளையிங் ஃப்ளா சி6 காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் பைக்கை தயாரிப்பு நிலைக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தும் பணிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள சூழலில், ராயல் என்பீல்டு ஃப்ளையிங் ஃப்ளா சி6 தற்போது விற்பனைக்கு தயாராகி விட்டது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ராயல் என்பீல்டு ஃப்ளையிங் ஃப்ளா சி6 எலெக்ட்ரிக் பைக் நாளை (ஏப்ரல் 10) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ராயல் என்பீல்டு ஃப்ளையிங் ஃப்ளா சி6 எலெக்ட்ரிக் பைக்கில் 3.91 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 154 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற ரேஞ்ச் (Range) ஆக இருக்கும்.

அதே நேரத்தில் ராயல் என்பீல்டு ஃப்ளையிங் ஃப்ளா சி6 எலெக்ட்ரிக் பைக்கில் 15.4 kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு (Top Speed) 115 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட இந்த எலெக்ட்ரிக் பைக் 3.7 வினாடிகளை எடுத்து கொள்ளும்.
மறுபக்கம் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை வெறும் 65 நிமிடங்களில் 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். ராயல் என்பீல்டு முதல் எலெக்ட்ரிக் பைக்கான இதில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சம் இருக்காது. வசதிகளை பொறுத்தவரையில், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல் மற்றும் முழு எல்இடி ஹெட்லைட்கள் போன்றவை எல்லாம் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும்.
அத்துடன் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் எடை வெறும் 124 கிலோ மட்டுமே. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் எடை குறைவான பைக் என்ற பெருமையும் இதற்கு உண்டு. ராயல் என்பீல்டு ஃப்ளையிங் ஃப்ளா சி6 எலெக்ட்ரிக் பைக்கின் ஆரம்ப விலை சுமார் 2.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.
இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஒரு வேளை இதை விட அதிக விலையை கூட ராயல் என்பீல்டு நிறுவனம் நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் இதை விட குறைவான விலையை நிர்ணயம் செய்து, ராயல் என்பீல்டு நிறுவனம் நம்மை ஆச்சரியப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுத்து விட முடியாது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் நாளை தொடங்குகிறது. ஃப்ளையிங் ஃப்ளா சி6 எலெக்ட்ரிக் பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், ராயல் என்பீல்டு நிறுவனம் எதிர்காலத்தில் இன்னும் அதிக எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என நாம் நம்பலாம்.


Click it and Unblock the Notifications








