6 லட்சம் ரூபாய் விலையில் வெளியான பைக்.. அப்படி இந்த பைக்கில் என்ன ஸ்பெஷல்?
ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது புதிய கோவான் கிளாஸிக் 350 (Goan Classic 350) பைக்கை மலேசியாவில் தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பல்வேறு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மலேசியாவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அந்த வரிசையில் 2026 கோவான் கிளாஸிக் 350 பைக்கும் இணைந்திருக்கிறது. 2024ல் தான் இந்த பாபர் வகை பைக்கை இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்கில் இருந்து பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் தான் மலேசியாவிலும் இந்த பைக் விற்பனை செய்யப்படவுள்ளது. கோவான் கிளாஸிக் பைக்கைப் பார்க்கும் போது கிளாஸிக் 350-யின் வைப் வரும். கிளாஸிக் 350 பைக்கை அடிப்படையாகக் கொண்டு சின்னச் சின்ன மாற்றங்களுடனேயே கோவன் கிளாஸிக் பைக் உருவாக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் இந்த பைக்கை 25,200 மலேசியன் ரிங்கிட் என்ற விலையில், அதாவது இந்திய மதிப்பிற்கு சுமார் 6.09 லட்சம் ரூபாய் என்ற விலையில் அந்நாட்டில் வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. அதிகபட்சமாக 25,500 மலேசியன் ரிங்கிட் (இந்திய மதிப்பிற்கு 6.19 லட்சம் ரூபாய்) என்ற விலையில் இந்த பைக் மலேசியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்தியாவில் இந்த கோவான் கிளாஸிக் 350 பைக்கானது 2.23 லட்சம் ரூபாய் முதல் 2.26 லட்சம் ரூபாய் வரையிலான விலையில், பர்பிள் ஹேஸ், ஷேக் பிளாக், ட்ரிப் டீல் மற்றும் ரேவ் ரெட் ஆகிய நான்கு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மலேசியாவிலும் இதே நிறத் தேர்வுகளிலேயே கோவான் கிளாஸிக் பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கிளாஸிக் 350 பைக்கிலேயே ஃபெண்டர்களை வெட்டி, ஏப் ஸ்டைல் ஹேண்டில்பாரைக் கொடுத்து, குறைவான உயரத்தில் சீட்டைக் கொடுத்து பாபர் வரை பைக்காக கோவான் கிளாஸிக் 350-யை ராயல் என்ஃபீல்டு உருவாக்கியிருக்கிறது. சைடில் இருந்து பார்க்கும் போது வெள்ளை நிற வால் கொண்ட டியூப்லெஸ் டயர்களை இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். இதுவும் இந்த பைக்கின் தனித்துவமான டிசைன் அம்சங்களில் ஒன்று.
ராயல் என்ஃபீல்டின் லைன்-அப்பில் முழுமையான ரெட்ரோ ஃபீலைக் கொடுக்கக்கூடிய பைக்குகளில் ஒன்றாக இந்த கோவான் கிளாஸிக் 350 இருக்கிறது. அந்த ரெட்ரோ ஃபீலை இன்னும் அதிகமாகக் கொடுக்கும் வகையிலேயே பைக்கின் பெயிண்ட் ஸ்கீமும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த டிசைன் அம்சங்களைத் தவிர இந்த பைக்கில் மெக்கானிக்கலாக வேறு எந்த மாற்றமும் இருக்காது.
ராயல் என்ஃபீல்டின் மற்ற 350 சிசி பைக்குகளில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு இன்ஜின் தான் இந்த கோவான் கிளாஸிக் 350 பைக்கிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 20.2 hp பவர் மற்றும் 27 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
முன்பக்கம் 19 இன்ச் வீலுடன், டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் சிஸ்டமும், பின்பக்கம் 16 இன்ச் வீலுடன், ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் சிஸ்டமுமே இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரேக்கிங்கிற்காக இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகளுடன், டூயல் சேனல் ABS வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து விளக்குகளும் LED ஆகக் கொடுக்கப்பட்டிருப்பதுடன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ட்ரிப்பர் நேவிகேஷன் பாடு மற்றும் USB டைப்-C சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமான பைக் வாங்க போரடிக்கிறது என்பவர்கள் இந்த கோவான் கிளாஸிக் 350 பைக்கை முயற்சி செய்யலாம். வழக்கமாக கஸ்டம் மேடு பைக்குகளை நாம் பார்த்திருப்போம். அப்படி கஸ்டம் மேடு பைக்கை ஃபேக்டரியிலேயே உற்பத்தி செய்யப்படும் ஒன்றாக இந்த கோவான் கிளாஸிக் 350 இருக்கிறது.


Click it and Unblock the Notifications