செப்டம்பர் 4ல் அறிமுகமாகிறது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 பைக்!
அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் பிரியர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஹிமாலயன் பைக்கின் புதிய 440 மாடல் வரும் செப்டம்பர் 4ந் தேதி அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பழைய ஹிமாலயன் டிசைனை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மாடல் வர இருப்பதால் ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் மத்தியில் பேராவலை எழுப்பி உள்ளது.
அட்வென்ச்சர் ரக பயன்பாட்டு மோட்டார்சைக்கிளை விரும்புவோருக்கு ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 மிகச் சிறந்த தேர்வாக இருந்தது. அதனை முற்றிலுமாக வேறுபட்ட டிசைன் மற்றும் நவீன அம்சங்களுடன் புதிய தலைமுறை மாடலாக மாற்றி 450 எஞ்சினுடன் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

(Representative Image)
இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேநேரத்தில், டிசைன், ஓட்டுதல் அனுபவம் உள்ளிட்ட நடைமுறை அம்சங்களில் பெயர் பெற்ற பழைய ஹிமாலயன் 411 கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் சந்தையிலிருந்து விலக்கப்பட்டது ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த ஏமாற்றத்தை போக்குவதற்காக மீண்டும் பழைய ஹிமாலயன் 411 அடிப்படையில் நவீன அம்சங்களை சேர்த்து ஹிமாலயன் 440 மாடலை ராயல் என்ஃபீல்டு உருவாக்கியது. இந்த புதிய மாடலை வரும் செப்டம்பர் 4ந் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 10ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு லே பகுதியில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பேஸ்கேம்ப் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் இந்த புதிய ஹிமாலயன் 440 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
தற்போது விற்பனையில் உள்ள ஹிமாலயன் 450 மாடலைவிட விலை குறைவான தேர்வாகவும், எல்லோருக்கும் பிடித்தமான பழைய ஹிமாலயன் 411 டிசைன் அம்சங்களுடன் வர இருக்கிறது. மேலும், இந்த புதிய மாடல் ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 440 அடிப்படையிலான சேஸீ, எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 443சிசி ஏர்-ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எல்எஸ்440 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 25.4பிஎச்பி பவரையும், 34என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது. இந்த பைக் சிறப்பான டார்க்கை வெளிப்படுத்துவதுடன் நீண்ட தூர பயணங்கள் மற்றும் கரடுமுரடான சாலை நிலைகளிலும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 440 மோட்டார்சைக்கிளில் 19 அங்குல முன்சக்கரமும், 17 அங்குல பின்சக்கரமும் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த புதிய மாடலில் முன்புறத்தில் 21 அங்குல சக்கரம் பயன்படுத்தப்படும். வயர் ஸ்போக் ரிம் கொண்ட ட்யூப் டயர் கொடுக்கப்படும் என்றும் தெரிகிறது. அதேபோன்று, முன்புறத்தில் 200 மிமீ டிராவல் கொண்ட ஃபோர்க்குகளும் பொருத்தப்பட்டு இருக்கும்.
தற்போது விற்பனையில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளில் இருக்கும் டிஎஃப்டி டிஸ்ப்ளே, டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஸ்லிப்பர் க்ளட்ச் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போது ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 440 மோட்டார்சைக்கிள் 2.25 லட்சத்திலிருந்தும், ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிள் ரூ.3.10 லட்சத்திலிருந்து கிடைக்கிறது. இதற்கு இடையிலான விலையில், புதிய ஹிமாலயன் 440 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications