ரூ.2.29 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 பைக் அறிமுகம்... பழைய டிசைனில் புதிய எஞ்சின் தேர்வு!!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான ஹிமாலயன் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் புதிய ஹிமாலயன் 440 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் ஆரம்ப தலைமுறையின் எளிமையான வடிவமைப்பு மற்றும் நடைமுறை பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. லடாக்கில் நடைபெற்ற முதல் ஹிமாலயன் பேஸ்கேம்ப் ( Himalayan Basecamp) என்ற நிகழ்ச்சியில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமானது.
புதிய ஹிமாலயன் 440 பைக்கின் முக்கிய மாற்றமாக எஞ்சினை குறிப்பிடலாம். இதில் சிங்கிள் சிலிண்டருடன் கூடிய 443cc லாங் ஸ்ட்ரோக் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 25.4 பிஎச்பி பவரையும், 34 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருப்பதால், நகரத்தில் குறைந்த வேகத்தில் கையாள்வதற்கும் நெடுஞ்சாலைகளில் நீண்ட நேரம் பயணிப்பதற்கும் ஏற்ற வகையில் கியர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆஃப் ரோடு பயன்பாட்டை கருத்தில் கொண்டு வலிமையான ஸ்பிளிட்-கிரேடில் வகை ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 200 மிமீ வரை டிராவல் கொண்ட 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் 180mm டிராவலுடனும் கூடிய மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. இதில், முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல ஸ்போக்குகளுடன் கூடிய சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால் சீரற்ற சாலைகள் உள்ளிட்ட கடினமான பாதைகளில் செல்வதற்கு ஏதுவான அம்சங்களை பெற்றுள்ளது.
தினசரி பயன்பாட்டிலும் வசதியை வழங்கும் வகையில் 800மிமீ இருக்கை உயரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 15 லிட்டர் எரிபொருள் டேங்க் நீண்ட தூர பயணங்களுக்கு உதவும். இந்த மோட்டார்சைக்கிளின் கெர்ப் எடை 199 கிலோ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேக்கிங் அமைப்பில் முன்புறம் 300மிமீ டிஸ்க்கும் மற்றும் இரண்டு பிஸ்டன்களுடன் ஃப்ளோட்டிங் காலிபரும் உள்ளன. பின்புறத்தில் பின்புறம் 240மிமீ டிஸ்க்கும் சிங்கிள் பிஸ்டன் காலிபரும் வழங்கப்பட்டுள்ளன. இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. புதிய எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிரிப்பர் நேவிகேஷன் மற்றும் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதிகளும் உள்ளன.
ஹிமாலயன் 440 மோட்டார்சைக்கிளை நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்காக அட்வென்ச்சர் பயனீர பெட்டிகள், டாப் பாக்ஸ், எஞ்சின் கார்டுகள், ஹேண்ட் கார்டுகள், டூரிங் சீட்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்சஸரீகளையும் ராயல் என்ஃபீல்டு வழங்குகிறது.

கருப்பு (Sela Black), பழுப்பு (Mustang Brown) மற்றும் வெள்ளை (Nelong White) என மூன்று நிறங்களில் கிடைக்கும். புதிய ஹிமாலயன் 440 மோட்டார்சைக்கிளுக்கு ஆரம்ப விலையாக ரூ.2.29 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இன்று முதல் ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களிலும், அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் முன்பதிவு தொடங்கி உள்ளது. முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையான ஹிமாலயன் 440 மோட்டார்சைக்கிள்களில் 10 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக பிரத்யேக பேட்ஜ் இடம்பெறும்.
இமயமலையில் உள்ள லடாக் உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமான பைக் சாகசப் பிரியர்கள் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அவர்கள் பெரும்பாலும் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 உள்ளிட்ட மாடல்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், அந்த பைக்குகளின் கையாளுமை சில சவாலானப் பிரதேசங்களுக்கு பிரச்னையாக இருந்தது.
இதனை மனதில் வைத்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எளிதான கையாளுமை, அதிக திறன் கொண்ட மாடலாக ஹிமாலயன் 411 மோட்டார்சைக்கிளை 10 ஆண்டுகளுக்கு அறிமுகம் செய்தது. இந்த மாடல் சாகசப் பயணம் செல்லும் பைக் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்ததால், அதிக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு புதிய தலைமுறை ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஆனால், ஹிமாலயன் 411 மோட்டார்சைக்கிளில் இருந்த எளிதான கையாளுமை, பராமரிப்புப் போன்ற விஷயங்கள் புதிய தலைமுறை 450 மாடலில் பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.
இதனால், பலரும் பழைய மாடலை தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வர வலியுறுத்தி வந்தனர். அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், ஸ்க்ராம் 440 மோட்டார்சைக்கில் பயன்படுத்தும் எஞ்சினுடன் இந்த புதிய மாடலை பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள், வசதிகளுடன் ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications



